Friday, 4 May 2012

மூழ்கியவனின் கதை [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-3]


முத்துக்களின் கதை அல்ல, மூழ்கியவனின் கதை

காட்டைப் போல கடலும் அரிய வகை உயிரினங்களைக் கொண்டது. காட்டில் அரியவகை மரங்களும், மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருட்களும், லட்சக்கணக்கான ஆண்டுகளாக மட்கி உருவான கனிமங்களும் இருப்பது போன்று கோடிக்கணக்கான ரகசியங்களும் அரிய வகை கனிமங்களும் கொட்டிக் கிடப்பதுதான் கடல். உயிருள்ள உப்பு நீராக அடிவானம் தொட்டு விரிந்து கிடக்கும் கடலின் கண்டுபிடிக்க முடியாத அதன் ரகசியங்களிலிருந்து சிப்பியின் வயிற்றில்தான் முத்து இருக்கிறது என்பதை எவன் கண்டறிந்தான்?

உலக வணிகத்தில் பெரும் போட்டியையும், ஆக்ரமிப்பையும், யவன தேசத்தின் அழகிகளையும் பாண்டியர்களின் அந்தப்புரங்களுக்கு அழைத்து வரும் வல்லமையும் கொண்டதுமான இந்த முத்துக்களை முதன் முதலில் கடலில் மூழ்கி எடுத்தவன் எவன்?

இலங்கையை வென்று தன் பேரரசை நிறுவிய சோழர்கள் தன்னைப் புகழ்ந்த கவிஞர்களுக்கும், காதலிகளுக்கும், கோவில்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்களே அந்த முத்துக்களின் உரிமையாளர்கள் யார்?

உங்கள் கழுத்துக்களை அலங்கரிக்கும் முத்தின் அழகிற்குப் பின்னே கடலில் மூழ்கி மூர்ச்சையாகிப் போன மீனவனின் உயிரின் பற்றி நீங்கள் அறிவீர்களா?அந்தக் கதை வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது. நினைவுக்கு எட்டாத, நாம் கண்டறியாத காலத்திற்கு முந்தையது. முத்துப்பரல்களா? மாணிக்கப்பரல்களா? என்ற சர்ச்சையில் கோவலனின் உயிர், காவு வாங்கப்பட்டதிலிருந்து அறத்திற்கும் நீதிக்குமான ஆட்சிமுறை பற்றி நுட்பமாக கதை சொன்ன இளங்கோவடிகள் அந்த முத்துக்களை மூழ்கியெடுத்தவன் பற்றி எதையும் எழுத வில்லை.

இது முத்துக்களின் கதையல்ல அதன் செல்வாக்கின் பின்னே முத்துக்களுக்காக கடலில் மூழ்கியவர்களின் கதை.


தென்னிந்தியாவின் ஆதி மனிதச் சமூகங்களுள் ஒன்றாக கடலோரங்களில் வாழ்ந்த பரவர்கள் தொல் காலம் தொட்டே முத்துக்குளித்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். நினைவுக்கு எட்டாக் காலத்தில் இருந்தே பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக தமிழகக் கடலோரம், இலங்கையின் மன்னார், மற்றும் மலபார் கடலோரங்களில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றி(Dolphin) பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரிய மீனவர்கள்.


ஆனால் பாரம்பரிய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.


செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே, முத்து பேசப்பட்டது, மூழ்கியவன் மூச்சுத் திணறியே மரித்துப் போனான். அந்த சுரண்டலில் விளைவுதான் இன்று தென் தமிழக கரையோரங்களில் சுவாசிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறான்.

முத்தின் கதை.

தென்னிந்தியாவைத் தவிர இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவாலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற இடங்களாக தமிழக கடலோரமும் இலங்கையின் மன்னார் கடலோரமும் இருந்தன என்பது அறியக் கிடைக்கிற செய்தி.

சிப்பியின் வயிற்றில் விலைமதிப்பற்ற கவர்ச்சிகரமான முத்து ஒன்று இருக்கிறது என்பதை யார் கண்டறிந்திருப்பார்கள். பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் பிஷப்பும், எம். அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள். முத்தின் தோற்றம் பற்றியோ அது எப்படி கண்டெடுக்கப்பட்டது என்பது பற்றியோ உறுதியான தகவல்கள் எதுவும் இன்று இல்லை. தொன்மையில் மிக மிக முன்னேறிய நாகரீகச் சமூகங்களாக வாழ்ந்த கரையோரச் சமூகங்கள் பற்றிய பதிவு எப்படி இல்லையோ அப்படித்தான் முத்து எடுத்தவன் பற்றிய பதிவும் இல்லை,

முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இந்த பகுதிகள் எப்போதும் ஆக்ரமிப்புகளாலும் போராலும் சூழப்பட்ட பதட்டமான இடமாகவே வரலாற்றுக் காலம் தொட்டு இருந்து வந்துள்ள நிலையில், ஒரு சமூகம் தொடர்பாக அதை ஆள்வோர் அல்லது கட்டுப்படுத்தி வைத்திருப்போர் எழுதிய ஆவணங்களை இன்னொரு ஆக்ரமிப்பாளர்கள் அழிப்பதுமே நடந்திருக்கிறது. போர்த்துக்கீசியரின் ஆவணங்களை டச்சுக்காரர்களும், டச்சுக்காரர்களின் ஆவணங்களை ஆங்கிலேயரும் அழித்தது போல, இயேசு சபையின் ஆவணங்களை சீர்திருத்த கிறிஸ்தவமும், சீர்திருத்த கிறிஸ்தவத்தின் ஆவணங்களை ரோமன் கத்தோலிக்கமும் அழித்தது போல பழைய ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் விளைவாய் உள்ளூரில் ஏதும் வரலாற்றுப் பதிவுகள் இல்லை. ஆனால் தென் தமிழக கடற்கரையோரங்களில் நிலை பெற்று இருக்காமல் வர்த்தகத்திற்காக, தூதர்களாக, பயணிகளாக, வந்து போனவர்களின் முத்து பற்றி எழுதிய குறிப்புகள் உலகங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே முத்தெடுக்கும் தொழிலில் பரதவர்கள் ஈடுபட்டிருந்தாலும் முத்துக்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பதற்கான குறிப்புகள் கிபி- 1200 களிலிருந்தே கிடைக்கின்றன.  கிறிஸ்துவுக்கு முன்பு மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிசும், கிறிஸ்துவுக்கு பின்பு கிபி 140 -ல் இந்தியா பற்றிய குறிப்புகளை எழுதிய ஏர்ரியனும் (Arrian) முத்துக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர். நாம் அறிந்து கொள்ளாத பல விஷயங்களை அவர்கள் கூறுகிறார்கள். முத்துக்கள் பற்றிய அந்தக் குறிப்பில்,
தேனீக்களுக்கு எப்படி ராணீ தேனீ உண்டோ அப்படி முத்துக்களுக்கும் அரசன், அல்லது அரசி உண்டு. சிப்பிகளும் தேனீக்களைப் போல கூட்டமாக வசிக்கின்றன. அரசனைப் பிடிக்கிற அளவுக்கு நல்வாய்ப்புக் கிடைத்தால், அந்த மொத்தக் கூட்டத்தையும் வலையில் பிடித்து விடுவார்கள், அதே வேளை, அரசன் தப்பித்தால், மற்ற சிப்பிகளைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பே இல்லை - என்கிறது அந்தக் குறிப்பு. (Mr. Crindle, "Ancient India as described by Megasthenes and Arrian") - (தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு - எஸ். அருணாச்சலம்)

மெகஸ்தனிசுக்குப் பிந்தைய பிளினி தனது இயற்கை வரலாற்றில் சிப்பியின் வயிற்றில் முத்து எப்படி உருவாகிறது என்று ஒரு குறிப்பை எழுதியுள்ளார். இந்தியா பற்றிய குறிப்புகளில் சிப்பிகள் எப்படி கூட்டமாக வாழ்கிறது, சிப்பி எப்படி உருவாகியிருக்கிறது என்பது குறித்து எழுதியிருக்கிறார். ஆனால் சிப்பிக்குள்தான் முத்து இருக்கிறது. அதை இந்த நூற்றாண்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் முத்து தொடர்பாக மிக நீண்ட தரமான ஆய்வொன்றை மேற்கொண்ட எஸ்.அருணாச்சலம் மரபுவழியாக ஆதி காலம் தொட்டே சிப்பிகள் தமிழக கடலோரத்தில் தோன்றி சிப்பியிலிருந்து முத்து கண்டெடுக்கப்பட்டு  வணிகத்தோடு தொடர்பிலிருந்த உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்று கணிக்கிறார். ( தமிழக கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு - எஸ்.அருணாச்சலம்)

கொற்கைத் துறைமுகம்.

கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மெகஸ்தனிசும், கிபி 60 பதுகளில் எழுதப்பட்டதாக கூறப்படும் பெரிப்புளூஸ் நூலிலும், பிளினியின் (கிபி- 70)  இயற்கை வரலாற்றிலும், புவியியல் அறிஞரான தாலமியின் (கிபி-130) குறிப்புகளிலும் பின்னர் வெனிஸ் பயணியான மார்கோபோலாவாலும் (1270-1300) சீனத்தில் எழுதப்பட்ட ‘சுஃபான்சி’ நூலின் ஆசிரியர் சௌஜூகுவா (chujukua) வாலும், பின்னர் ஃப்ரையர் ஜோர்டன்னஸ் ( கி.பி -1330) (Friar Jordannus) ஆகியோராலும் எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகள் முத்து பற்றியும் கரையோரம் பற்றியும் உள்ளது. இது போக ஏராளமான வெளிநாட்டு பயணிகளும், மாலுமிகளும், இயேசுசபை துறவிகளும் வீரிவான குறிப்புகளை எழுதியுள்ளனர். ஆனால் அவை எதுவுமே நம்மிடம் இல்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தந்த நாட்டு ஆவணக்காப்பங்களிலும் லிஸ்பனில் உள்ள கிற்ஸ்தவ வரலாற்றுச் சுவடிக் காப்பங்களிலும் இந்த குறிப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

கடலோரங்களுக்கு அப்பால் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முத்துக்குளித்தலின் சந்தை தலை நகராக விளங்கிய கொற்கை பற்றியும் குறிப்புகள் உள்ளன. பெரிப்ளூஸ், பிளினி, தாலமி ஆகியோர் முத்துக் குளித்தலின் சந்தை என்று கோல்கிக் வளைகுடாவைக் காட்டுகிறார்கள். கோல்கிக் என்று அவர்கள் கூறுவது கொற்கைக் குடாவை .பரவலாக கொற்கைக்குடாவிலும் இலங்கை கரையோரங்களிலுமே முத்துக்குளித்தல் நடைபெற்றது.

பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது.

கீழைக்கடலோரமான தமிழக கடலோரத்தில் முத்துக்கள் கிடைத்த இடங்களுள் ஏற்றுமதிக்கும் சந்தைக்குமான ஒரு முக்கிய நகரமாக கொற்கை விளங்கியதாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நில நூல் அறிஞரான தாலமி கொற்கையை கொல்கோய் (kolknoi) என்றும் பெரிப்ளூஸ் கோல்ச்சி (colchi) என்றும் அழைக்கிறார்கள். இந்த இருவராலும் அழைக்கப்பட்டது தாமிரபரணி கடலில் கலக்கும் முகத்துவராத்தில் அமைந்து பின்னர் தாமிரபரணி வண்டல் மண்ணால் தன் பண்பை இழந்த பண்டை துறைமுக நகரான கொற்கையைத்தான் என்பதை கால்டுவெல் தன் திருநெல்வேலிச் சரித்திரம் நூலில் கூறுகிறார்.

கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் முற்காலத்துப் புத்த மதத்தினரால் இன்றைய தாமிரபரணி தம்பரன்னி (Tambapanni) என்று வழங்கப்பட்டதாகவும் மகா அலெக்ஸ்சாண்டரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவை அடுத்து பெரியதொரு தீவு உள்ளதென்பதும் அதன் பெயர் தப்ராபனி (Taprobane) என்றும் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லும் கால்டுவெல்,  புத்தர்களின் தம்பரன்னிதான் கிரேக்கர்களால் கொச்சையாக தப்ரானி என்று அழைத்திருக்கிறார்கள் என்கிறார். இன்று சிறிலங்கா என்று அழைக்கப்படும் இலங்கைத் தீவு பண்டையில் லங்கா, சிகாளம், சிலாம், சிலந்திப், செரன்திப், சீலன், சிலான், சிலோன், என்று இன்றைய சிறிலங்காவாக மருவி வந்திருந்தாலும், பண்டையில் அது தாம்பாபன்னி அல்லது தாம்ரபரணி என்று அழைக்கப்பட்டதாகவும் மகாவம்சத்தை உதாரணமாக காட்டுகிறார் கால்டுவெல். விஜயன் கூட்டத்தார் முதன் முதலில் குடியேறிய சிலோனின் மேற்குக் கரையோரமான புட்லம் என்ற குடியிருப்பு கிட்டத்தட்ட தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் கூடுதுறைக்கு அருகில் உள்ளதாகவும் அதன் அருகில் அமைந்த கொற்கையையும் தாமிரபரணி ஆற்றையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் பாண்டியர்களோடு விஜயன் கூட்டத்தார் மண உறவு கொண்டிருந்தனர் என்றும் கணிக்கிறார் கால்டுவெல் அடிகளார்.

ஆனால், தமிழர் நாகரீகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப் பட்ட  கொற்கையை பாண்டியர்களின் பண்டைத் தலைநகர் என்ற கால்டுவெல்லின் கருத்தை முத்துக்குளித்தல் என்னும் நூலை எழுதிய எஸ். அருணாச்சலம் மறுக்கிறார்.கொற்கை வேந்தர்கள் என்றழைக்கப்பட்ட பாண்டியர்களின் துணை தலை நகரமாக கொற்கை இருந்திருக்கலாமே தவிர பாண்டியர்களின் தலைநகராக கொற்கை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் சங்க இலக்கியங்களில் இல்லை என்கிறார். இதுவும் ஒருவகையில் நம்பத்தகுந்த ஆய்வாகவே உள்ளது. இந்த இரண்டு மேதைகளின் ஆய்வுகள் எதுவும் கொற்கையின் சிறப்பையோ அது பண்டை உலக வணிகத்தின் மையமாக இருந்தது என்பதையோ மறுக்கவில்லை.

அராபியர்கள், காயலுக்கு வருவதற்கு முன்னர் ஆதிகாலம் தொட்டு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவர்கள் முத்துக்குளித்தலில் தனி உரிமை பெற்றவர்களாக இருந்ததையும், பின்னர் மூர்கள் தொடங்கி ஆங்கிலேயர் வரை பரதவர்களை ஒட்டச் சுரண்டி முத்து வளத்தையே அழித்து, முத்துத் தொழில் இல்லாமல் போனதையும் எஸ்.அருணாச்சலம் மிக நேர்த்தியாக விவரிக்கிறார்.

’’பேருலகத்துமே எந்தோன்றி சீருடை விழுச் சிறப்பின், விளைந்து முதிர்ந்த விழு முத்தின், இலங்குவளையிருஞ்சேரிக் கட் கொண்டிக் குடிப்பாக்கத்தும், நற்கொற்கையோர்,,” என்கிற மதுரைக் காஞ்சி பாடலின் மூலம் வீரமிக்க பரதவர்கள் முத்துக்களையும் சிப்பிகளையும் கடலில் மூழ்கியெடுத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்ற போது அவருடைய ஆட்சியதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனியாட்சி செய்து முத்துக்குளித்தலில் தனி உரிமை பெற்றிருந்த பரதவர்களை நெடுஞ்செழியப் பாண்டியன் போர் செய்து வென்று பரதவர்களை வீழ்த்தி விலையுயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்ட கழுத்தணி ஒன்றை எடுத்துக் கொண்டான் என்கிறது சிறுபாணாற்றுப் படை, பரதவர்களை வென்றபின் முத்தின் உரிமை பாண்டியர்களுக்கு செல்வதையும் அவர்கள் முத்தின் மீதும் சந்தனத்தின் மீதும் ஏகபோக உரிமை கொண்டிருந்தனர் என்றும் சங்கப்படால்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போன்று காவிரிப்பூம்பட்டினத்தையும் உறையூரையும் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் கிபி-990- ல் பாண்டியர்களையும் வட இலங்கையையும் வெற்றி கொண்டு பேரரசு ஒன்றை நிறுவியதன் மூலம் கொற்கைக்குடா, மன்னார்வளைகுடா என முழு முத்துக்குளித்தல் உரிமையையும் எடுத்துக் கொண்டனர். நாளடைவில் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் படிந்து பெரும்பகுதி நிலமாக மாறியதால், அதன் அருகில் உள்ள பழைய காயல் என்ற காயல்பட்டினம், அதன் பின்னர் துறைமுகமானது.

முத்து விற்பனை சந்தை

சுமார் கிமு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் அதன் நூலாசிரியர் கௌடில்யர் தென்னிந்தியாவில் கிடைத்த விலையுயர்ந்த முத்துச் சிப்பிகள், தங்கம் பற்றியும், அதை மையப்படுத்திய வடநாட்டு வணிகம் பற்றியும் குறிப்பிடுகிறார். ஆனால் இதற்கு முன்னரும் வேத காலம் தொட்டே இந்த வணிகம் நடந்து வந்ததாக பல நூலாசிரியர்களும் எழுதுகின்றனர். நடுக்கடல் வணிகம், கடல் கடந்து வணிகம், கரையோர வணிகம் என்று பண்டையில் கடல்சார் வணிகமும் நகர உருவாக்கமும் கொற்கைக் குடாவில் செழித்தோங்கியிருந்தது. பெரும்பாலும் மீன்பிடித்தலில் நுளையர், திமிலர், சாலர், பஃறியர் போன்ற கடலோடிச் சமூகங்கள் ஈடுபட்டாலும் நெய்தலில் தலை மக்களாக சங்க இலக்கியங்கள் கட்டுவது பரதவரைத்தான். அவர்கள் கடலில் பல தொழில்களில் ஈடுபட்டாலும் வருடத்திற்கொரு முறை முத்துக்குளித்தலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் முத்தும், மீனும், உப்பும் இருந்ததே தவிர விற்பனை உரிமை அவர்களிடம் இல்லை. உப்பு வணிகத்தில் கரையோர உமணர் சமூகமும், கடல், மற்றும் கரையோர வணிகத்தில் மாசத்துவான் என்னும் இனமும் ஈடுபட்டதற்கான் சான்றுகளே உள்ளன.

கடல் கடந்த வணிகங்கள் நடந்தாலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பண்டமாற்று பரிவர்த்தனை மூலம்தான் பெற்றுக் கொண்டனர். அக்காலத்தில் உணவுப்பழக்கத்தில் இருந்த விளை பொருட்களை விவசாயப் பெருங்குடிகள் மீனவர்களிடம் கொடுத்து தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுச் செல்லும் வளமை இருந்திருக்கிறது. கள்ளுக்காக மீனவர்கள் முத்துக்களைக் கொடுத்த குறிப்புகளும் சங்கப் பாடல்களில் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது நாடார் இன விவசாயிகள் மாம்பழங்கள், கொல்லாம்பழம் (முந்திரி பழம்) பனங்கிழக்கு ஆகியவற்றைக் கொடுத்து மீன்களைப் பெற்றுச் செல்வார்கள். மீனவர்கள் மட்டுமல்ல எல்லா சமூங்களுமே தான் உற்பத்தி செய்கிற பொருளைக் கொடுத்து தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிற சிறு பண்டப் பரிவர்த்தனை உறவே பண்டையில் நிலவியிருக்கிறது. ஆனால் பெருவணிகம் என்பது கொற்கை, தொண்டி, காவிரிப்பூம்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் இருந்து கால நீட்சியாய் நடைபெற்றிருக்கிறது.

உறையூர்,காவேரிப்பூம்பட்டினம்,நெல்கிண்டா (கோட்டயம்), முசிறி(கிராங்கனூர்) ஆகியவை பிரதான முத்து விற்பனை மையங்களாக இருந்தன.இதில் கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் முசிறி ஆகியவை செழிப்பான சந்தையைக் கொண்ட துறைமுக நகரங்களாக விளங்கின. ஆதிக்காலத்தில் வட இந்தியாவோடு வணிகம் நடைபெற்றாலும் ரோமாபுரி, கிரேக்கம், சீனம் ஆகிய இடங்களுக்கும் முத்துக்கள் தமிழக கரையோரங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. ரோமானியர்களும், பாபிலோனியர்களும் முத்துக்களின் மதிப்பைக் கொண்டு சமூக உயர் வர்க்க அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். முத்து ஆடம்பரத்தின் அடையாளமாக மேன்மை மிக்க செல்வச்செழிப்பின் அடையாளமாக ஆதிக்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.

வணிகர்களின் வருகை.

தென்னிந்தியாவில் உள்ள யானைத் தந்தங்கள், நறுமணப்பொருட்கள், முத்துக்கள் ஆகியவை அந்நிய வணிகர்களைக் கவர அவர்கள் கிறிஸ்து காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வர்த்தக நோக்கில் தென்னிந்தியாவுக்கு வரத்துவங்கினார்கள். எகிப்தியர்களும், ரோமானியர்களும், கிரேக்கர்களும், சீனர்களும் என பல நாட்டு வணிகர்களும் கொற்கையை தங்கள் தேவைக்கான பரிவர்த்தனை துறைமுகமாக பயன்படுத்தியுள்ளனர். அதே காலத்தில் முற்காலப்பாண்டியர்கள் முத்துக் குளித்தல் உள்ளிட்ட எல்லா உற்பத்தியிலும் ஏக போக உரிமை கொண்டிருந்தனர். பின்னர் கிபி முதலாம் நூற்றாண்டில் சோழ மன்னன் இலங்கையை வென்று சோழர்கள் தங்களின் பேரரசை விரிவுபடுத்திய பின்னர் சோழர்களின் கைகளுக்கு முத்துக் குளித்தல் சென்றது. இதில் குறிப்பிடத் தக்கதாக நான் புரிந்து கொள்வது என்னவென்றால் முத்துக்குளித்தலில் தனியுரிமை கொண்டவர்களாக இருந்த பரதவர்களிடமிருந்து பாண்டியர்கள் திறையாக முத்துக்களை வசூலித்துக் கொண்டு வணிகத்தை கட்டுப்படுத்தினார்களே தவிர முத்தெடுக்கும் பரதவர்களின் உரிமையை அவர்கள் பறித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இந்த வரி வசூலிக்கும் விஷயத்தில் கறாரான அணுகுமுறையை பாண்டியர்கள் கொண்டிருக்க வேண்டும். முத்து வளம் குன்றிய போது. (முத்து வளம் என்பது காற்று, சூரிய ஒளி போன்ற காலச்சூழல் மாறுபாட்டிற்கு ஏற்ப மன்னாரிலும், கீழைக்கடலோரத்திலும் பருவத்திற்கேற்ப குன்றியும் செழித்தும் கிடைத்து வந்தது) பரதவர்களால் வரிச் செலுத்த முடியாமல் போன போது பாண்டியர்கள் பரதவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை அடக்கியும் உள்ளனர். முத்துக்குளித்தல் உரிமையிலும், வரி விதித்ததிலும் பாண்டியர்களும், சோழர்களும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் பரதவர்கள் மீது கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் கரையோரங்களில் வாழ்ந்த பண்டை பரதவர்கள் மன்னர்களின் ஆளுகைக்குட்படாத தனி ஆட்சி முறையைக் கொண்டிருந்தனர். அவர்கள் சாதி தலைவர்களால் அம்பட்டர், அல்லது பட்டங்கட்டிகளால் ஆளப்பட்டு வந்தனர். இதை ஆட்சி முறை என்று புரிந்து கொள்வதை விட மன்னராட்சி நிலப்பரப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்ட ஒரு கடலோர இனமாக பரதவர்கள் உள்ளிட்ட எல்லா கடலோரச் சமூகங்களுமே இருந்திருக்க வேண்டும். அதை பரதவர்களின் சாதித் தலைவர்களாக கடற்கரையில் செல்வாக்குச் செலுத்திய பட்டங்கட்டிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த பட்டங்கட்டிகள் ஆங்கிலேயர் ஆட்சி வரை கடலோரக் கிராமங்களில் செல்வாக்குச் செலுத்தியவர்கள் இப்போது கூட பட்டங்கட்டி பரம்பரை என்று உழைக்கும் மீனவர்களை விட தங்களை மேன்மையானவர்களாக கட்டிக் கொள்கிறவர்கள் கடலோர கிராமங்களில் உண்டு.

ஆனால் கடல்தான் பயணங்களுக்கான வழியாகவும் வர்த்தக நிலையமாகவும் இருந்தபடியால் இவர்களால் நிம்மதியாக எப்போதும் நீடித்த அமைதியான ஆளுகையையோ ஆட்சி முறையையோ கொண்டிருக்க வில்லை. ஆனால் அதே நேரம் மன்னாரில் பாரம்பரிய மீனவ இனமான முக்குவர்கள் தங்களுக்கான தனி முக்குவச் சட்டத்தைக் கொண்டு தனி ஆட்சிமுறையையும் கொண்டிருந்தனர். ஆனால் பரவர்களுக்கென்று தனிச்சட்டங்கள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களின் பழைய தலைநகரான கொற்கையும், சோழர்களின் தலைநகரான உறையூர் அல்லது காவேரிப்பூம்பட்டினமுமாக முத்து வணிகம் அவரவர் ஆளுமைக்கேற்ப நடந்துள்ளது. பாண்டியர்கள் நீண்ட கால ஆட்சிமுறையைக் கொண்டுருந்தவர்கள் என்பதாலும் கொற்கை பாண்டியர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்த படியாலும் கொற்கை இயல்பாகவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் கிபி முதலாம் நூற்றாண்டில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக நெல்கிண்டாவில் (கோட்டயத்தில்) விற்பனை செய்யப்பட்டதாக பிளினி குறிப்பிடுகிறார்.உள்நாட்டுத் தேவைக்கான முத்துக்கள் மதுரைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் தரம் பிரிக்கப்பட்டு பல் வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. முத்துக்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரதானமாக ரோமாபுரிக்கு ஏற்றுமதியானதாக பிளினி கூறுகிறார்.இப்படி வணிகத்திற்காகச் சென்றவர்கள் முத்துக்களைக் கொடுத்து அழகிய  யவனப்பெண்களையும், போர் வீரர்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கிவந்ததற்கான குறிப்புகளும் உள்ளன. பாண்டியர்களின் அந்தப்புரங்களில் யவனப்பெண்கள் பாண்டிய மன்னர்களுக்கு மதுபானங்களை பரிமாறியாதான குறிப்புகளும் உள்ளன. இந்த யவனர்கள் கிரேக்கர்கள் எனப்படுகிறார்கள்.

கிபி 990 வாக்கில் சோழப் பேரரசு நிறுவப்பட்ட பின்னர் பின்னர் காவிரிப்பட்டினம் என்றழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து முத்தும், மிளகும், தங்கமும் ஏற்றுமதி செய்யப்பட்டு விலையுயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு காவிரிப்பூம்பட்டினம் செழித்தோங்கியதை பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது. ஆனால் விலைமதிப்பற்ற இந்த முத்துக்களை உலகிற்கு வழங்கியவர்கள் என்று அதை வணிகர்களையும் ஆட்சி செய்தோரையும் புகழ்கிறது பெரும்பாணாற்றுப்படை. பாண்டியர்களின் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் மண்ணால் நிலமாக மாறியதால் பின்னர் பழைய காயல் பாண்டியர்களின் புதிய துறைமுகம் ஆனது போல, சோழர்களின் காவிரிப்பூம்பட்டினத்தையும் கடல் கொள்ள காஞ்சிபுரத்தை சோழர்கள் தலைநகராக மாற்றியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரம் சோழர்களின் தலை நகர் என்பதை மறுப்வர்களும் உண்டு. பாண்டியர்களைப் போல சோழர்களும் எகிப்தியர்களோடும், ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும், சீனர்களோடும் முத்து வணிகத்தில் ஈடுபட்ட காலத்தில் சோழர்களை பிற்கால பாண்டியர்கள் என்றழைக்கப்படும் பாண்டிய அரசின் கடைசி மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கிபி.1268-1310) கொல்லத்தையும் இலங்கையையும் வென்று சோழ சாம்ராஜ்யத்தைச் சரித்தான். சோழர்கள் முத்துக்களை அள்ளி தன்னைப் புகழ்ந்து பாடியவர்களுக்கும், கோவில்களுக்கும் அள்ளிக் கொடுத்த வரலாறுகள் வேள்விக்குடி செப்பேடுகள் மூலம் தெரியவருவதெல்லாம் தனி வரலாறு.

தொடரும்..........


No comments:

Post a Comment