Friday, 4 May 2012

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-2 ]


’’தேச விரோதிகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு அணு உலைக்கு எதிராகப் போராடுகிறார்கள் இந்துக்களே உஷார்! 2011- டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் நான் நாகர்கோவிலுக்குச் சென்ற போது அந்த நகரமெங்கும் இந்து அமைப்புகள் ஒட்டியிருந்த போஸ்டரின் வாசகங்களில் இதுவும் ஒன்று. வந்தேரி கிறிஸ்தவர்கள் என்றும், திருச்சபைப் பாதிரிகளின் போராட்டம் என்றும் தொடர் பிரச்சாரம் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்து அமைப்புகளும் சரி இனவாத பாரதீய ஜனதா கட்சியும் சரி கணிசமான செல்வாக்குள்ளக் கட்சிகள்.

எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை எதிரிகளாகக் கட்டமைத்து கட்சி வளர்க்கும் இந்த இந்து மத வெறியர்கள் கோவையில் இஸ்லாமிய மக்களை எதிரிகளாகச் சித்தரித்து செல்வாக்கை வளர்த்துக் கொண்ட நிலையில் கன்னியாகுமரியில்  அவர்கள் எதிரிகளாகச் சித்தரித்தது சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை. அதிலும் கடலோர மீனவ கிறிஸ்தவ மக்களைத்தான் அவர்கள் தேச விரோதிகளாக தொடர்ந்து சித்தரித்து வந்தனர். 1982- ல் மீனவர்களுக்கு எதிரான மண்டைக்காடு கலவரத்தில் தொடங்கிய இந்த விஷ விதை குமரி மக்களின் பொதுப்புத்தியில் பெரிய தாக்கத்தை உருவாக்காவிட்டாலும், குமரி மாவட்ட மக்கள் மனதில்  மீனவர்கள் மீதான எரிச்சலும் காழ்ப்புணர்ச்சியும் இந்த முப்பது ஆண்டுகளில் வளர்ந்து விட்டதென்னமோ உண்மைதான்.

இந்நிலையில்தான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகால போராட்டத்தின் தொடர்ச்சியாய் 2011- செப்டம்பரில் தொடங்கிய அணு உலை போராட்டம் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தை அடைந்து சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக அணு உலையை மூடி வைக்கும் அளவுக்கு நடந்தது. அடித்தள மக்கள் சமூகம் ஒன்றில் போராட்டம் விவசாயக் பெருங்குடிகளின் ஆதரவைப் பெற முடியாமல் போன நிலையில் ஒரு பக்கம் மத்திய மாநில அரசுகளும், இன்னொரு பக்கம்  இந்து அமைப்புகளும், தமிழகத்தின்  திராவிட இயக்க அரசியலின்  இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அரசு இயந்திரத்தின் உதவியோடு  அந்த மக்கள் மீது போர் தொடுத்தது ஏன்?
ஒரு குறுகிய நிலப்பகுதியில் கரையோரக் கிராமமான இடிந்தகரையில் போராடிக் கொண்டிருக்கும் அந்த மீனவர்கள் யார்? அவர்கள் கடல் வழியே வந்து சேர்ந்தவர்களா? உண்மையில்  இடிந்தகரை  உள்ளிட்ட தமிழக கடலோரங்களில் குறிப்பாக தென் தமிழகத்தின் கிழக்கு கரையோரத்திலும் , மேற்குக் கரையோரத்திலுமாக இராமநாதபுரம்,  தொடங்கி கேரள எல்லையான நீரோடி வரை  வாழும் பாரம்பரீய கிறிஸ்தவ மீனவர்கள் வந்தேரிகளா?  அவர்கள் மேலைத் தேய மரபின் உற்பத்திகளா? என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய செழிப்பான வரலாறும், சமூக உருவாக்கத்தில் அவர்களின் பங்கும் கொட்டிக் கிடக்கின்றன. மின்னிய பழம் பெருமை ஒன்றின் மிச்சங்களாகவும், பழங்குடித் தன்மையின் எச்சங்களோடும் வாழும் அந்த மக்களின் வரலாறு என்ன?

நமது சமூக அமைப்பை தீர்மானிப்பதில்  சாதி வகிக்கும்  இடம் என்பது எவளவு முக்கியமானது என்பதை நாம் இன்று உணர்ந்து வருகிறோம். இந்து மதத்தோடு வேர் பற்றி அதன் ஆன்மாவாக திகழும் சாதீய பரப்பில் கரையோர மீனவர்களுக்கான இடம் எது என்பது இதுவரை தமிழ் பரப்பில் அலசப்படாத  ஒன்று. கரையோரமும் சம வெளியும் ஒன்றுக் கொன்று முரண்பாடுள்ளதாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  கரையை கடல் அரித்தது போக சம வெளிச்சமூகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரையை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. சம வெளி என்பது இங்கே நிலபிரபுத்துவ சாதியாகவும் இருக்கிறது. அரசு நிர்வாகமாகவும், மதங்களாகவும்  இருக்கிறது. இடைவிடாத இந்தப் போர் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே தொடங்கி விட்டது.

தமிழ் சமூகத்தின் வரலாற்றை எழுதியவர்களில் எவர் ஒருவரும் இந்த மீனவச் சமூகங்களின் வரலாற்றை எழுதவில்லை.தமிழர்களின் வரலாற்றை வாசிக்கவே சாதிகளில் வரலாற்றை வாசிக்க வேண்டும் என்பதுதான் உண்மை. தமிழர்கள் என்ற பொது அடையாளம் உருவாக தமிழ் மொழியை அதன் இணைப்புப் புள்ளியாகக் சிலர் காண்கின்றனர். ஆனால் தமிழ் மொழியை விட பல மடங்கு வலுவுள்ளதாக சாதியும், இந்து மதமும் மக்களைப் பிரித்தாளுகின்றன, மேலை நாட்டு மாதமான கிறிஸ்தவம் கூட இந்தியத் தன்மைக்கு பலியாகிவிட்டதை நாம் காண்கிறோம்.

பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிட இயக்கம் அதன் இயல்பிலேயே முர்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் அது பெரியாருக்குப் பின்னர் கொள்கையளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. அதன் தாக்கங்கள் அதன் முற்போக்கு அம்சங்கள் இட ஒதுக்கீடு, ஆரம்பக்கல்வி,  குழந்தை இறப்பு விகிதம், என்று ஏனைய மாநிலங்களை விட தமிழகத்தை வளர்த்திருந்தாலும் அந்த வளர்ச்சியினூடே அது பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்கமாக இறுகிப் போய் விட்டது. சம வெளிக்குள் அது சேரிகளை வலுப்படுத்திச் சென்றிருக்கிறதே தவிற சாதித் தீண்டாமைக்கு எதிராக நீண்டகால போராட்டம் ஒன்றை நடத்த வில்லை. அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் அமைப்புகள் எழுச்சி பெற்று கணிசமான அளவுக்கு  தலித் மக்களை அணி திரட்டிய போதிலும் தமிழ் தேசிய, திராவிட இயக்க அரசியலில் அவைகள் அங்கீகாரம் பெறவில்லை. சமவெளிக்குள்  தலித்துக்கள் தீண்டத் தகாத மக்களாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நிலையில் மீனவர்களோ இந்த பரப்பிற்கு வெளியே சாதி பற்றிய ஓர்மைகளற்று வாழ்ந்து வருகின்றனர்.
மனித குல வரலாற்றை எழுதியவர்களில் ஒரு சாரார் கருத்து முதல்வாதிகளாகவும் இன்னொரு சாரார் பொருள் முதல்வாதிகளாகவும் இருந்துள்ளனர். அவரவர் தாம் நம்பிய கோட்பாடுகள் வழி நின்றே மனித குல வரலாற்றை எழுதத் துவங்கினார்கள். கடவுள் கோட்பாட்டை நம்பும் கருத்து முதல்வாதிகள் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதில் தொடங்கி  மனித குலவரலாற்றை எழுதிச் சென்றனர். கருத்து  முதல்வாதிகளின் கோட்பாடு மதங்களின் கோட்பாடாகவும் இருக்கிறது.

பிற்போக்குவாத கருத்துமுதல்வாதிகளின் கோட்பாட்டை நொறுக்கி  ஐய்ரோப்பாவில் உருவான பொருள்முதல்வாத சிந்தனையும் அதையொட்டி உருவான கம்யூனிச சிந்தனை வரலாறும் கூட மனித குல வரலாற்றில் சம வெளி மனிதனையே பிரதானப்படுத்துகிறது. நிலத்தை உழுது பயிர் செய்ததும், குடும்பம், தனிச்சொத்து. அரசின் தோற்றமுமாக அதுவும் சம வெளியையே பிரதானப்படுத்துகிறது. பண்டை இனக்குழு சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலவுடமைச்சமூகம். முதலாளித்துவ சமூகம், என மனித குலத்தின் வரலாற்றை வரையறுக்கும் மார்க்சியம் . பழங்குடி சமூகங்களாக வரையறுப்பது ஆறு குளங்களில் வேட்டையாடி மீன் பிடித்த பழங்குடிகளைத்தான். இந்திய வரலாற்றை ஆய்வு செய்த மார்க்சிய அறிஞரான டி.டி. கோசாம்பி  போன்றவர்கள் கூட வட கிழக்கு மாநிலங்கள், மத்திய இந்தியாவின் காடுகளில் வாழ்ந்தவர்களையும்,இந்தியக் கடலோரங்களில் வாழ்ந்தவர்களையும் பழங்குடிகளாக வரையறுக்கும் அதே நேரம் கடல்சார் பழங்குடிகள் தொடர்பான சிறப்பான தகவல் பதிவுகள் எதுவும் இல்லை.  பழங்குடிகள் தொடர்பான ஆய்வுகளை மிகச்சிறப்பாக செய்துள்ள அதே நேரம் கடல் சார் பழங்குடிகள் தொடர்பான விபரங்கள் எதுவும் இல்லை.

ஆனால் மனித குலத்தின் தோற்றமும் உழைப்பும் வேட்டைத் தொழில் பண்பாட்டிலிருந்தே உருவாகிறது. இந்தியாவின் வரலாற்றை எழுதிய ரஷ்ய வரலாற்று ஆய்வாளர் போன்காரத்லேவின் ‘’ தென்னிந்தியாவில் கிமு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலோரங்களில் மக்கள் வேட்டையாடுதலிலும் மீன் பிடிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்” என்று எழுதுகிறார்.

தமிழக கடலோரங்களும் மீனவ மக்களும்.
.............................................................................................................

மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின்னர் சென்னை பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி நீரோடி வரை தமிழக கடலோரத்தில் நீளம் சுமார் 1.225 கிலோ மீட்டர். இன்றைக்கு இந்த கடலோரம் நெடுக பாரம்பரீய மீன் பிடிச்சமூகமாக 22 சாதிகள் அறியப்படுகின்றன. பரவர்,முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், பர்வதராஜகுலம், மரக்காயர், என இன்னும் பல  சாதிகளாக அடையாளம் காணப்படும் மீனவ மக்கள் நீளமான இக்கடலோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் அரசியல் பொருளாதார சமூக வரலாற்றை ஆய்வு செய்கிறவர்கள் சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சங்க காலம், சங்கம் மருவிய காலம், சோழர் காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், அய்ரோப்பியர் காலம், தற்காலம் என வரலாற்றை ஆய்வு செய்வார்கள். வரலாற்றின் மிக நீண்ட இந்த காலத்தில் சமூகங்கள் தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. மரபுகளை மாற்றிக் கொண்டோரும் உண்டு.

தமிழ் சூழலைப் பொறுத்தவரை சங்க இலக்கியங்கள் பல் வேறு இனக்குழுக்களின்  வரலாற்றுக் களஞ்சியமாக இருந்தனே தவிற சாதிகளின் அடையாளக்களஞ்சியமாக இருந்ததில்லை. சங்க இலக்க்கியங்களில்  தொல்குடி சமூக வாழ்வான திணை வாழ்விலிருந்து மூவேந்தர் ஆட்சிமுறைக்கு மாறியமை வரையிலான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

சங்க இலக்கியத்தில் பரதவர்கள்.
....................................................................................

தமிழ் நாட்டில் ஆதி வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் ஒன்று வேளிர் என்ற குழு. இன்னொன்று பரதர் என்ற குழு.இக்குழுக்களைச் சார்ந்தோர் ஆதி வரலாற்றுக்க்காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகளும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன என்பதை பேராசிரியர் ஸெனெவிரத்ன எட்டுத்துறைத்துள்ளார்// ( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு)
மேலும் பரதர் என்ற குழுவினர் சங்கச் செய்யுள்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழக கரையோரப்பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் (( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) )
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று  அடையாளப்படுத்துகின்றன. ஐந்து வகை திணைகளாக வகுக்கப்பட்ட நிலங்களில் நெய்தல் நிலத்தின் திணைக்குரிய தலை மக்களாக ஆண்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள்  சேர்ப்பன், புலம்பன், கொண்கன், துறைவன், ஆகியோரும் பெண்களாக பரத்தி, நுளைச்சி என்றும் குறிக்கின்றன.

நெய்தல் நிலத்திற்குரிய  மக்களாக ஆண்கள் பரதர், நுளையர், அளவர்  பெண்களாக நுளைச்சியர் பரத்தியர், அளத்தியர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். உப்பு வணிகம் செய்தவர்களை உமணர் என்கிறது சங்கப்பாடல்கள். மீனவர்களில் ஒரு பிரிவினரான நுளையர் என்ற பெயர் அகநானூற்றிலும் திமிலர் என்ற பெயர் மதுரைக் காஞ்சியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பரதவர் என்ற பெயர்தான் பெரும்பாலான சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. பரதவர்கள்  காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்ததாக பட்டினப்பாலை கூறுகிறது.

புறநானூறு  - //திண் திமில் பரதர்// ( உறுதி மிக்க படகையாளும் பரதவர்)
பட்டினப்பாலை - //புன் தலை இரும்பரதவர்//  (உப்பு நீர் படுவதால் பழுப்பேறிய தலைமுடியைக் கொண்ட வலிமைமிக்க பரதவர்)
நுண் வலைப் பரதவர்,
பெருங்கடல் பரதவர்,
பழந்திமில் கொன்ற பரதவர்,
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்,
’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்த பயங்கொழு மாநகர்”  ( மனையறம் படுத்த காதை)
’’அரச குமாரரும் பரவ குமாரரும்”  (இந்திர விழா ஊர் எடுத்த காதை)
''அரசர் முறையோ பரதர் முறையோ”

இந்தப் பாடல்கள் பரதவருக்கும் கடலுக்கும் உழைப்பிற்குமான தொடர்பை நமக்குக் காட்டும் சித்திரங்கள் இவை, பரதவர்கள் சங்ககாலத்திலும் அதன் பின்னரும் மீனவர்களாக, முத்துக்குளிப்போர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக, படைத்தலைவர்களாக, எதிரிப்படைகளில் பங்கு கொண்டவர்காளாக வரலாற்றில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான் ஆதாரமாக  ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்களின் பண்டைத் தலைநகரான கொற்கையும், கோவலன் கண்ணகி கதையும், காவிரிப்பூம்பட்டினமுமாக செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த சமூகங்களில் பரதவர்களும் பிரதானமானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இவை.

இந்த பரதவர்கள் வரலாற்றில் யாருங்கும் அடங்காமல் செருக்கோடு வாழ்ந்ததும் சில நேரங்களில் சோழர்கள் இவர்கள் மீது படையெடுத்தமையும் பல நேரங்களில் நாடு பிடிக்கும் ஆசையோடு கடல் கடந்த போது பரதவர் துணையோடு போர் புரிந்தமைக்கான சான்றுகளும் உள்ளன. ‘தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” என்கிற புறநானூற்றுப் பாடல் மூலம் அவர்கள் பாண்டியர்களின் ஆளுகைக்குட்படாத தனி இனக்குழுவாக பிரத்தியேக ஆட்சி முறையை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் அவர்களை பாண்டியர்கள் போர் செய்து வென்றதையும் உணர்த்துகிறது. சிலப்பதிகார காலத்திற்குப் பிந்தைய மதுரைக்காஞ்சியில் பாண்டியர்கள் பெரும்படை திரட்டி பரதவர்களோடு போர் புரிந்ததை ‘’தென் பரதர் போர் ஏறே” என்கிற பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

நிலத்தை ஐந்து வகை திணையாகப் பிரித்து இந் நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையினை பட்டியலிட்டது  சங்ககாலம். பின்னர் பேரரசுகளின் விரிவு வெளிநாட்டு ஆதிக்கத்தின் இடையீடு பிராமணீயத்தின் செல்வாக்கு, ஆகியவற்றின் காராணமாக மருத நிலம் தவிர்த்த ஏனைய நிலங்கள் படிப்படியாக மறைந்து பின்னில்லைக்குச் சென்றன என்கிறார் -பேராசிரியர் சிவத்தம்பி. (நூல்- பண்டைத் தமிழ்ச் சமூகம்)

தமிழகத்தின் மிக தொன்மையான பல சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் சாதி ரீதியாக தங்களை மேன்மைப்படுத்தும் போக்கை நீண்ட காலமாக செய்து வருகின்ற நிலையில் ஒரு சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக  நடந்து வரும் அசைவியக்கத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிமையான ஒன்றல்ல, தமிழ் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்தைய  காலந்தொட்டு வாழ்ந்து வரும் கடலோரச் சமூகங்களில் சங்க இலக்கியங்கள்  குறிப்பிடும் சமூகம் பரவர். இன்றைக்கு பரதவர் என்ற பெயரில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை வங்கக்கடலோரத்திலும், கன்னியாகுமரி தொடங்கி கேரளக் கரையோரங்களிலும் இலங்கை கரையோரங்களிலும் வாழ்கிறார்கள் இவர்கள். பரவர் அல்லது பரதவர் என்பது தற்காலத்தில் சாதிப் பெயராக அடையாளம் காணப்பட்டாலும் அது சாதிப் பெயர் அல்ல பண்டை இலக்கியங்களில் நெய்தல் என்னும் திணையின் தலைவர்களாக வருகிறவர்களே இந்த பரவர்கள்.

பரதவர்களில் பல சாதிகள் இன்று தங்களை சைவ மரபினராக மாற்றிக் கொண்டுள்ளனர். காலம் தோறும் ஒடுக்கப்பட்ட சமூங்களை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் மேன் மக்களாக காட்டிக் கொள்ளவும் பிற இழிந்த சாதியினரை விட தாங்கள் மேலானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவும் மரபை மாற்றிக் கொள்வதுண்டு. அந்த வகையில் உப்பு வணிகத்தோடு தொடர்புடைய நெய்தல் நில மக்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு. இவர்கள் உமணர்கள் என்றும் வணிக உமணர்கள் என்றும் சில குறிப்புகளும் ஆய்வுகளும் சொல்கின்றன.

பொதுவாக இன்றைக்கு செட்டியார்கள் என்றழைக்கப்படுவோரிடம் மீன் பிடிச் சமூகங்களின் எச்சங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சங்க இலக்கியங்கள் செட்டி என்றும் மாசத்துவன் என்றும் குறிப்பிடும் செட்டிகள் மீனவர்களே, கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்போதும் பரதவர்களிலும் இன்னொரு பிரிவினரான பட்டினவர்களிலும் செட்டி என்ற பெயர் வழக்கில் உள்ளது. காலப்போக்கில் நிலம் மறைந்து சாதிகள் ஆக்கம் பெற்ற போது பல சாதிகள் தங்களை சைவமாக மாற்றிக் கொண்டன அப்படித்தான் செட்டிகள் செட்டியார்கள் ஆகியிருக்கலாம். இலங்கையில் கரையார் என்று சொல்லப்படும் கரையோரச் சமூகம் தன்னை யாழ்பாண வெள்ளாளருக்கு இணையான சைவ மரபினராக காட்டிக் கொள்வதையும் இங்கே பொறுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. எது எப்படி என்றாலும் இன்றைய தமிழகக் கரையோரத்தில்  பரதவர்கள பட்டினவர், முக்குவர், மரைக்காயர், கரையார், முத்தரையர், அதியரையர், என கடலோரங்களில் இன்னமும் பாரம்பரீய மீனவச் சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

எட்கர் தர்ஸ்டனின் பரவன் பற்றிய குறிப்புகள்.
.............................................................................................................

தென் கிழக்கு கரையோரங்களில் வாழும் பரவனைப் பற்றி 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட கிறிஸ்தவ திருச்சபை நூல்கள் இவர்களை பர்வையம்கள் என்றும் திருவிவிலியத்தில் (மறைநூலில்) குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் என்றும் சாலமோன் ராஜா காலத்தில் கலம் ஓட்டியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்னொரு கதை பரதவர்கள் தங்களை அயோத்தியைச் சார்ந்தவர்கள் என்றும் மகாபாரதப் போருக்கு முன்னர்  யமுனைக்கரையில் வாழ்ந்ததாகவும் கூறிக் கொள்கின்றனர். சூத்திரப் பெண் ஒருத்திக்கு பிராமணன் வாயிலாக வந்தவர்கள் என்றும் இலங்கையில் இவர்கள் இராமனால் குடியமர்த்தப்பட்ட  குகன் மரபினர் என்றும் தங்களை அழைத்துக் கொள்கிறார்காள். சென்ற யுகத்தின் முடிவில் உலகம் நீரால் சூழப்பட்டிருந்த போது தங்களைக் காத்துக் கொள்ளும் விதமாக ஒரு தோணியைச் செய்து அதில் ஏறி பயணப்பட்டு பின்னர் நீர்வற்றி தரை தட்டிய போது தாங்கள் குடியேறியதுதான் தோணிபுரம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதைகள் ///எவற்றுக்கும் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இவைகள் பழமரபுக் கதைகளாகவோ புரானக்கதைகளாகவோ காலந்தோறும் மக்களிடையே வழங்கிவருகின்றன.

ஒரு காலத்தில் பரவர் செல்வாக்குடையோராகவும் கடற்பயணம் பற்றியதான தங்கள் அறிவின் காரணமாக அவர்கள் மற்ற சாதியார் மீது செல்வாக்குச் செலுத்துவோராகவும் இருந்துள்ளனர். இவர்களுள் சிலர் ஆதிரயரசர்கள் என்ற பெயரில் ஆண்டுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களுள் சிலர் உத்திரகோசமங்கையிலிருந்து ஆண்டதாகவும், அந்நாட்களில் கடலோரப்பட்டினமான இந்த நகரம் மங்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே உள்ள  புகழ்பெற்ற இந்துக் கோவிலாக இன்று அது திகழ்கிறது//  (எட்கர் தர்ஸ்டன்- தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி ஆறு )

இது போக வலைவீசு புராணத்தில் சிவன் பார்வதி தொடர்புடைய கதையொன்றும். 1912-ல் வெளிவந்த மேல் மலையனூர்  வீரப்பதாசனார் எழுதிய ஆதி ஆதி ஐதீக புராணத்தில் பரதவர்களின் தொண்ணூறு மரபுகளை பட்டியிலிடுகிறது. (பரதவர் -அரு. பரமசிவம் -காவ்யா வெளியீடு)இதெல்லாம் இன்றைய காலச் சூழலில் ஒவ்வாது என்னும் நிலையில்,1901-ல் சென்னை மாநில சாதிக் கணக்கெடுப்பில் // பரவன் என்பவன் முறையே தமிழ், மலையாளம், கன்னடம் ஆகினவற்றைப் பேசும் மூன்று சாதிகளாக உள்ளனர். இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் பரவன் அல்லது பரதவனின் வழித்தோன்றல்களே....இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். (தென்னிந்திய குலங்களும் குடிகளும்-தொகுதி ஆறு) ஆனால் தூத்துக்குடி என்பது பரதவர்களின் பிற்கால தலைநகர்தான் பண்டையில் அவர்களின் பிரதான நகராக இருந்தது கொற்கை அது கடல் சார்ந்த இயற்கைப் பேரிடரில் பெரும் அழிவுற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நினைவுக்கு எட்டிய காலத்திற்கு முன்பிருந்தே  முத்துக்குளித்தல் தொழில் உரிமை பரவர்களிடமிருந்தது. பழைய தமிழ் நூலான கலவேடு  என்ற நூலில் பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவருக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வேத நாராயணன் செட்டியும் முத்துக்குழிக்கும் பரவரும் மதுரையை ஆண்ட பாண்டியன் மகளான அல்லியராசானிக்கு கப்பம் செலுத்தி வந்தனர்  என்கிறது அந்தக் குறிப்பு. அல்லியராசானி அவள் கப்பலில் பயணம் மேற்கொண்டிருந்த போது  புயலில் அகப்பட்டு இலங்கையில் சென்று ஒதுக்கினாள். அங்கு அவர்கள் கரை ஒதுங்கிய நேர்கை, குதிரை மலை ஆகிய இரண்டு இடங்களை கண்டனர். வேத நாராயணன் செட்டி தன் கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கே கொண்டு சேர்க்கும் படி பரவரை பணித்ததோடு கடல்கீலபம், கள்ளக்கிலபம் ஆகிய துறைகளில் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்ததோடு இரும்பைப் பொன்னாக்கும் ரசாசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டு வந்தான் என்கிறது அந்தக் குறிப்பு.

பாண்டியர் அரசு வலிமையானதாக இருந்தவரை பரவர்கள் பாண்டிய மன்னர்களிடமிருந்து பொது வரிவிதி்ப்பிலிருந்து விலக்கையும் பாதுகாப்பையும் பெற்று வந்தனர். 16-ஆம் நூற்றாண்டு வரை பரவர் செல்வச் செழிப்போடும், யாருக்கும் கட்டுப்படாமலும் வாழ்ந்து வந்தற்கான சான்றுகள் உள்ளன். மலபார் கன்னட கடற்கரை சார்ந்த கப்பல் படைத் தலைவனான வான் ரீதெயும், மதுரையினைச் சார்ந்த துறைமுகங்களின் தலைமை வணிகனான வயுரென்ஸ் ஆகியோர் எழுதிய கடிதங்கள் ஆதாரங்களாக உள்ளன.  19-02-1669-ல் எழுதப்பட்ட கடிதம் இப்படிச் சொல்கிரது “ இங்கு அவர்கள் (பரவர்கள்) அவர்களின் சாதித் தலைவனுக்கே கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். அரசனுக்கு ஆண்டுதோறும் கப்பமாக ஒரு தொகையைக் கட்டிவாந்தார்களே தவிற நாட்டின் பிற மக்களுக்கு உள்ளது போன்ற கடுமையான வரிச்சுமை ஏதும் இல்லை, அரசனின் நேரடி ஆளுகைக்குட்பாடாதவர்களாக தங்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட சாதித் தலைமைகளால் ஆளப்படுவோராக  பரதவர்கள் உள்ளனர் “  கொல்லம் முதல் இராமேஸ்வரம் வரை வாழும் பரவர் இந்த சாதித் தலைவருக்கு வரிச் செலுத்துகின்றார்கள் “ என்கிறது அந்தக் கடிதக் குறிப்பு. (எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் - தொகுதி-6) மேற்கண்ட கடிதம் பரதவரின் வாழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டான ஒன்றாக விளங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு அவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்தமையும் அதுவே பல போர்களுக்கும் ஆக்ரமிப்புகளுக்கும் காரணமாக அமைந்ததையும் நாம் வரலாற்றை நோக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றிலும் இராமேஸ்வரம் தொடங்கி  கன்னியாகுமரி வரை வாழ்ந்த பரதவர்கள் அடங்கி நடந்தது ஒரே ஒரு குழுவினரிடம்தான் அது போர்த்துக்கீசியரிடம் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகாலம் நீடித்த அந்த வரலாற்றில் மீனவ மக்களின் மேய்ப்பர்களாக போர்த்துக்கீசியர் இருந்துள்ளனர்.

இறுதியாக,
..................................

பொதுவாகவே சங்க இலக்கியங்கள் கடல்சார் நகரத்தையும் அது சார்ந்த கடல் வணிக வர்த்தகத்தையும் அது சார்ந்த செல்வச்செழிப்பையும் அது சார்ந்த கொண்டாட்டங்களையுமே வர்ணிக்கின்றன. ஒவ்வொரு திணையும் அது சார்ந்த தலை மக்களையும் குறிக்கும் அதே நேரம் நெய்தல் நிலத்தைப் பொறுத்தவரை அடித்தட்டு மீனவ மக்களின் வாழ்க்கை முறை தொடர்பாக எந்த விபரங்களையும் பெற முடியவில்லை. பொதுவாக பரதவர்கள் வசதியாக வாழ்ந்தது போன்றும் அவர்கள் வணிகம் செய்து செல்வத்தோடும் செல்வாக்கோடும் இருந்தது போன்றும் தெரிகிறதே தவிற பிற நிலங்களோடு அவர்களுக்கு வணிக நலன்களுக்கு அப்பால் உறவு இருந்ததற்கான சான்றுகள் மிக குறைவாகவே உள்ளன. பிற நிலங்களில் உள்ளவர்கள் சங்ககாலத்தில் நெய்தல் வெளியை எப்படிப் பார்த்தார்கள்?

வரலாற்றில் சைவர்கள், வைணவர்கள், சமணர்கள் என எல்லோருமே வேட்டையையும் புலால் உணவுகளையும் வெறுத்தவர்கள். சங்க இலக்கியங்களில் மலைக்காடுகளில் வாழ்ந்த வேட்டைப் பழங்குடிகள் பற்றியும் கடல்சார்ந்த வேட்டைப்பழங்குடிகள் பற்றியும் ஏனைய திணைகளைப் போன்ற பதிவுகள் இல்லாமல் போனதற்கு அவர்களின் சமையச் சார்புகளே காரணமாக இருந்திருக்கலாம் என்னும் நிலையில் பாரம்பரீய மீன்பிடிச் சமூகத்தில்  வணிகம் பெருகியதன் விளைவாக உற்பத்தி பெருகி அதில் மேல்தட்டுப் பிரிவினர் வணிகர்களாக மாறி கரையில் இருந்து கடலில் மீன்பிடித்த மீனவனின் உற்பத்திப் பொருளுக்கு விலை நிர்ணயித்த வரலாற்றின் தொடர்ச்சி இன்றும் உள்ளது. மீனவர்களிடையே மேசைக்காரர்கள் என்றும் மரக்காயர், என்றும் செட்டியார்கள் என்றும் அழைக்கப்படுவோர் இவர்களே.

மீனும், உப்பும், கடலும் உலகளாவிய வர்த்தக மையங்களாக இருந்த போதிலும் அந்த வணிகத்தால் மீனவர்கள் பயன் அடைந்தார்களா? சங்க இலக்கியங்கள் காட்டும் செழிப்பு என்பது அன்றைக்கு கடலோரத்தில் வாழ்ந்த மீனவனின் செழிப்பா அல்லது அவர்களை ஆட்சி செய்தவர்கள் அல்லது வரி வசூலித்துக் கொடுத்தவர்களின் செழிப்பா? மீனைப் பிடித்த போதும், முத்துக்குளித்த போதும், உப்பு விளைவித்த போதும் அதை விற்பனை செய்யும் உரிமை விலை நிர்ணயிக்கும் உரிமை மீனவர்களிடம் இருந்ததா? என்ற கேள்விக்கு இன்றைய நிலையில் இல்லை என்று சொல்லலாம். சங்ககாலத்தில் அதற்கான சான்றுகளே இல்லை.  கரையோரத்தை சம வெளி எப்போதுமே வென்று கொண்டுதான் இருக்கிறதா? தார்ச்சாலையும், இரயில் பாதைகளும் உருவாகி நகரம் சமவெளியை நோக்கி நகரந்த பின்னர் கடற்கரையை ஆக்ரமித்தவர்கள் யார்? உப்பை விளைவித்தவர்கள்  மீனவர்கள் அதை விற்பனை செய்தவர்கள் உமணர்கள் என்பது போல இன்றைய மீன்பிடிச்சமூகமும் அதன் பாரம்பரீய நிலங்களும் ஆக்ரமிப்புக்குள்ளாகி நிற்கிறதா? என்கிற கேள்வியிலிருந்தே கடலோர  அடித்தட்டு மக்களின் வாழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும்.

.........................................................................

துறைமுகங்கள், கிரேக்கர்கள், வணிகம், மூர்களின் வருகை..... உள்ளிட்ட சிலவும்.... போர்த்துக்கீசியர் எப்படி தூத்துக்குடிக்கு வந்தனர்? சாதிக் கொடுமையால் பரதவர்கள் மதம் மாறினார்களா? கோதுமைக்கும், மஞ்சள் மாவுக்குமா மதம் மாறினார்கள் மீனவர்கள்? போர்த்துக்கீசியர் வருவதற்கு முன்னால் கிறிஸ்தவர்கள் தென்னிந்தியாவில் இருந்தார்களா? இந்த கேள்விகளுக்கான பதிலை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

No comments:

Post a Comment