Sunday, 13 May 2012

Y THIS உலைவெறி ?


ஏன் இந்த உலைவெறி ?

கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது. உலக அளவில் இப்படி ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.

புற்று நோய் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று அரசு பிரசாரத்தில் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் எப்படி புற்று நோயை ஏற்படுத்துகிது என்று மலைமலையாகத் தகவல்கள், ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் உலகம் முழுவதும் கதிரியக்கம் புற்று நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம். அதுவே பொய் என்று ஒரு டாக்டரை சொல்லவைக்கிறது இந்திய அரசு. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி ரொம்பத் தெளிவாகவே சொல்ல்யிருக்கிறான்.
இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பிரசாரம் கூடங்குளம் அணு மின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம்.

இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான்.

இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும்

நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.

காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.

சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத் தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !

சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.

இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.

காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ?

இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.

இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.

சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.

வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. .

இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.

இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.

அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும்.

ஏன் இந்திய அரசுக்கு மட்டும் இந்த கொலைவெறியான உலைவெறி?
-gnaani

Thursday, 10 May 2012

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத மந்திரி என்று யரையாவது சொல்லமுடியுமா?


லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு
 

கேள்வி: தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத மந்திரி என்று யரையாவது சொல்லமுடியுமா?


பதில்: காமராசர் ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்த லூர்தம்மாள் சைமன் தான் லஞ்சம் வாங்காத மந்திரி. -துக்ளக் “சோ”


“உண்மையைச் சொல்லவேண்டுமானால் லூர்தம்மாள் சைமன் யாரென்று எனக்குத் தெரியாது. அவர்களுக்கு நூற்றாண்டு விழா வருகிறது என்றும் எனக்குத் தெரியாது” -பிரின்ஸ்(குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்)


1957 முதல் 1962 வரை ஸ்தாபனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் அவர்கள். 1957.ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக குளச்சல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் லூர்தம்மாள் சைமன். அந்த தேர்தலில் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்வானவர் நேசமணி. 'பெருந்தலைவர்' காமராசர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.

காமராசர் ஒன்பதுபேர் கொண்ட மந்திரிசபையை அமைத்தார். சமூகத்தில் பின்தங்கிய, விழிம்பு நிலையில் வாழுகின்ற மக்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள், ஆகியோருக்கு மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்ற பெருந்தன்மையில் அவை எல்லாம் பொருந்தி வரக்கூடிய வகையில் லூர்தம்மாள் சைமனுக்கு மந்திரிசபையில் இடமளித்தார். அவரே தமிழகத்தின் முதல் பெண் அமைச்சரும் ஆனார். காமராசரின் அந்த முடிவுக்கு அப்போது நேசமணியும் ஒப்புதல் அளித்தார். ஆனால் அன்றைய நாடார் சமூகத்தவர்கள், “நேசமணிக்கு மந்திரி பதவி கொடுக்காமல் ஒரு மீனவருக்கு (லூர்தம்மாளுக்கு) மந்திரி பதவி கொடுத்தவர்தானே” என்று காமராசரை விமர்சனம் செய்தனர்.

மீனவ சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வந்த லூர்தம்மாள் சைமன் அளப்பரிய பல செயல்களைச் செய்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அவர் மந்திரியாக பொறுப்புவகித்த ஐந்து ஆண்டுகளும் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் செய்த சாதனைகள் திட்டங்கள் ஏராளம்.

அப்போது தமிழ்நாட்டு மக்கள் பலரும் மருத்துவ வசதியின்றி பெரும் அவதிக்கு ஆளாகினர். மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் கைகளில் இருந்தது. சிறிய வியாதிக்கு மருத்துவ உதவி பெறவேண்டுமானாலும் மக்கள் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஆங்கில மருத்துவம் இருந்த பக்கமே போகாமல் கைமருந்தும், பாட்டி வைத்தியமும், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ உதவியும் பெற்று வந்தனர். ஆங்கில மருத்துவமும், உயிர்காக்கும் உயர் மருத்துவமும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் சென்றுசேர வேண்டுமென்று முடிவு செய்து, பல்வேறு இடங்களில் அரசு பொதுமருத்துவமனைகளை நிறுவினார். குமரிமாவட்டத்தில் கோட்டாறு பகுதியில் அரசு பொதுமருத்துவமனை ஒன்றை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது மாவட்டத்தின் ஒட்டுமொத்த மருத்துவ சேவைக்கும் மொத்த குத்தகைதாரர்கள் என்று தங்களை நினைத்துக்கொண்டிருந்த தனியார் மருத்துமனை முதலாளிகளும் (மருத்துவர்கள்), அவர்களைச் சார்ந்தவர்களும் தங்கள் அரசியல் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அதைத்தடுக்கப் பார்த்தனர்.

ஆனால் “ஏழை மக்கள் மருத்துவ உதவியின்றி கஷ்டப்படுகிறார்கள். பெரும் பணக்காரர்களின் நலனுக்காக இந்த அடிப்படை மக்களுக்கான திட்டத்தைக் கைவிடமாட்டேன்” என்று உறுதியாக நின்றார் லூர்தம்மாள். “அரசு பொதுமருத்துவமனை திட்டத்தை கைவிட்டால் உங்களையே அடுத்த முறையும் எம்.எல்.ஏ ஆக்கி மந்திரியாக்குகிறோம்” என்று லூர்தம்மாளிடம்  நேரடியாக கோரிக்கை வைத்தனர். அதற்கும் அவர் செவி மடுக்காததால் மிரட்டிப் பார்த்தனர். ஒரு கட்டத்தில் லூர்தம்மாளின் கணவர் சைமன் மூலமாகப் பேசி இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.சைமன், லூர்தம்மாளிடம் “1962 தேர்தல் வரையாவது இந்தத் திட்டத்தை கிடப்பில் போடு, தேர்தல் முடிந்து மந்திரியான பிறகு பார்த்துக் கொள்ளலாம், இல்லையேல் அவர்கள் உன்னை தோற்கடித்து விடுவார்கள்” என்று சொன்னார். ஆனால், லூர்தம்மாள் “மக்களின் நலன் காக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன். தேர்தலில் எனது வெற்றியை பெருந்தலைவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறி விடாப்பிடியாக எந்த மிரட்டலுக்கும் பணியாமல், கோட்டாறு அரசு பொது மருத்துவமனையைக் கொண்டுவந்தார். ஆசாரிப்பள்ளத்தில் இயங்கிய காசநோய் மருத்துவமனையில் இலவச மருந்து, ஆய்வகம் மற்றும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினார். ஆய்வகம், அறுவை சிகிச்சை, உயிர்காக்கும் உயர் சிகிச்சை என்று வெளிநாடுகளிலிருந்து மருத்துவ வசதிகளையும் தமிழக மக்களின் நலனுக்காக கொண்டுவந்தார்.

அதன் விளைவுதான் 1962 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருமதி. லூர்தம்மாள் சைமனை பெருந்தலைவர் காமராசர் அறிவிக்க அதே கட்சியைச் சேர்ந்த திரு.சுவாமிதாஸ் நாடாரை சுயேட்சையாக களமிறக்கி, பெரும் தனவந்தர்களும் மருத்துவமனை முதலாளிகளும் சாதி, மத வெறிகளையும் தூண்டிவிட்டு லூர்தம்மாள் சைமனை தோற்கடித்தார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக தன் ஆட்சியை திரு.வி.பி.சிங் இழந்தது போன்று ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன் பதவியை இழந்தவர் லூர்தம்மாள் சைமன். இந்த பிரச்சினையில் தன்னுடையை பேச்சைக் கேட்கவில்லையென்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, லூர்தம்மாளை விட்டு அவர் கணவர் சைமன் பிரிந்து சென்றதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

அன்று அரசு பொது மருத்துவமனையை குமரிமாவட்டத்தில் வர விடாமல் தடுத்த அதே மருத்துவ ஜாம்பவான்கள் தான் அந்த மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரியாக மாறுவதற்கான முயற்சியிலும் தடைகளை ஏற்படுத்தினார்கள். இப்போதும், அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளும், ஆய்வக வசதிகளும், ஆராய்ச்சி மையங்களும் வரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குமரிமாவட்ட அரசு மருத்துக்கல்லூரிக்கு அடித்தளமிட்டவர் 'லூர்தம்மாள் சைமன்'தான் என்று பெருமைபட கூறமுடியும். இந்த சாதனைகளில் லூர்தம்மாள் சைமனின் பெயரை மறந்து கூட யாரும் பயன்படுத்துவதில்லை.

பாரிம்பரிய மீனவ குடும்பத்தில் பிறந்த லூர்தம்மாள் அவர்கள், மீனவர் மேம்பாட்டிலும் அக்கறை காட்டினார். பொருளாதாரத்தில் கடைநிலையில் இருந்த மீனவர்களிக்கு வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற, அவரின் மந்திரி பதவி மிகப்பெரும் உதவி செய்தது. அந்த காலத்தில் மீனவர்களின் கட்டுமரங்களின் வலை மற்றும் மடிகளில் அதிகப்படியான மீன் கிடைக்கும். ஆனால் விலை கிடைக்காததால், எவ்வளவு மீன் கிடைத்தாலும் அது அன்றன்றைக்கான தேவைகளை பூர்த்தி செய்வதாக மட்டுமே இருந்தது. மீன் விலை மலிவாகும் போது மீனெல்லாம் வீணாகப் போவதும் உண்டு. லூர்தம்மாள் மந்திரியானதும் கடலோரத்தைத் ஒட்டியுள்ள உள்நாட்டுப் பகுதிகளில் மீன் விற்பனை செய்யும் சந்தைப் பகுதிகளை உருவாக்கினார்கள். இன்று மிகப் பிரபலமாக இருக்கும் சந்தைகள் அனைத்தும் மீன் விற்பனையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டவைதான். தமிழகத்தின் பல பகுதி மக்களின் விளைபொருட்களையும் சந்தைப்படுத்தும் சந்தைமுறையை உருவாக்கியது மீனவர்கள்தான் என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சந்தைகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து நவீனப்படுத்தி சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு, போன்ற பல்வேறு காரியங்களை செய்தார்.

மீனவர்களின் தொழில் வளத்தை மேம்படுத்த, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க, ஏற்றுமதி ஏற்ற தரமான மீன்களைப் பிடிக்க இயந்திர மயமாக்கப்பட்ட துயரமான ஓன்றுபடகுகளை அறிமுகப்படுத்தினார். இந்தோ - நார்வே தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பஞ்சு நூல்களுக்குப் பதில் பட்டுநூல், கங்கூஸ், நவீன தூண்டில்கள், டிஸ்கோ வலை, என்று அவர் கொண்டு வந்த பயன்கள் ஏராளம். ஏழை எளிய மீனவர்களுக்கு கூட்டுறவுசங்கங்கள் உருவாக்கி, நான்குபேர், ஜந்துபேருக்கு ஒரு விசைப்படகு என்று மானிய விலையில் வழங்கினார். விசைப்படகுகளை அறிமுகப்படுத்தி நவீன முறையில் மீன்பிடி முறைகளைக் கொண்டுவந்த்தால் பாரம்பரிய கட்டுமரம் மற்றும் கரமடி தொழில் பாதிகப்படும் என்று அவர் சார்ந்த மீனவர் இனமே பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. விசைப்படகு வைத்திருப்பவர்கள் வீடுகளும், விசைப்படகுக்கு ஆதரவான கிராமங்களும் பாரம்பரிய மீன் பிடி தொழில் செய்பவர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. . லூர்தம்மாள் சைமன் மீதான பாரம்பரிய மீனவர்களின் வெறுப்பாகவும் இது மாறியது. இவை எதையும் பொருட்படுத்தாமல் அந்த திட்டங்களை அவர் நிறைவேற்றியதால், மீனவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு ஏற்பட்டது. அவர் செய்த தொழில் புரட்சி மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியதோடு, இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டி தந்து, வெளிநாடுகளில் மீன் உணவு ஏற்றமதி மூலம் மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்கச்செய்தார். கடலில் இறக்கும் மினவர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களையும் லூர்தம்மாள் சைமன் நிறைவேற்றித் தந்தார். இன்று மீனவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் பலவற்றிற்கு அஸ்திவாரம் அமைத்தவர் லூர்தம்மாள் சைமன் அவர்கள்.

வறுமையில் வாடும் மக்களுக்கும், வேலை வாய்ப்பற்ற கிராமத்து மக்களுக்கும் அவர்கள் பசியைப்போக்க பல திட்டங்களை கொண்டுவந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அடுப்பு எரிப்பதற்காக காட்டுமரங்களை வெட்டி இயற்கையை அழிப்பதைத் தடுக்கவும், அடுப்பு எரிக்க மாற்று விறகை உருவாக்கவும், வருமானமில்லாத கிராமப்புற மக்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தவும், ஒடை மரங்களை (முள்ளுமரம்) வளர்க்க உத்தரவிட்டார். அதனால் ஒடை மரங்களுக்கான விதைகளை ஹெலிகாப்டர்மூலம் தூவி நாடு முழுவதும் பச்சைப் பசேலென்று மரங்கள் வளர்ந்தன. அது நாட்டைப் பசுமையாக காட்டியதோடு ஏழை எளிய மக்களின் வறுமை நிலையையும் ஓரளவு நீக்கியது. காலப்போக்கில் அந்த முள் மரங்களே அழிக்க முடியாத பெரும் இடைஞ்சலாக வளர்ந்து நிற்பது வேறுகதை. ஆனால் அந்த மரம் வளர்ப்பதில் காமராசரின் நோக்கம் கபடமில்லாதது.

அப்போது லூர்தம்மாள் சைமன், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் மீன்பிடித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த உள்நாட்டு மீனவர்களின் பொருளாதார நிலையில் முன்னேற, வெளிநாடுகளிலிருந்து சிலோப்பியா மீன் இனங்களை கொண்டுவந்து ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் விட்டு வளர்த்தார். சிலோப்பியா மீனைப் பொறுத்தவரை மிக வேகமாக வளரக்கூடியது. அதனால் உள்நாட்டு மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைத்தது. சிலோப்பியா மீன்களை ஏரி, குளங்களில் வளர்த்ததோடு, அதை பராமரித்து வளர்த்து மீன்பிடிக்கும் உரிமையும் உள்நாட்டு மீனவர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்கப்பட்டது. தற்போது உள்நாட்டு நீர் நிலைகளில் மீன்பிடிககும் உரிமையை உள்நாட்டு மீனவர்கள் இழந்து வருகிறார்கள் என்பது துயரமான ஓன்று.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பள்ளிகள் லூர்தம்மாள் சைமனின் முயற்சியால் நிறுவப்பட்டவை. பள்ளிகளுக்கு அரசு அனுமதி, ஊதியமில்லா ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம், பள்ளிக் கட்டிடங்கள், குடிநீர், கழிவறை வசதிகளைப் பெற்று தந்த லூர்தம்மாள் சைமனின் பெயரைச் சொல்லி இன்றும் உயர்ந்து நிற்கின்றன பல பள்ளிகள்.

படித்த பலருக்கு வேலைவாய்ப்பு, இல்லையென்று வருபவர்களுக்கு நிதி உதவி, தொழில் தொடங்க வங்கிக்கடன் உதவி, மருத்துவ வசதி கிடைக்காத வறியவர்களுக்கு உயர் சிகிச்சை உதவி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று லூர்தம்மாள் சைமன் அவர்களால் பயன் பெற்றோர் பலபேர் சாட்சியம் சொல்கிறார்கள்.
கன்னியாகுமரி கடலில் இருக்கும் பாறை பாரம்பரிய மீனவர்களின், மீன்பிடி உரிமை பகுதியாக இருந்தது. பாறையில் ஒரு சிலுவையை நிறுவி அங்கே வழிபாடுகள் நடத்தியதும், தங்கள் குடும்பங்களுடன் விழா கொண்டாடியதும், கடலில் மீன்பிடிததுத் திரும்பும் போது களைப்பைப் போக்க ஓய்வெடுப்பதும், அதிகமான மீனைக் கொண்டுவந்தால் அதை அந்த பாறையில் போட்டு உலர்த்துவதும், வலைகள் போன்ற தொழில் யாத்தினங்களை காயவைப்பதும் என்று தங்கள் வாழ்வாதார இடமாக அந்தப் பாறையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சங் பரிவார் அமைப்புகள் கன்னியாகுமரி கடலில் இருந்த பாறையை அபகரிக்க சதி செய்தது. அதனால் அங்கே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார் என்று கூறி மீனவர்களின் பூர்வீகப் பாறையை அவர்களிடமிருந்து பறித்து விவேகானந்தருக்கு மண்டபம் அமைக்க அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். லூர்தம்மாள் சைமன் மந்திரியாக இருந்த ஜந்து ஆண்டுகளும், அதன்பின் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி செய்த காலம் முழுக்கவும் சங் பரிவார்-ன் சதி வேலைகளை தடுத்து நிறுத்தினார். அந்தப் பாறை மீனவர்களின் வாழ்வாதார இடம் அதில் சங்பரிவார் அமைப்புகளுக்கு இடமளித்தால் மக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என்று காமராசருக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார். அவர் கூற்றின் உண்மையை புரிந்துகொண்டு காமராசர் தன் ஆட்சிகாலம் வரை பிரிவினைவாதிகளின் சதியை தடுத்து நிறுத்தினார்.

காமராசருக்குப் பின்வந்த ஆட்சியாளர்களிடம் மீனவர் தரப்பிலான நியாயங்களைக்கூறி புரிய வைக்க யாரும் இல்லாத்தால் சங்பரிவார்.-ன் திட்டமிட்ட செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி, மீனவ நண்பனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், அந்த பாறையில் மீனவர்களுக்கான உரிமை முற்றிலுமாகப் பிடுங்கப்பட்டு, விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டு அது விவேகானந்தா கேந்திரத்தின் பராமரிப்பில் விடப்பட்டது. மண்டைக்காடு கலவரத்தின்போது கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.-காரர்களுக்கு போர்ப்பயிற்சியும் ஆயுதப்பயிற்சியும் நடைபெற்றதாகவும், கேந்திரத்தில் மதத் தீவிரவாதிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப் படுவதாகவும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

1962 தேர்தலில் சதியாலும் துரோகத்தாலும் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டாலும் மக்கள் பணியிலிருந்து லூர்தம்மாள் ஒதுங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றினார். எனக்குத் தெரிந்து என் முதல் நினைவே எழுபதுகளின் துவக்கத்தில் லூர்தம்மாள் சைமன் தலைமையிலான மீனவர்களின் பேரணியும், பொதுக்கூட்டமும்தான் கடலோர மக்கள் சங்கம் நடத்திய பேரணியில்

“சி.பி.ஓ.சிந்தாபாத்
கடலோர மக்கள் சிந்தாபாத்
ஓட்டுப் போட நாங்கள் வேண்டும்
சாதனை ஒன்றும் எங்களுக்கில்லை”
என்ற முழக்கமும், அந்தப் பேரணியில் தலைமை ஏற்றுவந்த லூர்தம்மாள் சைமனின் உருவமும் தான் என் நினைவடுக்குகளில் முதல் இடத்தில் உள்ளது.

மண்டைக்காடு கலவர காலங்களில் தன் முதிர்ந்த வயதிலும் கடற்கரை மணலில், பொழியும் பனியில் ஒரு போர்வையை மூடிக்கொண்டு கலவரப் பகுதியில் நேரடியாகச் சென்று அமைதி முயற்சியில் ஈடுபட்டது மறக்க முடியாதது. கலவரம் செய்ய, மீனவர் கிராமங்களுக்குள் அத்துமீறி புகுந்து, மீனவர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பலருக்காக, மனிதநேயம் பேசி அயலானுக்கு அன்பு செய்யச் சொன்ன இயேசுவின் போதனைகளை எடுத்துக்கூறி மீனவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தவர் லூர்தம்மாள் சைமன். இரவு பகல் பாராது மக்களுடன் இருந்து அமைதி முயற்சியில் ஈடுபட்டார்.

1912 செப்டம்பர் 26-ல் மணக்குடி கிராமத்தில் பிறந்த லூர்தம்மாள் சைமனுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. காமராசர் ஆட்சிகாலத்திலிருந்த தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட காங்கிரசும், தி.மு.க, அ.தி.மு.க அரசுகளும் போட்டி போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் மீனவ சமூகத்தில் பிறந்தவர் என்ற காரணத்தால் லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசுகளும், காங்கிரசும் மறுக்கின்றன. கடந்த தி.மு.க ஆட்சியின் போது அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட கோரி்க்கை வைத்தபோது, 'அவர் காங்கிராஸ் கட்சிக்காரர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இந்த கோரிக்கையை வைக்கச் சொல்லுங்கள்' என்றார்.

காமராஜருக்கும், கக்கன்ஜிக்கும், சி.சுப்ரமணியத் திற்கும் நூற்றாண்டு விழா கொண்டாடினார்களே! அவர்களும் காங்கிரஸ்காரர்கள் தானே! தற்போதைய அரசு, லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் நேசமணி, காங்கிரஸ் குஞ்சன்நாடார், சிதம்பரநாதன் போன்றோருக்கெல்லாம் மணிமண்டபமும், கௌரவமும் வழங்கும்போது லூர்தம்மாள் சைமனை மட்டும் புறக்கணிப்பது எதனால்? அவர் மீனவர் என்பதாலன்றி வேறென்ன இருக்கமுடியும்?

சரி தங்கள் தலைவருக்கு விழா எடுக்கவேண்டுமென்று கேடுகெட்ட காங்கிரசுக்காவது அக்கறை இருக்கிறதா? மாவட்ட காங்கிரசுக்காவது அக்கறை இருக்கிறதா? மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் லூர்தம்மாள் சைமனைப் பற்றி தெரியாது என்கிறார். இவர் என்ன அரசியலைப் படித்தாரோ? ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைக் கேட்டால், அவர் அப்போதைய தலைவர் தங்கபாலுவைக் குற்றம் சாட்டுகிறார், தலைவர் என்ன செய்கிறாரோ தெரியவில்லை. மக்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினால் நான் வந்து பேசுகிறேன் என்கிறார். மக்கள் மேடை அமைத்துக் கொடுத்தால் இவர்கள் பெயர் வாங்கிக் கொண்டு போவார்களாம்.

ஆனால் மீனவ மக்கள் தங்கள் தலைவியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கும் கோரி்க்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*தமிழக அரசு லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
*அவர் பிறந்த மணக்குடியில் கட்டப்பட்டு வரும் இணைப்புப்பாலத்திற்கு 'லூர்தம்மாள் சைமன்' பெயர் சூட்ட வேண்டும்.
*கன்னியாகுமரி அல்லது அவர் போட்டியிட்டு வென்ற குளச்சல் தொகுதியில் ஒரு மணிமண்டபம் அமைக்கவேண்டும்.
*குளச்சல், காந்தி சந்திப்பில் லூர்தம்மாள் சைமன் முழு உருவச் சிலை அமைக்கவேண்டும்.
*தேங்காப்பட்டணம் மீன்பிடித்த துறைமுகத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டவேண்டும்.

மீனவ மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அப்பழுக்கற்ற தலைமையைப் போற்றவேண்டும். kurumpanai c berlin.

Friday, 4 May 2012

இந்தியாவின் முதல் கிறிஸ்தவம் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-4]கிறிஸ்தவம் தழுவிய மீனவ மக்கள்.

சோழர்களை பிற்காலப் பாண்டியர்கள் வென்றதும் பாண்டியர்கள் அராபியர்களுடன் குதிரை வர்த்தகத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.  அராபியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சுமூக உறவு ஏற்படுகிறது. பாண்டியர்கள் முத்துக்களைக் கொடுத்து அராபியக் குதிரைகளை தங்களின் படை, பயணத் தேவைகளுக்காக தருவித்திக் கொண்டனர். பாண்டியர்களின் ஆட்சியில் அராபியர்கள் செல்வாக்கோடு அரசுப் பதவிகளை அனுபவித்தனர். அராபிய வணிகர்களோடு பாண்டியர்களின் நெருக்கமும் அதனால் உருவான செல்வாக்கின் காரணமாகவும் அராபியர்கள் பாண்டிய மன்னனுக்கு திறை செலுத்து விட்டு முத்துக்குளிக்கும் உரிமையை கைப்பற்றினார்கள். கொற்கை வண்டல் படிந்து நிலமான பின்னர் புதிய துறைமுகமாக உருவான பழைய காயல்துறைமுகத்தை தேர்ந்தெடுத்த அராபிய மூர்கள் ஆட்சி செய்தனர். ஏற்கனவே மலபார் கரையில் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததோடு காயலையும் கைப்பற்றியதால் கீழைக்கரையோரத்திலும் மேற்குக் கரையோரத்திலும் அராபியர்கள் செல்வாக்குப் பெற்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமையுடன் இருந்த பாண்டியர்கள் இலங்கையை வென்று முத்துக்குளித்தல் உரிமையையும் கைப்பற்றி முழு வலிமை பெற்றனர். பதினான்காம் நூற்றாண்டில் வடக்கிலிருந்து நடந்த முஸ்லீம் படையெடுப்பால் பாண்டியர்களின் செல்வாக்குச் சரிந்தது. இதுவும் பரதவர்கள் மீது மூர்கள் செல்வாக்குச் செலுத்த ஒரு காரணமாக அமைத்தது.

இதுவரை பாண்டியர்கள், சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக விளங்கிய கடலோரத்தில் அராபியர்கள் முழு உரிமையும் கொள்ளத் துவங்கினார்கள். ஏனைய எல்லா ஆட்சியாளர்களையும் விட அராபியர்கள் மலபாருக்கு (கேரளக்கரை) க்கு வந்து குடியேறிய பின்னர் அங்கு வாழ்ந்த மக்களோடு கலந்து திருமண உறவுகளை மேற்கொண்டதன் விளைவாய் பல குழுக்கள் தோன்றினார்கள். மிளகு வணிகத்தில் கொடி கட்டிப்பறந்த கொச்சி, மலபார் பகுதிக்கு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் வந்த அராபியர்கள் அடித்தட்டு மக்களோடு மண உறவு கொண்டதன் விளைவாய் மலபாரில் மாப்பிளாக்கள் உருவானார்கள். கடலோரச் சமூகங்களோடு அராபியர்கள் கொண்ட மண உறவாலும் மத மாற்றத்தாலும் மாப்பிள்ளாக்கள் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாப்பிளாக்கள் அடித்தட்டு சமூகமாக இருந்து இன்று கலாச்சாரத்தில் மிகச் சிறந்த இனமாக கேரளாவில் உள்ளனர். மரபு வழிபட்ட அவர்களின் இசையறிவு வியக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்திய சமஸ்தானங்களின் மன்னர்கள் அந்தந்த பகுதிகளில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடினாலும் அதை சுதந்திரப் போராட்டமாக வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் அதே நேரம் மாப்பிளாக்களின் கிளர்ச்சி சுமார் ஐம்பதாண்டுகாலம் வீரம் செறிந்த விவசாயிகளின் கலகமாக கேரளத்தில் நடந்ததெல்லாம் தென்னிந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகள்.

அராபியர்கள் பரவர்கள்,முக்குவர்களுடன் திருமண உறவிலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டதன் விளைவாய் தமிழகத்தில் லெப்பைகள், மரக்காயர்கள் தோன்றினார்கள். இது போல இந்தியா முழுக்க ஷேக்குகள், சியாட் முஸ்லீம்கள், தைரா முஸ்லீம்கள், பட்டானிய முஸ்லீம்கள் என பல இஸ்லாமியச் சமூகங்கள் தோற்றம் பெற்றன. தெற்கில் உருவான இஸ்லாமிய சமூகங்களின் தோற்றம் பெருமளவு கடற்கரை மக்களோடு கொண்ட உறவால் உருவானதாகவும் தெரிகிறது. பரவர்களில் முஸ்லீம் மதத்திற்கு மாறியவர்கள் மரக்காயர்கள் ஆனார்கள். முக்குவர்களோடு கொண்ட உறவில் லெப்பைகள் தோன்றினார்கள். இப்போதும் தமிழக கடலோரங்களில் இராமேஸ்வரம் தொடங்கி கேரளக் கரையோரமான நீரோடி வரை இஸ்லாமிய மக்கள் கடல் சார் வணிகத்திலும் ஈடுபடுகிறார்கள்.

புதிய சமூகங்களின் தோற்றம் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. முத்துக்குளித்து அதை அப்போது நிலவிய சமூக வர்த்தக நிலைக்கு ஏற்ப கொடுத்து வந்த பரதவர்களோடு அராபிய மூர்களின் வழித்தோன்றல்களாக மாறி விட்ட தங்களின் பழைய சகாக்கள் முத்துக்குளிக்க கடலில் மூழ்குவதை பரவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. காயல்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட அராபிய மூர்கள் நேரடியாக பரவர்களின் உற்பத்தியில் கைவைத்தனர். அவர்களை மதம் மாறக் கேட்டு அதற்கு போதுமான ஆதரவு இல்லாமல் போனபோது அவர்கள் தங்களின் உறவினர்களாக உருவாகியிருக்கும் மக்களை முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தினார்கள்.விளைவு பரவர்கள் முதன் முதலாக தங்களின் உரிமை பறிபோனதாக நினைத்தனர். பிற்காலப் பாண்டியர்களிடம் பரவர்கள் உதவி கேட்ட போது அவர்களோ அராபிய  மூர்களிடம் கிடைக்கும் லாபங்களைக் கருத்தில் கொண்டு பரவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். தவிரவும் பரவர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதிலும், பாண்டியர்களுக்கு உள்ளூர் பரவர்களால் தொடர் தொல்லைகள் இருந்த நிலையில் பாண்டியர்கள் பரவர்களைக் கைவிட்டனர். மூர்களால் கிடைக்கும் ஆதாயத்தை கணக்கிட்டு அவர்கள் அந்த முடிவை எடுத்தனர்.

போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அராபியர்கள் காயல் துறைமுகத்திற்கு வந்தனர். மலபாரில் தொடங்கி கீழைக்கடல் வரை செல்வாக்குச் செலுத்திய மூர்களை பரவர்கள் எதிர்த்தாக வேண்டிய தேவை எழுந்தது. தாங்கள் முத்தெடுத்து சந்தை மூலம் விற்பனை செய்த காலம் மாறி நேரடியாக உற்பத்தியிலேயே மூர்கள் கைவைத்தமை பரவர்களுக்குள் கடும் கொந்தளிப்பை உருவாக்க ஒரு தாக்குதலுக்கான சூழலை அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் ஒரு பரவனுக்கும் மூருக்கும் வந்த தகராறில் பல நூறு மூர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் படகுகள் சேதப்பட்டுத்தப்பட்டதான தகவல்கள் இயேசுசபை ஆவணங்களில் உள்ளது.

மேற்குக் கரை திருவிதாங்கூர் மன்னரின் அதிகாரத்தின் கீழும், வடக்குப்பகுதியின் பெரும்பகுதியை மதுரை நாயக்க மன்னர்களும் ஆட்சி செய்ய 1516 - ஆம் ஆண்டில் பழைய காயல் உள்ளிட்ட பெரும்பலான கடலோரத்தை இராமேஸ்வரம் தொடங்கி கேரளக்கரை வரை அராபிய மூர்கள் ஆட்சி செய்தனர்.

சிறு தெய்வங்களையும், இயற்கையையும் வழிபட்டு வந்த மீனவர்களைக் காப்பாற்ற குலசேகரப்பாண்டியனோ, உன்னி கேரள வர்மனோ, மார்த்தாண்ட வர்மாவோ, வெட்டும் பெருமாளோ என பரவர்கள் பலரிடமும் உதவி கேட்க, அன்று அவர்களுக்கு உதவ யாரும் தயாராக இருக்கவில்லை, இத்தகைய மோதல் உருவாகாமல் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பை வழங்கவும் இல்லை. கடைசியில் அவர்களும் வலுவிழந்து ஆட்சியைப் பறிகொடுத்தனர். யாவராலும் கைவிடப்பட்ட நிலையில் மூர்களைத் தாக்கியளித்ததற்கு பதலடியாக, கோழிக்கோட்டில் இருந்து படை திரட்டி வந்து மூர்கள் தங்களைத் தாக்குவார்கள் என்று அஞ்சினார்கள் பரவர்கள். முத்துக்குளித்துறையில் மூர்களுக்கும் பரவர்களுக்குமான மோதல் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இந்த நாட்களில் தொடர்ந்து பரவர்கள் மூர்களை தாக்கியதாகவும் மீனவர்களின் குடியிருப்புகளை மூர்கள் தீக்கிரையாக்கி பலரைக் கொன்றதாகவும் தகவல் குறிப்புகள் உள்ளன. தங்களையும் தங்களின் முத்துக்குளித்தல் தொழில் உரிமையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பரவர்கள் எடுத்த முடிவுதான் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியமை.

வாஸ்கோடகாமா சிலுவைகளோடு வந்த எஜமானன்.

பொதுவாக இந்தியாவில் மதமாற்றம் என்பது சாதீயக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வாழ்க்கை விடிவுக்காகவும் தங்களின் ஆன்மீகச் சுதந்திரத்திற்காகவும், சமத்துவ வாழ்விற்காகவுமே மதம் மாறுகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத மாற்றத்தின் மூலம் தங்களை வளர்த்துக் கொள்வதும் கண்கூடான நிகழ்வாக உள்ளது. ஆனால் தென் தமிழகத்தில் மதம் மாறிய பரவர்களுக்கோ, முக்குவர்களுக்கோ அப்படி எந்த ஒரு சாதிக் கொடுமைகளும் இல்லை. அவர்கள் சந்தித்ததோ உற்பத்தியில் தங்களுக்கான உரிமையை இன்னொருவர் பறித்துக் கொள்வது தொடர்பான பிரச்சனை, முத்துக்குளித்தலில் இருக்கும் தனி உரிமையை அராபியர்கள் பறித்த போது, அவர்களிமிருந்து முத்துக்குளிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான மோதல்தான் அராபியர்களுக்கும் பரவர்களுக்குமான மோதலாக நடந்தது. அதே உரிமையை எப்படியவாது காப்பாற்ற வேண்டுமென்றுதான் பரவர்கள் முதன் முதலாக கிறிஸ்தவம் தழுவினார்கள்.

1498- ஆம் ஆண்டு மே - திங்கள் இருபதாம் நாளில் ஐய்ரோப்பிய மாலுமியான வாஸ்கோடகாமா நன்னம்பிக்கைமுனையைச் சுற்றி கள்ளிக்கோட்டைக்கு வந்திறங்கியதுடன் போர்த்துக்கீசியரின் வருகையும் வணிகமும் துவங்குகிறது. அன்றைய காலச்சூழலில் துருக்கிப் பேரரசை மீறி கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு நுழைய முடியாத நிலையில் ஐய்ரோப்பியர்களுக்கு ஆசியாவுக்கான கடல் வழியைக் கண்டு பிடிக்க வேண்டிய தேவையிருந்ததன் அடிப்படையில்தான் வாஸ்கோடகாமா போர்ச்சுக்கல்லில் இருந்து தன் போர் வீரர்களுடன் பயணத்தைத் துவங்கினார். உரோமப்பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோப்பிள் என்று அழைக்கப்பட்ட இஸ்தான்புல்லை 1453- மே-29-ஆம் நாள் துருக்கிப் படைகள் கைப்பற்ற அது ஒரு நகரின் வீழ்ச்சி மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவோடு முத்து, மிளகு, உள்ளிட்ட நறுமணப்பொருட் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐய்ரோப்பிய வணிகர்களின் சந்தைச் சரிவாகவும் இருந்தது. இஸ்தான்புல்லை துருக்கியர்கள் வீழ்த்தியபோது  தென்னிந்தியாவில் ஐய்ரோப்பியரின் செல்வாக்கு சரிந்து  கீழைக்கடலோரத்திலும், மேற்கு கடலோரத்திலும் அராபியர்களின் செல்வாக்குப்பெற இஸ்தான்புல்லின் வீழ்ச்சியும் ஒரு காரணமாக இருந்தது.
அதுவரை ஐய்ரோப்பாவை அடைய இந்தியாவிலிருந்து மூன்று கடல் வழிகளை ஐய்ரோப்பியர்கள் பயன்படுத்தினார்கள். எகிப்தின் வழியாக ஐய்ரோப்பாவுக்கு, ஆக்சஸ், காஸ்பியன், கருங்கடல் வழியாக ஐய்ரோப்பாவுக்கு, சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐய்ரோப்பாவுக்கு என மூன்று வழிகள் மூலம் வணிகம் நடந்தது. துருக்கியர்கள் இஸ்தான்புல்லை வென்றி கண்டதன் மூலம் இந்த வழிகளில்  ஐய்ரோப்பியரின் செல்வாக்கு குறைந்தது, அல்லது நெருக்கடியைச் சந்தித்தது, புதிய கடல் வழியொன்றை கண்டு பிடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஸ்பானிய, போர்த்துக்கீசிய மாலுமிகள் ஆப்ரிக்கக் கடல் வழியாக தென்னிந்தியாவுக்கு புதிய கடல் வழியை கண்டு பிடிக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் பயணத்தைத் துவங்கினார்கள்.

வணிகமும், கூடவே கிறிஸ்தவத்தை பரப்புவதுமே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இம்மாதிரியான ஒரு முயற்சியில் ஈடுபட்ட போர்த்துக்கீசிய மாலுமியான பார்த்தலமேயூ டயஸ் (Bartolomeu Dias) 1487 -ல் நன்னம்பிக்கை முனையை அடைந்து போர்த்துக்கல்லுக்கு திரும்பிச் சென்று விட அடுத்து மூன்று கப்பல்களில் போர் வீரர்களோடு வந்தவர்தான் வாஸ்கோடகாமா.
வாஸ்கோடகாமாவின் வரவோடு போர்த்துக்கீசியர் இந்தியாவிலும் இலங்கையிலும் படந்து அதன் தொடர்ச்சியாக டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் வந்து நம்மை காலனித்துவ குடி மக்களாக ஆக்கியதுமான வரலாற்றின் துவக்கம் என்பதால் வாஸ்கோடகாமாவின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.வாஸ்கோடகாமா போர்ச்சுக்கல்லுக்கு ஒரு வருடத்தில் திரும்பி விட்டாலும், போர்த்துக்கீசியர் முதன் முதலாக குடியேறியது கொச்சியில். அவர்கள் கரைக்கு வந்த போது செல்வாக்கோடு திகழ்ந்த அராபியர்களை வெல்வதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர்.

1502- ல் அவர்கள் கள்ளிக்கோட்டையை அராபியர்களிடமிருந்து கைப்பற்றி  அங்கு ஒரு ஆலையை நிறுவினர். மேற்குக்கரையோரத்தில் கால் பதித்த போர்த்துக்கீசியர் கிழக்குக் கரையோரத்தை கைப்பற்றும் திட்டங்களோடு அராபியர்களைக் வீழ்த்த தருணம் பார்த்துக் காத்திருந்த அதே நேரத்தில்தான்.பரவர்களுக்கும் அராபிய மூர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உதவிகளுக்காக காத்திருந்தனர்.

தெற்கில் கொடுமைகளைச் சந்தித்து பதட்டமாக வாழும் பரவர்கள் கொச்சியில் இருக்கும் போர்த்துக்கீசியரிடம் உதவி பெற்று மூர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுமாறு ஜான் டி குரூஸ் என்பவர் பரவர் சாதி தலைவர்களான பட்டங்கட்டிகளுக்கு அறிவுரை வழங்க பட்டங்கட்டிகள் கொச்சிக்குக் சென்று போர்த்துக்கீசியரின் உதவியை நாடிய போது அவர்கள் மதத்தை ஒரு பாதுகாப்பான கருவியாக பயன்படுத்தினார்கள். மதம் மாறும் கோரிக்கையை அவர்கள் வைக்க, பட்டங்கட்டிகளும் வேறு வழியில்லாமல் கிறிஸ்தவத்தை தழுவ சம்மதித்தனர். கொச்சிக்கு உதவி கேட்டு தூது சென்ற பட்டங்கட்டிகளுக்கு கோவாவின் தலைமை குருவாக இருந்த மிக்கேல் வாஸ்சும். கொச்சின் பங்குகுருவாக இருந்த கொன்சால்வஸ் அடிகாளாரும் ஞானஸ்நானம் வழங்கி திருமுழுக்கு அளித்தனர்.

1536-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் போர்த்துக்கீசிய தளபதியான பேதுருவாஸ் தலைமையில் பெரும் கப்பற்படை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு வேதாளை என்ற இடத்தில் அராபிய மூர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் போர் நடந்தது. காயல்பட்டினம் மூர் மன்னன் கொல்லப்பட்டு போர்த்துக்கீசியர் காயல்பட்டினத்தை கைப்பற்றியதுடன் கீழைக்கடலோரத்திலும் போர்த்துக்கீசியர் கால் பதித்தனர்.

காயல்பட்டினத்தில் இருந்து ஆட்சி செய்த 500 ஆண்டுகால மூர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாதிரியார் மைக்கேல் வாஸின் முன்னிலையில் தூத்துக்குடி, பழையகாயல், புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு, திருசெந்தூர், உள்ளிட்ட ஏழு கடற்துறையச் சார்ந்த முப்பதாயிரம் மக்கள் கூட்டமாக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவினார்கள். இது இந்தியாவின் முதல் மதமாற்றம் அல்ல பரவர்களிடம்  மதமாற்றம் நடப்பதற்கு முன்பே சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளத்தில் தோன்றிவிட்டார்கள். இந்தியாவின் முதல் பள்ளிவாசலும், தேவாலையமும் கேரளாவில்தான் தோன்றியது. ஆனால் பரவர்களின் மதமாற்றம் என்பது தமிழகம், மற்றும் இலங்கையில் கிறிஸ்தவத்தின் பரவலுக்கு அஸ்திவாரமாக அமைந்ததோடு, இலங்கையையும் போர்த்துக்கீசியர் கைப்பற்ற வழிகோலியதும் இந்த மதமாற்றமே. ஒரு புதிய வரலாற்றில் துவக்கமாக இந்த மதமாற்றம் நடந்தது என்றாலும் இது குறித்த ஆய்வுகளே தமிழில் இல்லை. பெருந்தொகையான மக்கள் மதம் மாறிய அந்த ஆண்டு கிபி 1537 என்கிறது உரோம ஆவணங்கள். தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் மட்டும் அப்போதிருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டாயிரத்திற்கும் மேல்.


ஆனால் இந்த மாதமாற்றம் காலனித்துவத்தின் வரவை வலுவாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையினூடாக அறிவித்தது. அடுத்தடுத்து போர்த்துக்கீசியர் இலங்கையைக் கைப்பற்ற கிழக்குக் கரையோர முத்துக்குளித்துறை அவர்களுக்கு கேந்திர முக்கியத்துவமான பகுதியாக இருக்க அவர்கள் பாரம்பரிய மீனவர்களான பரவர்களையும், முக்குவர்களையும் அடுத்தடுத்து மதம் மாற்றினார்கள். இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒட்டு மொத்தமாக நீளமாக வாழ்ந்த சமூகம் தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றியாக கிறிஸ்தவத்தைத் தழுவியது. இடையில் மூர்களிடம் பறி கொடுத்த முத்துக்குளிக்கும் உரிமையும் வரிச்சலுகைகளும் மீண்டும் பரவர்கள் கைக்க்கு வந்தது.


ஆனால்,
மதம் மாறிய பரவர்கள் அனைவருமே மேன்மை தாங்கிய போர்ச்சுக்கல்  மன்னனின் குடி மக்களாக அறிவிக்கப்பட்டார்கள். போர்த்துக்கீசியரால், புதிய எதிரிகள் தங்களைத் தாக்கவும், நிற்க நிழலில்லாமல் ஓடவுமான ஒரு புதிய வாழ்வு சிலுவையின் பெயரால் அவர்கள் மீது சாத்தப்பட்டது.

இறுதியாக,

எங்கள் கடலில்
வளமான முத்துக்கள் இருந்தன.
நினைவெட்டாக் காலத்திலிருந்தே
எங்கள் முன்னோர்கள்
கண்டெடுத்த இயற்கைச் சொத்து அது.

கொற்கையிலும்
மன்னாரிலும்
பூம்பட்டினத்திலுமாக
வருடத்திற்கு ஒரு போகம் முக்குளித்தோம்.
மேற்கிலிருந்து வீசியக் காற்று
கொற்கைக்கும்
கீழைக்காற்று மன்னாருக்குமாக
முத்தைக் கொட்டிக் கொடுத்தது
அந்த இயற்கையின் சொத்துக்கு
எங்கள் முன்னோர்கள் அதிபதிகளாக
இருந்தனர்.

பண்டையில் பாண்டியர்களும்
சோழர்களும்
அராபியர்களும்
கிரேக்கர்களும்
ரோமர்களும்
தின்றது போக
மீதியை
நவாப்களும்
நாயக்க மன்னர்களும் தின்றார்கள்.
கடைசியில் அவர்கள் சிலுவைகளோடும்
பைபிளோடும் வந்தார்கள்.
கானலப் பெருந்துறையான
எங்கள் மூதாதைகளின் கடலில்
இப்போது முத்துக்கள் இல்லை.
மன்னாரிலும் கீழைக் கடலோரத்திலும்
வாழும் எங்கள் கைகளில் ஜெபமாலையும்
பைபிளுமே உள்ளது.
பிரமாண்ட தேவாலையங்களில்
நாங்கள் இப்போது தேரிழுத்துக் கொண்டிருக்கிறோம்.
பிதாவே, என்னை மன்னித்தருளும்.
ஆமென்.


தொடரும்..........

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்1 ] டி.அருள் எழிலன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாப்ளா போராட்டத்தை விவசாயிகளின் எழுச்சி என்று பதிவு செய்கிறது வரலாறு.  பிரிடீஷாருக்கு எதிரான கிளர்ச்சியில் பங்குபெற்ற  மைசூர் சமஸ்தானமும் அதன் கீழ் இயங்கிய குட்டிக் குட்டிக் சமஸ்தானங்களும் வரிகொடா கலகத்தைத் துவங்கிய போது அதுவும் விவசாய மக்களின் போராட்டமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.  ஒரு வர்க்கமாக விவசாயிகளை அடையாளப்படுத்தவும் பொது வெளியில் அதை அங்கீகரிக்கவும் செய்யும் பொது மனம்.

மீனவர்களை ஒரு சாதியாகக் காண்கிறது. பரமக்குடியில் தலித்துக்கள் மீதான இனப்படுகொலையை நாம் பேசும் போது அவர்களை தலித் என்று சொல்லாதீர்கள். தமிழர்கள் என்று சொல்லுங்கள் என்று சொல்லும்  தமிழ் தேசியர்கள். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 25 ஆண்டுகளாக போராடும் மீனவ மக்களின் அடையாளங்களையும் மறுத்து தமிழர் போராட்டம் என்று அடையாளப்படுத்த முனைகிறது. ஆனால் அரசோ போலீசோ திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய திமுகவோ, அதிமுக மிகத் துல்லியமாக அந்த மக்களின் புவியியல் வதிவிடத்தையும் அது சம வெளி அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையும் புரிந்துள்ளதால் மட்டுமே போலிசை இறக்கி அடக்கு முறையை ஏவுகிறது. மக்கள் சமூகங்களின் தனித்த அடையாளங்களை அங்கீகரிக்க மறுக்கும் சம வெளியிடம் தன் இருத்தலுக்கான உரிமையைக் கோரி நிற்பதே தென் தமிழக மீனவ மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்.நாங்கள் இங்கே வாழ வேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கை இன்று  நேற்றல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டது பழவேற்காட்டில்  தொடங்கி கன்னியாகுமரி வரை நெடுநீளமாய் விரிந்து கிடக்கும் அம்மக்களை பொது அரசியல் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அவர்கள் அரசியலில் தனித்த சக்திகளா? கூடங்குளம் போராட்டத்தில் சம வெளிச்சமூகம் என்ன செய்தது? மீனவ மக்கள் என்ன செய்தார்கள்? அதன் வரலாறு என்ன?  இதிலிருந்துதான் இந்த தொடரை நான் தடாகம் இணையத்துக்காக எழுதத் துவங்குகிறேன்.

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற கோஷத்தை முன் வைக்கிறார் டாக்டர் ராமதாஸ். இது ராமதாஸின் கோரிக்கை மட்டுமல்ல எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கோரிக்கையும் கூட, பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் உரிமை கோரல் சமூக நீதியின் மற்றொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. சாதி வாரி வாக்கெடுப்பு தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு ஒப்பீட்டளவில் எவ்விதமான ஆதாயங்களையும் அளிக்காத நிலையில் தலித்துக்கள், பழங்குடிகளும் சாதி வாரி வாக்கெடுப்புக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்பது சமூக நீதி சிந்தனையாளர்களின் கருத்து. ஆனால் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் தலித் மக்களுக்கு வழங்கப்படும் சிறிதளவு உரிமையைக் கூட சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருப்பது நாம் அறிந்த  சம கால அரசியல் வரலாறு.  தமிழகம் முழுக்க நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கிற வழிபாட்டு உரிமை, தெருவில் நடக்கும் உரிமை, பொது வழிகளை பயன்படுத்தும் உரிமை போன்றவை தலித்துக்களுக்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளால் மறுக்கப்படுவதில் தொடங்கி ஒரு அம்பேத்கர் திரைப்படத்தைக் கூட திரையிட அனுமதிக்க முடியாதவர்களாக பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறி தமிழகத்தில் கோலோச்சி பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சாதி அதிகாரம் மிக வலுவான முறையில் புத்தியிர்ப்பு பெறும் வகையில் 2011 தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.


சமூக நீதி போன்ற தற்காலிக ஏற்பாடுகள் பன்மைத்துவ அடையாளத்தைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கத்தின் கூட்டுக் கோரிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் தமிழகத்தில் நடந்த நடந்து கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத முன்னேறிய சாதி, பிற்படுத்தப்பட்ட சாதி அரசியலின் போக்கு தலித்துக்களுக்கும் எல்லையோர பழங்குடிகள், மீனவ மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை தோற்று விக்கும் சூழல் வெகு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அம்பேதகர் நூற்றாண்டு விழாவின் பின்னர் ஏற்பட்ட தலித் எழுச்சி  இலக்கியத்திற்கும் அரசியலுக்குமான ஒரு ஒத்திசைவை உருவாக்கியதோடு அடங்கிப் போய் விட்டது. ஆனால் சமூகத் தளத்தில் சின்ன அசைவைக் கூட ஏற்படுத்தாத காலம் காலமாக வெறும் வேடிக்கை மனிதர்களாக நிலங்களின் ஓரத்தில் காவல் தெய்வங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் மீனவ மக்கள்.  சமவெளிச் சமூகங்களுக்கு அடியாள் வேலை பார்க்கவும், சமவெளிச் சமூகங்கள் அதிகாரம் பெற ஒவ்வொரு தேர்தலிலும் பலியாடுகளாக தலை வெட்டப்படுகிறவர்கள்தான் இந்த காவல் தெய்வங்கள்.

பிரிட்டீஷாரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்களிடம் இருந்து அதிகாரம் வேண்டிய வெள்ளாளர், செட்டியார், முதலியார், நாயக்கர்கள் உள்ளிட்ட இன்னபிற பார்ப்பனரல்லாத முன்னேறிய சாதிகளின் துவக்கமாக இருந்த திராவிட இயக்கம் எண்பதுகளின் பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் தங்களின் செல்வாக்கை விரிவு படுத்தின. அல்லது பெருந்திரள் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி மக்களை அரவணைப்பதன் மூலம் தங்களின் அதிகாரத்தை வலுவாக நிறுவிக் கொண்டன. பெரியார் பேசிய பார்ப்பன எதிர்ப்பு பின் தள்ளப்பட்டு, சாதி ஒழிப்பும் கை விடப்பட்ட நிலையில் சாதி வெறியும் பெருந்திரள் சாதிகளைத் திரட்டுவதும், அதையே சமூக நீதியாக தம்பட்டம் அடிப்பதுமே இன்றைய திராவிட இயக்க அரசியல் நிலையாக இருக்கிறது. இன்றைய நிலையில் ஒதுக்கப்பட்டுள்ள சமூகம் சார்ந்த ஒருவர் திராவிட இயக்கத்தைக் கொண்டாட ஏதும் இல்லை. திராவிட இயக்கம் சம வெளிச்சமூகங்களின் பிரநிதித்துவம் செய்வதோடு சமவெளிச் சமூகங்களின் அதிகாரக் கோரல் குறித்துமே கவலை கொள்கிறது.  எல்லையோரங்களில் வாழும் விளிம்புச் சமூகங்களின்  குரல் இன்று வரை தமிழில் இல்லை. தமிழக வரலாற்றில் இது வரை பேசப்பட்ட எல்லா அரசியல் உரையாட்களுமே சம வெளிச்சமூகங்களுக்கிடையிலான முரண்கள்தான். கலகம், கட்டுடைத்தல், மையம், விளிம்பு என்று கவர்ச்சி பூசப்பட்ட கோஷங்களைக் எல்லையோரத்தில் நின்றால் நிராகரித்து விட முடியும். ஏனென்றால் இதில் விளிம்பின் விளிம்பு. ஆகக் கீழான நிராகரிப்பு.

தமிழக அரசியல் வரலாற்றில் எண்பதுகளுக்குப் பிந்தைய காலம் என்பது பெருந்திரள் சாதீய வரலாறாக உருவாக்கப்பட்டு விட்டது. காமராஜரின் தொடர்ச்சியாய் நாடார்களும், அதிமுகவின் தொடர்ச்சியாய் தேவர்களும், பின்னர் வட மாவட்டங்களில் வன்னியர்களின் எழுச்சி என பெருந்திரள் சாதித் திரட்டலினூடேதான் தமிழக அரசியல் இயங்கி இன்றளவும் இயங்கி வருகிறது. பார்ப்பனரல்லாத முற்பட்ட வகுப்பினர் பார்ப்பனர்களை சூத்திர மக்களின் எதிரிகளாகச் சித்தரித்து தங்களை மட்டும் வளர்த்துக் கொண்ட நிலையில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட சாதிகளில் அதுவும் குறிப்பாக தேவர் அரசியலை ஊட்டி வளர்த்தது அதிமுக. இதை எதிர்கொள்ளத் தீர்மானித்த திமுக அதிமுகவின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கி அதிமுகவையே இன்று விஞ்சி நிற்கிறது. நகர்புறம், நடுத்தரவர்க்கம் என்று கட்சி கட்டிய திமுக கிராமப்புற வாக்கு வங்கியைக் கொண்ட இயல்பாகவே சாதீயக்கூறுகைகளைக் கொண்ட அதிமுகவின் பண்புகளை உள்வாங்கி தேர்தலை எதிர்கொள்கிறது. இத்தேர்தலில் சிறப்பாக திமுகவும் மூத்த திராவிட இயக்க தலைவர் என்று சொல்லப்படுகிறவருமான கருணாநிதி கூடுதலாக கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகளை குறிவைக்கிறார். அணிதிரட்டலுக்கப்பால் மன்னர் மரபில் பொன்னர் சங்கரின் துணையோடு தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார்.

சாதி அரசியலில். அதிமுகவாவது வெளிப்படையாக சாதியைச் சொல்லி இன்ன சாதி ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்று சொல்லி வரும். ஆனால் திமுக முற்போக்கு இயக்கம் அல்லவா? அது சாதியைச் சொல்லாது. மாறாக மறைமுகமாக நிலத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்துகிறது. சேர, சோழ, பாண்டியர், என்பதில் தொடங்கி மூவேந்தர் குலப்பெருமை, ராஜராஜ சோழன் என மன்னர் கால மதிப்பீடுகளை தூக்கி நிறுத்துவதன் மூலம் தமிழர்களை பழைய மன்னர் மரபுக்குக்குள் கொண்டு செல்கிறார்கள். செம்மொழி மாநாட்டிற்குப் பின்னர் தமிழர் கலாசார நிலமரபு என்று கதைக்கப்பட்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை  நிலங்களை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள் இதற்கான மிகப்பெரிய வணிக வலைப்பின்னல் ஒன்று நிலத்தோடு எவ்வித தொடர்புகளும் இல்லாத எம்,எஸ். சுவாமிநாதன் என்பவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


ஏற்கனவே கடற்கரை மேலாண்மைச் சட்ட வடிவமைப்பிலும், மீன் பிடி ஒழுங்காற்று விதியென்று என்று மீனவ மக்களுக்கு சுவாமிநாதன் போன்றோர் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க கிளம்பியதெல்லாம் தனிக் கதையாக இருந்தாலும், இப்போது ஐந்திணை நிலங்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் விதமாக ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் நிறுவப்படும் என்று அறிவித்த தமிழக அரசு அதற்கு பொறுப்பாக சுவாமிநாதனை நியமித்தது. குறிஞ்சி பூங்கா ஏற்காட்டிலும், முல்லைப்பூங்கா சிறுமலையிலும் (திண்டுக்கல்) மருதப் பூங்கா மருதாநல்லூரும் (தஞ்சாவூர்) நெய்தல் பூங்கா திருக்கடையூரிலும் (நாகப்பட்டினம்) பாலைப் பூங்கா அச்சடிப்பிரம்ம புரத்திலும் (ராமநாதபுரம்) அமைக்கப்படும் என நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பூங்காக்களின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.32.413 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. சங்கால மரபை நம் கண் முன் நிறுத்தும் இந்த சமகால சித்திரத்திரத்திற்கும் எல்லையோர மக்களுக்களின் வாழ்நிலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? நிலவெளிச்சமூகங்களின் மேன்மைகளை இன்று நிறுவ நினைக்கும் திராவிட அதிகாரம். ஏன் எல்லையோரப் பழங்குடிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே கேள்வி. சங்கலாக மரபின் தொடர்ச்சியால் விவசாய நிலங்களை வகை பிரித்தவர்கள் நாஞ்சில் நாடு, கொங்கு மண்டலம், என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். நிலங்களின் பெருமிதங்களால் ஆன தமிழகத்தில் இன்று நிலவுவது சமவெளிச்சமூகங்களின் சாதி அரசியலை நேரடியாக சாதியால் அடையாளப்படுத்த முடியாதவர்கள் கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என்று அழைக்கிறார்கள்.

நாஞ்சில் நாடு

கன்னியாகுமரி மாவட்டத்தை நாஞ்சில் நாடு என்கிறார்கள். குமரி மாவட்டத்தை ஒட்டிய வயல், மலை, உள்ளிட்ட விவசாயப் பரப்பைக் அடையாளப்படுத்துகிறது இது. தமிழகத்தின் மற்றெல்லா மாவட்டங்களையும் விட குமரி மாவட்டத்திற்கு மட்டும் பிரத்யேகமான ஒரு அம்சம் உண்டு. பாலை நிலம் தவிர்த்து ஏனைய நால் வகை நிலங்களுமே குமரியில் உண்டு. எப்படி மலையும் மலைசார்ந்த இடங்களும், வயலும், காடும் உண்டோ அதை விட அதிகமான நெடு நீளப்பரப்பிற்கு கடலும் உண்டு. ஒன்றல்ல மூன்று கடல்கள் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடலோரத்தில் பல்லாயிரம் மீனவக் குடிகள் கடலை நம்பி பாரம்பரீய மீனவர்களாக வாழ்கிறார்கள். விவசாய பெருங்குடி வாழ்வைச் சித்தரிக்கும் நாஞ்சில் என்ற சொல்லில் எங்காவது மீனவர்களுக்கான அடையாளம் உண்டா? ஆக இந்த நாஞ்சில் நாட்டு சித்திரத்திற்குள் கடலுக்கு இடமில்லை. ரசனைக்குரிய கடலுக்கே இடமில்லை என்றால் மீனவனுக்கோ கருவாட்டுக்கோ இடம் கொடுத்து விடுவார்களா என்ன? நாஞ்சில் நாட்டு நிலம் என்றால் அது விவாசாய நிலம், விவசாயம் என்பது நில உரிமையாளர்களுக்கான சித்திரம். பெரும்பலான நில உடையாளர்கள் ஆதிக்க சாதியினராய் இருப்பதாலும், அதில் கூலிகளாக தலித்துக்கள் இருப்பதாலும் நாஞ்சில் நாட்டில் அவர்களுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. ஆரல் வாய் மொழிக் காற்றின் சுகந்தத்தை அனுபவிக்கும் அனுகூலங்கள் வாய்க்கப்பெறாதவர்கள் எப்படி இந்த நாஞ்சில் நாட்டு சித்திரத்திற்குள் வரமுடியும். உள்ளூர்புறங்களில் நிலங்களில் வாழும் விவசாயப் பெருங்குடிகளும் பெருங்குடிகளை அண்டி வாழும் தலித் சிறுகுடிகளும் நிலத்திற்கு வெளியே கடலோரங்களில் வீசப்பட்டுள்ள மீனவர்களுக்கும் நாஞ்சில் நாட்டு சித்திரத்திற்குள் இடமில்லை. ஆனால் நாஞ்சில் நாட்டில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக வெள்ளாளர்களும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெரும் வாய்ப்பைப் பெருகிறவர்களாக நாடார்களும் உள்ளனர். எல்லையோர பழங்குடிச் சமூகமான மீனவர்கள் இவர்களின் எவர் ஒருவரையும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது வெறும் வேடிக்கை மனிதர்கள்.

கொங்கு நாடு

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் கொங்கு மண்டலம் எனப்படுகிறது. நிலத்தால் நமக்கு உருவான சித்திரங்களுக்கப்பால் கொங்கு மண்டலம் என்பது வெள்ளாள கவுண்டர்களின் ராஜ்ஜியமாக இருக்கிறது. தமிழகத்தில் பரவாலாக சாதிக் கொடுமைகள் நடந்தாலும் கொங்கு மண்டலத்தில் தலித்த்துக்களுக்கு எதிராக நடக்கும் சாதிக் கொடுமைகளும் அதன் கொடூர வடிவங்களான இரட்டை டம்ளர், மலம் ஊற்றுதல், உடல் ரீதியாக துன்புறுத்தல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் ஆயிரம் கிராமங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களையும் கொடுமைகளையும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிக் கொண்டு வந்தார்கள். நான் ஒரு முறை சென்ற போது தோழர் பாலமுருகன் பவானி பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை என்னை அழைத்துச் சென்று காட்டினார். இக்கொடுமைகள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. இங்கே கவுண்டர் சாதியைத் தவிர்த்த இன்னொருவர் போட்டியிட்டு வெல்லவே முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கொங்குநாடு முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் திமுகவோடு கூட்டு வைத்துள்ளது. கணிசமான கவுண்டர் ஒட்டுக்களை திமுக பெற்றுக் கொள்ளப் போகிறது. உடனே கொங்கு தமிழர் பேரவை என்கிற போட்டி கவுண்டர் அமைப்பு அதிமுகவை ஆதரிக்கிறது.

இப்படி தமிழகத்தில் எல்லா மண்டலங்களையும் நிலத்தால் அடையாளப்படுத்தி உள்ளுக்குள் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை ஒருங்கிணைத்து அதை தேர்தலில் அடையாளப்படுத்த நினைக்கிறது திராவிட இயக்கம். பாண்டி மண்டலம் தேவர்களுக்கு, வட மண்டலம் வன்னியர்களுக்கு, தென் மண்டலம் நாடார்களுக்கு, மேற்கு மண்டலம் கவுண்டர்களுக்கு, சென்னை பார்ப்பனர், பார்ப்பனரல்லாத பிற உயர்சாதிகளுக்கு என்று வகுந்து பங்கு போட்டு ஓட்டுப் பிரிக்கிறார்கள்.

எல்லையோரப் பழங்குடிகள்

தலித்துக்களின் அரசியல் பிரநிதித்துவத்திற்காக தனித் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க தலித் தலைவர்களும் அரசியலுக்கு வந்து ஜோதியில் ஒன்று கலந்து விட்டார்கள். ஆனால் காலம் காலமாக வெறும் வாக்கு வங்கியாகவே எந்த விதமான அனுகூலங்களையும் அனுபவிக்காமல் புறக்கணிக்கப்பட்ட இனமாக இருப்பது தமிழகத்தின் நீளமான கடலோரங்களில் ஒதுக்கப்பட்டு வாழும் மீனவ மக்கள்தான். தெற்கே இந்தியப் பெருங்கடலிலும், கிழக்கே வங்காள விரிகுடா, அரபிக்கடலிலுமாக பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரின் நீரோடி வரை 1,225 கிலோ மீட்டர் நீளமாக மீனவ மக்கள் கடலோரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். பட்டினவர், பரவர், வலையர், கரையார், பர்வதராஜகுலம், முக்குவர், மரக்காயர், இன்னும் சில சாதிகளாக சாதிகளாக அடையாளம் காணப்படும் மீனவ மக்கள் நீளமான இக்கடலோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) , திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், திருப்போருர், செய்யார் (தனி), திண்டிவனம் (தனி) கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் (தனி) சீர்காழி (தனி), பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி) வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி) பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, திருவாடணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் , ராதாபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், என சென்னை தொடங்கி குமரி மாவட்டம் வரை நான் சுட்டிக்காட்டியிருக்கும் தொகுதிகள் அனைத்துமே கடலோர மாவட்டங்களில் பெரும்பலான மீனவ வாக்காளர்களை உள்ளடக்கியத் தொகுதிகள். இத்தொகுதிகளில் மீனவ மக்களின் கணிசமான வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. ஒட்டு மொத்தமாக இந்தத் தேர்தலில் திமுக திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் கே.பி.பி சாமி என்கிற மீனவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. திருவொற்றியூர் தொகுதியில் கணிசமான நாடார் வாக்குகள் இருந்தாலும் மீன் பிடித்துறைமுகம் சார்ந்து தொழில் மேலாதிக்கத்திற்காக பயன்படும் நோக்கில் மட்டுமே திமுக சாமிக்கும் அதிமுக குப்பனுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தவிறவும் சாமியை ஒரு மீனவராக கருத முடியாது. மீனவர்களின் குரலை அவர் பிரதிபலிக்கவும் இல்லை. அதிமுக மூன்று மீனவர்களை இம்முறை வேட்பாளராக்கி இருக்கிறது இதில் நகர்ப்புற தொகுதிகளாக திருவொற்றியூர், ராயபுரம் தவிர்த்து, நாகையில் போட்டியிடும் கே.ஏ.ஜெயபாலும், குளச்சலில் போட்டியிடும் லாரன்சும் உள்ளூர் வாக்குகளைப் பெற்று வெற்றிபெருவார்களா? என்பது பெரும் கேள்விதான். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக சுமார் முப்பது கடலோரத் தொகுதிகளில் மீனவர்கள் இருந்தும் அவர்கள் பொதுத் தொகுதிகளிலேயே போட்டியிட்டு வெல்ல வேண்டிய நிலை. பொதுத் தொகுதிகள் என்பது உள்ளூர் சமவெளிச் சாதிகளின் ஏக போக ஆதிக்கமாய் இருக்க உண்மையான மீனவப் பிரதிநிதிகள் சட்டமன்றம் செல்ல வாய்ப்புகளே இல்லை.

மீனவ மக்கள் செல்வாக்குப் பெற்றுள்ள இந்த முப்பது தொகுதிகளில் ஏழு தனித் தொகுதிகள். ஒரு பக்கம் பொதுத் தொகுதிகளில் சமவெளிச் சமூகங்களை பிரநிதித்துவப்படுத்தும் சாதி இந்து வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களாக மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ள மீனவ மக்கள் தனித் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களைத் தேடுக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழக அரசின் சாதிச் சான்றிதழில் பி.சி, அல்லது எம்.பி.சி என்று அடையாளப்படுத்தப்படும் மீனவ மக்கள் சமவெளிச் சமூகங்களால்  சமூக வாழ்நிலையில் தலித்துக்களாகவே  பார்க்கப்படுகின்றனர். சமவெளிச் சமூகங்களின் சாதீய ஒதுக்கல் ஒரு பக்கம் என்றால் கூடவே நில ரீதியாக ஒதுக்கலும் இணைந்து கொள்ள முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இனமாகவே மீனவ மக்கள் வாழ்கின்றனர். எல்லையோர மீனவ மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்து சுமார் முப்பது வருடங்கள் ஆகி விட்ட நிலையில் அது பற்றிய ஒரு விவாதம் கூட இங்கு இல்லை. பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டம் வரையிலான மீனவ மக்கள் நீண்டகாலமாகவே தங்களை பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் சென்ற தேர்தலுக்கு முன்னர் நடந்து முடிந்த தொகுதி மறு வரையறையில் மேலும் பல தொகுதிகளிலும் விசிறியடிக்கப்பட்டு ஒட்டு மொத்த பலத்தையும் இழந்து போயினர் மீனவ மக்கள். அதே நேரம் உள்ளூர் சமவெளிச் சமூகங்களை நடந்து முடிந்துள்ள தொகுதி வரையறை மேலும் ஐக்கியப்படுத்தியிருக்கும் ஒரு நிலையையும் காண முடிகிறது. இந்த ஐக்கியப்படுத்தல் மூலம்தான் பெருந்திரள் சாதி அணி திரட்டல்கள் முன்னர் எப்போதையும் விட மேலோங்கி வருவதை உறுதிப்படுத்துகிறது. மீனவர் என்ற அடையாளத்துடன் ஒரு வர்க்கமாய் இணையும் எல்லா சாத்தியங்களையும் கொண்ட மீனவர்கள் இப்போது தேர்தல் அரசியலும் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்று அவர்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என நான் நம்பவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் தலைவர்களுக்கு மட்டுமே அது வளர்ச்சியாக மாறி விட்ட நிலையில், கடவுள் மறுப்பாளன் எப்படி வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கிறானோ அப்படியான ஒரு இக்கட்டான நிலையிலிருந்தே மீனவ மக்களின் அரசியல் உரிமைக்காக நான் இதை எழுதுகிறேன். இன்று நாம் காணும் அரசியல் என்பது திராவிட இயக்க அரசியலோ, முற்போக்கு அரசியல் வடிவமோ அல்ல அப்பட்டமான சாதி ஆதிக்க அரசியல் தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அந்த சாதியைச் சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ஏனைய மக்களை தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களை நிர்பந்தித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக விரோத சாதி அரசியலாகவே இதைக் காண வேண்டியிருக்கிறது. இந்த அரசியலில் ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகமான மீனவ மக்கள் தங்களின் அடிமைத் தனத்தையோ ஒதுக்கப்பட்ட தங்களின் வாழ்நிலையையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

மீனவர்களின் பாரம்பரீய பிரதேசங்களாக தூத்துக்குடி, இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இன்று அவர்கள் செல்வாக்கிழந்து விட்டார்கள். சமவெளிச் சமூகங்களால் கைப்பற்றப்பட்ட  நிலமாக மீனவர்களின் பாரம்பரீய பிரதேசங்கள் மாறுவதோடு, தனியார் தாரளமயத்தின் கோரத் தாக்குதலையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கிறார்கள் மீனவ மக்கள். வனப்பாதுகாப்புச் சட்டம் என்பது வனங்களையோ வனத்தின் மக்களான மலைவாழ் பழங்குடி மக்களையோ பாதுகாக்காததோடு காடுகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பழங்குடிகளை காட்டிலிருந்து துரத்துகிறது. வனங்களையே பாதுக்காக்காத வனப்பாதுகாப்புச் சட்டம் கடல், மீன் பிடி உரிமை, கரையோரம் உள்ளவற்றையும் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறது. நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட மீனவ மக்களின் குரலை இன்று ஓரளவுக்கு பேசத் துணிந்திருக்கிறார்கள் மீனவ சமூக சிந்தனையாளர்கள். இன்று எம் தலைமுறையில் நாங்கள் எங்களுக்காக எழுதவும் பேசவும் முயல்கிறோம். சம வெளிச்சமூகங்களிடமும் அதை பிரநிதித்துவப்படுத்துகிற அரசிடமும் எங்களுடைய உழைப்பின் உரிமையை, சுதந்திரமான இருத்தலை, வாழ்வதற்கான உரிமையை கோரி நிற்கிறோம்.

உற்பத்தி செய்பவன் தன் பொருளுக்கான விலையை தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைக் கோரும் போது கடலில் பிடிக்கும் மீனின் விலையை கடலுழைப்பிற்கு சம்பந்தமே இல்லாத சம வெளிச்சமூகங்கள் தீர்மானிக்கலாகாது. சிறிய கட்டுமரங்களில், வள்ளங்களில் மீன் பிடித்த நிலை இன்று மாறி விட்டது. விசைப்படகுகளும் இழுவைப் படகுகளும் சிறு கட்டுமரத் தொழிலை நசுக்கி நாசமாக்கியிருக்கும் நிலையில் பெரும்பலான சமவெளி ஆதிக்க சாதியினரின் முதலீடு கடலை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. மீனவர்களின் உரிமைக்காக இவர்கள் போராடுவது போலவும். குரல் கொடுப்பது போலவும் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் மீனவ மக்கள். எண்பதுகளில் தொடங்கி இன்று வரை இராமேஸ்வரத்தில்  நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கொல்லப்பட்ட நிலையில் கடிதம் எழுதியோ தந்தி அடித்தோ இம்மக்களை ஏமாற்றி விட முடியும். சமவெளிகளில் உள்ள ஆதிக்க சாதிகளை இப்படி எல்லாம் இத்தனை காலம் ஏமாற்ற முடியும் என நான் நம்பவில்லை. அதுவல்லாமல் மீனவர் படுகொலைகளைப் போல உள்ளூர் ஆதிக்கசாதிகளில் இம்மாதிரியான கொலைகள் இன்னொரு சமூகத்தாலோ வேறு நாடொன்றாலோ நிகழ்த்தப்பட்டிருக்கும் என்றால் திராவிட மனமோ தமிழ் மனமோ அதை பொறுத்துக் கொண்டிருக்குமா? என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்.

இது வரை தொழிற்பட்டு வந்துள்ள அரசியல் அதிகாரங்களால் ஏமாற்றப்பட்டுள்ள மீனவ மக்கள் அரசியல் பிரநிதித்துவம் பெற வேண்டும் என்றால் தாங்கள் ஒன்றிணையும் சாத்தியங்களை ஆராய வேண்டும். சம வெளிச்சமூக அரசியலுக்கு முதலில் அவர்கள் வக்களிப்பதை நிறுத்தி மீனவர்களை ஒருங்கிணைக்கும் தனித்த தொகுதிகளுக்காக போராடும் அதே நேரம் பழங்குடிப்பட்டியலில் தங்களை இணைக்கக் கோரும் குரலை தீவீரப்படுத்த வேண்டும். இந்த அதிருப்தி தமிழகமெங்கிலும் உள்ள மீனவ சமூக பிரதிநிதிகளிடம் பரவியுள்ள நிலையில் இதற்கான முன்னெடுப்புகள் சிந்தனை மட்டங்களில் ஆராயப்பட்டு வருகின்றன. கர்ம வீரராகவே இருந்தாலும் காமராஜர் எப்படி குறிஞ்சிப்பாடியில் ஜெயிக்க முடியாதோ, வன்னியத் திலகமாகவே இருந்தாலும் டாக்டர் ராமதாஸ் எப்படி நாகர்கோவிலில் ஜெயிக்க முடியாதோ அப்படித்தான் இதுவும். சாதி சாதியைக் கடந்து இங்கே எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தில் சாதியைக் கடந்து ஒரு வர்க்கமாக திரளும் சாத்தியம் மீனவ மக்களிடம் மட்டுமே உண்டு. ஏனென்றால் அவர்களின் கடலின் மக்கள். கடல்தான் அவர்களை ஒன்றிணைக்கிறது.

தொடரும்..........

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-2 ]


’’தேச விரோதிகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு அணு உலைக்கு எதிராகப் போராடுகிறார்கள் இந்துக்களே உஷார்! 2011- டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் நான் நாகர்கோவிலுக்குச் சென்ற போது அந்த நகரமெங்கும் இந்து அமைப்புகள் ஒட்டியிருந்த போஸ்டரின் வாசகங்களில் இதுவும் ஒன்று. வந்தேரி கிறிஸ்தவர்கள் என்றும், திருச்சபைப் பாதிரிகளின் போராட்டம் என்றும் தொடர் பிரச்சாரம் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்து அமைப்புகளும் சரி இனவாத பாரதீய ஜனதா கட்சியும் சரி கணிசமான செல்வாக்குள்ளக் கட்சிகள்.

எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை எதிரிகளாகக் கட்டமைத்து கட்சி வளர்க்கும் இந்த இந்து மத வெறியர்கள் கோவையில் இஸ்லாமிய மக்களை எதிரிகளாகச் சித்தரித்து செல்வாக்கை வளர்த்துக் கொண்ட நிலையில் கன்னியாகுமரியில்  அவர்கள் எதிரிகளாகச் சித்தரித்தது சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை. அதிலும் கடலோர மீனவ கிறிஸ்தவ மக்களைத்தான் அவர்கள் தேச விரோதிகளாக தொடர்ந்து சித்தரித்து வந்தனர். 1982- ல் மீனவர்களுக்கு எதிரான மண்டைக்காடு கலவரத்தில் தொடங்கிய இந்த விஷ விதை குமரி மக்களின் பொதுப்புத்தியில் பெரிய தாக்கத்தை உருவாக்காவிட்டாலும், குமரி மாவட்ட மக்கள் மனதில்  மீனவர்கள் மீதான எரிச்சலும் காழ்ப்புணர்ச்சியும் இந்த முப்பது ஆண்டுகளில் வளர்ந்து விட்டதென்னமோ உண்மைதான்.

இந்நிலையில்தான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகால போராட்டத்தின் தொடர்ச்சியாய் 2011- செப்டம்பரில் தொடங்கிய அணு உலை போராட்டம் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தை அடைந்து சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக அணு உலையை மூடி வைக்கும் அளவுக்கு நடந்தது. அடித்தள மக்கள் சமூகம் ஒன்றில் போராட்டம் விவசாயக் பெருங்குடிகளின் ஆதரவைப் பெற முடியாமல் போன நிலையில் ஒரு பக்கம் மத்திய மாநில அரசுகளும், இன்னொரு பக்கம்  இந்து அமைப்புகளும், தமிழகத்தின்  திராவிட இயக்க அரசியலின்  இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அரசு இயந்திரத்தின் உதவியோடு  அந்த மக்கள் மீது போர் தொடுத்தது ஏன்?
ஒரு குறுகிய நிலப்பகுதியில் கரையோரக் கிராமமான இடிந்தகரையில் போராடிக் கொண்டிருக்கும் அந்த மீனவர்கள் யார்? அவர்கள் கடல் வழியே வந்து சேர்ந்தவர்களா? உண்மையில்  இடிந்தகரை  உள்ளிட்ட தமிழக கடலோரங்களில் குறிப்பாக தென் தமிழகத்தின் கிழக்கு கரையோரத்திலும் , மேற்குக் கரையோரத்திலுமாக இராமநாதபுரம்,  தொடங்கி கேரள எல்லையான நீரோடி வரை  வாழும் பாரம்பரீய கிறிஸ்தவ மீனவர்கள் வந்தேரிகளா?  அவர்கள் மேலைத் தேய மரபின் உற்பத்திகளா? என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய செழிப்பான வரலாறும், சமூக உருவாக்கத்தில் அவர்களின் பங்கும் கொட்டிக் கிடக்கின்றன. மின்னிய பழம் பெருமை ஒன்றின் மிச்சங்களாகவும், பழங்குடித் தன்மையின் எச்சங்களோடும் வாழும் அந்த மக்களின் வரலாறு என்ன?

நமது சமூக அமைப்பை தீர்மானிப்பதில்  சாதி வகிக்கும்  இடம் என்பது எவளவு முக்கியமானது என்பதை நாம் இன்று உணர்ந்து வருகிறோம். இந்து மதத்தோடு வேர் பற்றி அதன் ஆன்மாவாக திகழும் சாதீய பரப்பில் கரையோர மீனவர்களுக்கான இடம் எது என்பது இதுவரை தமிழ் பரப்பில் அலசப்படாத  ஒன்று. கரையோரமும் சம வெளியும் ஒன்றுக் கொன்று முரண்பாடுள்ளதாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  கரையை கடல் அரித்தது போக சம வெளிச்சமூகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரையை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. சம வெளி என்பது இங்கே நிலபிரபுத்துவ சாதியாகவும் இருக்கிறது. அரசு நிர்வாகமாகவும், மதங்களாகவும்  இருக்கிறது. இடைவிடாத இந்தப் போர் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே தொடங்கி விட்டது.

தமிழ் சமூகத்தின் வரலாற்றை எழுதியவர்களில் எவர் ஒருவரும் இந்த மீனவச் சமூகங்களின் வரலாற்றை எழுதவில்லை.தமிழர்களின் வரலாற்றை வாசிக்கவே சாதிகளில் வரலாற்றை வாசிக்க வேண்டும் என்பதுதான் உண்மை. தமிழர்கள் என்ற பொது அடையாளம் உருவாக தமிழ் மொழியை அதன் இணைப்புப் புள்ளியாகக் சிலர் காண்கின்றனர். ஆனால் தமிழ் மொழியை விட பல மடங்கு வலுவுள்ளதாக சாதியும், இந்து மதமும் மக்களைப் பிரித்தாளுகின்றன, மேலை நாட்டு மாதமான கிறிஸ்தவம் கூட இந்தியத் தன்மைக்கு பலியாகிவிட்டதை நாம் காண்கிறோம்.

பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிட இயக்கம் அதன் இயல்பிலேயே முர்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் அது பெரியாருக்குப் பின்னர் கொள்கையளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. அதன் தாக்கங்கள் அதன் முற்போக்கு அம்சங்கள் இட ஒதுக்கீடு, ஆரம்பக்கல்வி,  குழந்தை இறப்பு விகிதம், என்று ஏனைய மாநிலங்களை விட தமிழகத்தை வளர்த்திருந்தாலும் அந்த வளர்ச்சியினூடே அது பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்கமாக இறுகிப் போய் விட்டது. சம வெளிக்குள் அது சேரிகளை வலுப்படுத்திச் சென்றிருக்கிறதே தவிற சாதித் தீண்டாமைக்கு எதிராக நீண்டகால போராட்டம் ஒன்றை நடத்த வில்லை. அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் அமைப்புகள் எழுச்சி பெற்று கணிசமான அளவுக்கு  தலித் மக்களை அணி திரட்டிய போதிலும் தமிழ் தேசிய, திராவிட இயக்க அரசியலில் அவைகள் அங்கீகாரம் பெறவில்லை. சமவெளிக்குள்  தலித்துக்கள் தீண்டத் தகாத மக்களாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நிலையில் மீனவர்களோ இந்த பரப்பிற்கு வெளியே சாதி பற்றிய ஓர்மைகளற்று வாழ்ந்து வருகின்றனர்.
மனித குல வரலாற்றை எழுதியவர்களில் ஒரு சாரார் கருத்து முதல்வாதிகளாகவும் இன்னொரு சாரார் பொருள் முதல்வாதிகளாகவும் இருந்துள்ளனர். அவரவர் தாம் நம்பிய கோட்பாடுகள் வழி நின்றே மனித குல வரலாற்றை எழுதத் துவங்கினார்கள். கடவுள் கோட்பாட்டை நம்பும் கருத்து முதல்வாதிகள் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதில் தொடங்கி  மனித குலவரலாற்றை எழுதிச் சென்றனர். கருத்து  முதல்வாதிகளின் கோட்பாடு மதங்களின் கோட்பாடாகவும் இருக்கிறது.

பிற்போக்குவாத கருத்துமுதல்வாதிகளின் கோட்பாட்டை நொறுக்கி  ஐய்ரோப்பாவில் உருவான பொருள்முதல்வாத சிந்தனையும் அதையொட்டி உருவான கம்யூனிச சிந்தனை வரலாறும் கூட மனித குல வரலாற்றில் சம வெளி மனிதனையே பிரதானப்படுத்துகிறது. நிலத்தை உழுது பயிர் செய்ததும், குடும்பம், தனிச்சொத்து. அரசின் தோற்றமுமாக அதுவும் சம வெளியையே பிரதானப்படுத்துகிறது. பண்டை இனக்குழு சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலவுடமைச்சமூகம். முதலாளித்துவ சமூகம், என மனித குலத்தின் வரலாற்றை வரையறுக்கும் மார்க்சியம் . பழங்குடி சமூகங்களாக வரையறுப்பது ஆறு குளங்களில் வேட்டையாடி மீன் பிடித்த பழங்குடிகளைத்தான். இந்திய வரலாற்றை ஆய்வு செய்த மார்க்சிய அறிஞரான டி.டி. கோசாம்பி  போன்றவர்கள் கூட வட கிழக்கு மாநிலங்கள், மத்திய இந்தியாவின் காடுகளில் வாழ்ந்தவர்களையும்,இந்தியக் கடலோரங்களில் வாழ்ந்தவர்களையும் பழங்குடிகளாக வரையறுக்கும் அதே நேரம் கடல்சார் பழங்குடிகள் தொடர்பான சிறப்பான தகவல் பதிவுகள் எதுவும் இல்லை.  பழங்குடிகள் தொடர்பான ஆய்வுகளை மிகச்சிறப்பாக செய்துள்ள அதே நேரம் கடல் சார் பழங்குடிகள் தொடர்பான விபரங்கள் எதுவும் இல்லை.

ஆனால் மனித குலத்தின் தோற்றமும் உழைப்பும் வேட்டைத் தொழில் பண்பாட்டிலிருந்தே உருவாகிறது. இந்தியாவின் வரலாற்றை எழுதிய ரஷ்ய வரலாற்று ஆய்வாளர் போன்காரத்லேவின் ‘’ தென்னிந்தியாவில் கிமு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலோரங்களில் மக்கள் வேட்டையாடுதலிலும் மீன் பிடிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்” என்று எழுதுகிறார்.

தமிழக கடலோரங்களும் மீனவ மக்களும்.
.............................................................................................................

மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின்னர் சென்னை பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி நீரோடி வரை தமிழக கடலோரத்தில் நீளம் சுமார் 1.225 கிலோ மீட்டர். இன்றைக்கு இந்த கடலோரம் நெடுக பாரம்பரீய மீன் பிடிச்சமூகமாக 22 சாதிகள் அறியப்படுகின்றன. பரவர்,முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், பர்வதராஜகுலம், மரக்காயர், என இன்னும் பல  சாதிகளாக அடையாளம் காணப்படும் மீனவ மக்கள் நீளமான இக்கடலோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் அரசியல் பொருளாதார சமூக வரலாற்றை ஆய்வு செய்கிறவர்கள் சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சங்க காலம், சங்கம் மருவிய காலம், சோழர் காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், அய்ரோப்பியர் காலம், தற்காலம் என வரலாற்றை ஆய்வு செய்வார்கள். வரலாற்றின் மிக நீண்ட இந்த காலத்தில் சமூகங்கள் தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. மரபுகளை மாற்றிக் கொண்டோரும் உண்டு.

தமிழ் சூழலைப் பொறுத்தவரை சங்க இலக்கியங்கள் பல் வேறு இனக்குழுக்களின்  வரலாற்றுக் களஞ்சியமாக இருந்தனே தவிற சாதிகளின் அடையாளக்களஞ்சியமாக இருந்ததில்லை. சங்க இலக்க்கியங்களில்  தொல்குடி சமூக வாழ்வான திணை வாழ்விலிருந்து மூவேந்தர் ஆட்சிமுறைக்கு மாறியமை வரையிலான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

சங்க இலக்கியத்தில் பரதவர்கள்.
....................................................................................

தமிழ் நாட்டில் ஆதி வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் ஒன்று வேளிர் என்ற குழு. இன்னொன்று பரதர் என்ற குழு.இக்குழுக்களைச் சார்ந்தோர் ஆதி வரலாற்றுக்க்காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகளும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன என்பதை பேராசிரியர் ஸெனெவிரத்ன எட்டுத்துறைத்துள்ளார்// ( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு)
மேலும் பரதர் என்ற குழுவினர் சங்கச் செய்யுள்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழக கரையோரப்பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் (( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) )
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று  அடையாளப்படுத்துகின்றன. ஐந்து வகை திணைகளாக வகுக்கப்பட்ட நிலங்களில் நெய்தல் நிலத்தின் திணைக்குரிய தலை மக்களாக ஆண்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள்  சேர்ப்பன், புலம்பன், கொண்கன், துறைவன், ஆகியோரும் பெண்களாக பரத்தி, நுளைச்சி என்றும் குறிக்கின்றன.

நெய்தல் நிலத்திற்குரிய  மக்களாக ஆண்கள் பரதர், நுளையர், அளவர்  பெண்களாக நுளைச்சியர் பரத்தியர், அளத்தியர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். உப்பு வணிகம் செய்தவர்களை உமணர் என்கிறது சங்கப்பாடல்கள். மீனவர்களில் ஒரு பிரிவினரான நுளையர் என்ற பெயர் அகநானூற்றிலும் திமிலர் என்ற பெயர் மதுரைக் காஞ்சியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பரதவர் என்ற பெயர்தான் பெரும்பாலான சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. பரதவர்கள்  காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்ததாக பட்டினப்பாலை கூறுகிறது.

புறநானூறு  - //திண் திமில் பரதர்// ( உறுதி மிக்க படகையாளும் பரதவர்)
பட்டினப்பாலை - //புன் தலை இரும்பரதவர்//  (உப்பு நீர் படுவதால் பழுப்பேறிய தலைமுடியைக் கொண்ட வலிமைமிக்க பரதவர்)
நுண் வலைப் பரதவர்,
பெருங்கடல் பரதவர்,
பழந்திமில் கொன்ற பரதவர்,
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்,
’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்த பயங்கொழு மாநகர்”  ( மனையறம் படுத்த காதை)
’’அரச குமாரரும் பரவ குமாரரும்”  (இந்திர விழா ஊர் எடுத்த காதை)
''அரசர் முறையோ பரதர் முறையோ”

இந்தப் பாடல்கள் பரதவருக்கும் கடலுக்கும் உழைப்பிற்குமான தொடர்பை நமக்குக் காட்டும் சித்திரங்கள் இவை, பரதவர்கள் சங்ககாலத்திலும் அதன் பின்னரும் மீனவர்களாக, முத்துக்குளிப்போர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக, படைத்தலைவர்களாக, எதிரிப்படைகளில் பங்கு கொண்டவர்காளாக வரலாற்றில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான் ஆதாரமாக  ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்களின் பண்டைத் தலைநகரான கொற்கையும், கோவலன் கண்ணகி கதையும், காவிரிப்பூம்பட்டினமுமாக செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த சமூகங்களில் பரதவர்களும் பிரதானமானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இவை.

இந்த பரதவர்கள் வரலாற்றில் யாருங்கும் அடங்காமல் செருக்கோடு வாழ்ந்ததும் சில நேரங்களில் சோழர்கள் இவர்கள் மீது படையெடுத்தமையும் பல நேரங்களில் நாடு பிடிக்கும் ஆசையோடு கடல் கடந்த போது பரதவர் துணையோடு போர் புரிந்தமைக்கான சான்றுகளும் உள்ளன. ‘தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” என்கிற புறநானூற்றுப் பாடல் மூலம் அவர்கள் பாண்டியர்களின் ஆளுகைக்குட்படாத தனி இனக்குழுவாக பிரத்தியேக ஆட்சி முறையை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் அவர்களை பாண்டியர்கள் போர் செய்து வென்றதையும் உணர்த்துகிறது. சிலப்பதிகார காலத்திற்குப் பிந்தைய மதுரைக்காஞ்சியில் பாண்டியர்கள் பெரும்படை திரட்டி பரதவர்களோடு போர் புரிந்ததை ‘’தென் பரதர் போர் ஏறே” என்கிற பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

நிலத்தை ஐந்து வகை திணையாகப் பிரித்து இந் நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையினை பட்டியலிட்டது  சங்ககாலம். பின்னர் பேரரசுகளின் விரிவு வெளிநாட்டு ஆதிக்கத்தின் இடையீடு பிராமணீயத்தின் செல்வாக்கு, ஆகியவற்றின் காராணமாக மருத நிலம் தவிர்த்த ஏனைய நிலங்கள் படிப்படியாக மறைந்து பின்னில்லைக்குச் சென்றன என்கிறார் -பேராசிரியர் சிவத்தம்பி. (நூல்- பண்டைத் தமிழ்ச் சமூகம்)

தமிழகத்தின் மிக தொன்மையான பல சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் சாதி ரீதியாக தங்களை மேன்மைப்படுத்தும் போக்கை நீண்ட காலமாக செய்து வருகின்ற நிலையில் ஒரு சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக  நடந்து வரும் அசைவியக்கத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிமையான ஒன்றல்ல, தமிழ் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்தைய  காலந்தொட்டு வாழ்ந்து வரும் கடலோரச் சமூகங்களில் சங்க இலக்கியங்கள்  குறிப்பிடும் சமூகம் பரவர். இன்றைக்கு பரதவர் என்ற பெயரில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை வங்கக்கடலோரத்திலும், கன்னியாகுமரி தொடங்கி கேரளக் கரையோரங்களிலும் இலங்கை கரையோரங்களிலும் வாழ்கிறார்கள் இவர்கள். பரவர் அல்லது பரதவர் என்பது தற்காலத்தில் சாதிப் பெயராக அடையாளம் காணப்பட்டாலும் அது சாதிப் பெயர் அல்ல பண்டை இலக்கியங்களில் நெய்தல் என்னும் திணையின் தலைவர்களாக வருகிறவர்களே இந்த பரவர்கள்.

பரதவர்களில் பல சாதிகள் இன்று தங்களை சைவ மரபினராக மாற்றிக் கொண்டுள்ளனர். காலம் தோறும் ஒடுக்கப்பட்ட சமூங்களை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் மேன் மக்களாக காட்டிக் கொள்ளவும் பிற இழிந்த சாதியினரை விட தாங்கள் மேலானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவும் மரபை மாற்றிக் கொள்வதுண்டு. அந்த வகையில் உப்பு வணிகத்தோடு தொடர்புடைய நெய்தல் நில மக்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு. இவர்கள் உமணர்கள் என்றும் வணிக உமணர்கள் என்றும் சில குறிப்புகளும் ஆய்வுகளும் சொல்கின்றன.

பொதுவாக இன்றைக்கு செட்டியார்கள் என்றழைக்கப்படுவோரிடம் மீன் பிடிச் சமூகங்களின் எச்சங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சங்க இலக்கியங்கள் செட்டி என்றும் மாசத்துவன் என்றும் குறிப்பிடும் செட்டிகள் மீனவர்களே, கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்போதும் பரதவர்களிலும் இன்னொரு பிரிவினரான பட்டினவர்களிலும் செட்டி என்ற பெயர் வழக்கில் உள்ளது. காலப்போக்கில் நிலம் மறைந்து சாதிகள் ஆக்கம் பெற்ற போது பல சாதிகள் தங்களை சைவமாக மாற்றிக் கொண்டன அப்படித்தான் செட்டிகள் செட்டியார்கள் ஆகியிருக்கலாம். இலங்கையில் கரையார் என்று சொல்லப்படும் கரையோரச் சமூகம் தன்னை யாழ்பாண வெள்ளாளருக்கு இணையான சைவ மரபினராக காட்டிக் கொள்வதையும் இங்கே பொறுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. எது எப்படி என்றாலும் இன்றைய தமிழகக் கரையோரத்தில்  பரதவர்கள பட்டினவர், முக்குவர், மரைக்காயர், கரையார், முத்தரையர், அதியரையர், என கடலோரங்களில் இன்னமும் பாரம்பரீய மீனவச் சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

எட்கர் தர்ஸ்டனின் பரவன் பற்றிய குறிப்புகள்.
.............................................................................................................

தென் கிழக்கு கரையோரங்களில் வாழும் பரவனைப் பற்றி 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட கிறிஸ்தவ திருச்சபை நூல்கள் இவர்களை பர்வையம்கள் என்றும் திருவிவிலியத்தில் (மறைநூலில்) குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் என்றும் சாலமோன் ராஜா காலத்தில் கலம் ஓட்டியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்னொரு கதை பரதவர்கள் தங்களை அயோத்தியைச் சார்ந்தவர்கள் என்றும் மகாபாரதப் போருக்கு முன்னர்  யமுனைக்கரையில் வாழ்ந்ததாகவும் கூறிக் கொள்கின்றனர். சூத்திரப் பெண் ஒருத்திக்கு பிராமணன் வாயிலாக வந்தவர்கள் என்றும் இலங்கையில் இவர்கள் இராமனால் குடியமர்த்தப்பட்ட  குகன் மரபினர் என்றும் தங்களை அழைத்துக் கொள்கிறார்காள். சென்ற யுகத்தின் முடிவில் உலகம் நீரால் சூழப்பட்டிருந்த போது தங்களைக் காத்துக் கொள்ளும் விதமாக ஒரு தோணியைச் செய்து அதில் ஏறி பயணப்பட்டு பின்னர் நீர்வற்றி தரை தட்டிய போது தாங்கள் குடியேறியதுதான் தோணிபுரம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதைகள் ///எவற்றுக்கும் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இவைகள் பழமரபுக் கதைகளாகவோ புரானக்கதைகளாகவோ காலந்தோறும் மக்களிடையே வழங்கிவருகின்றன.

ஒரு காலத்தில் பரவர் செல்வாக்குடையோராகவும் கடற்பயணம் பற்றியதான தங்கள் அறிவின் காரணமாக அவர்கள் மற்ற சாதியார் மீது செல்வாக்குச் செலுத்துவோராகவும் இருந்துள்ளனர். இவர்களுள் சிலர் ஆதிரயரசர்கள் என்ற பெயரில் ஆண்டுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களுள் சிலர் உத்திரகோசமங்கையிலிருந்து ஆண்டதாகவும், அந்நாட்களில் கடலோரப்பட்டினமான இந்த நகரம் மங்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே உள்ள  புகழ்பெற்ற இந்துக் கோவிலாக இன்று அது திகழ்கிறது//  (எட்கர் தர்ஸ்டன்- தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி ஆறு )

இது போக வலைவீசு புராணத்தில் சிவன் பார்வதி தொடர்புடைய கதையொன்றும். 1912-ல் வெளிவந்த மேல் மலையனூர்  வீரப்பதாசனார் எழுதிய ஆதி ஆதி ஐதீக புராணத்தில் பரதவர்களின் தொண்ணூறு மரபுகளை பட்டியிலிடுகிறது. (பரதவர் -அரு. பரமசிவம் -காவ்யா வெளியீடு)இதெல்லாம் இன்றைய காலச் சூழலில் ஒவ்வாது என்னும் நிலையில்,1901-ல் சென்னை மாநில சாதிக் கணக்கெடுப்பில் // பரவன் என்பவன் முறையே தமிழ், மலையாளம், கன்னடம் ஆகினவற்றைப் பேசும் மூன்று சாதிகளாக உள்ளனர். இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் பரவன் அல்லது பரதவனின் வழித்தோன்றல்களே....இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். (தென்னிந்திய குலங்களும் குடிகளும்-தொகுதி ஆறு) ஆனால் தூத்துக்குடி என்பது பரதவர்களின் பிற்கால தலைநகர்தான் பண்டையில் அவர்களின் பிரதான நகராக இருந்தது கொற்கை அது கடல் சார்ந்த இயற்கைப் பேரிடரில் பெரும் அழிவுற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நினைவுக்கு எட்டிய காலத்திற்கு முன்பிருந்தே  முத்துக்குளித்தல் தொழில் உரிமை பரவர்களிடமிருந்தது. பழைய தமிழ் நூலான கலவேடு  என்ற நூலில் பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவருக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வேத நாராயணன் செட்டியும் முத்துக்குழிக்கும் பரவரும் மதுரையை ஆண்ட பாண்டியன் மகளான அல்லியராசானிக்கு கப்பம் செலுத்தி வந்தனர்  என்கிறது அந்தக் குறிப்பு. அல்லியராசானி அவள் கப்பலில் பயணம் மேற்கொண்டிருந்த போது  புயலில் அகப்பட்டு இலங்கையில் சென்று ஒதுக்கினாள். அங்கு அவர்கள் கரை ஒதுங்கிய நேர்கை, குதிரை மலை ஆகிய இரண்டு இடங்களை கண்டனர். வேத நாராயணன் செட்டி தன் கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கே கொண்டு சேர்க்கும் படி பரவரை பணித்ததோடு கடல்கீலபம், கள்ளக்கிலபம் ஆகிய துறைகளில் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்ததோடு இரும்பைப் பொன்னாக்கும் ரசாசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டு வந்தான் என்கிறது அந்தக் குறிப்பு.

பாண்டியர் அரசு வலிமையானதாக இருந்தவரை பரவர்கள் பாண்டிய மன்னர்களிடமிருந்து பொது வரிவிதி்ப்பிலிருந்து விலக்கையும் பாதுகாப்பையும் பெற்று வந்தனர். 16-ஆம் நூற்றாண்டு வரை பரவர் செல்வச் செழிப்போடும், யாருக்கும் கட்டுப்படாமலும் வாழ்ந்து வந்தற்கான சான்றுகள் உள்ளன். மலபார் கன்னட கடற்கரை சார்ந்த கப்பல் படைத் தலைவனான வான் ரீதெயும், மதுரையினைச் சார்ந்த துறைமுகங்களின் தலைமை வணிகனான வயுரென்ஸ் ஆகியோர் எழுதிய கடிதங்கள் ஆதாரங்களாக உள்ளன.  19-02-1669-ல் எழுதப்பட்ட கடிதம் இப்படிச் சொல்கிரது “ இங்கு அவர்கள் (பரவர்கள்) அவர்களின் சாதித் தலைவனுக்கே கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். அரசனுக்கு ஆண்டுதோறும் கப்பமாக ஒரு தொகையைக் கட்டிவாந்தார்களே தவிற நாட்டின் பிற மக்களுக்கு உள்ளது போன்ற கடுமையான வரிச்சுமை ஏதும் இல்லை, அரசனின் நேரடி ஆளுகைக்குட்பாடாதவர்களாக தங்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட சாதித் தலைமைகளால் ஆளப்படுவோராக  பரதவர்கள் உள்ளனர் “  கொல்லம் முதல் இராமேஸ்வரம் வரை வாழும் பரவர் இந்த சாதித் தலைவருக்கு வரிச் செலுத்துகின்றார்கள் “ என்கிறது அந்தக் கடிதக் குறிப்பு. (எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் - தொகுதி-6) மேற்கண்ட கடிதம் பரதவரின் வாழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டான ஒன்றாக விளங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு அவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்தமையும் அதுவே பல போர்களுக்கும் ஆக்ரமிப்புகளுக்கும் காரணமாக அமைந்ததையும் நாம் வரலாற்றை நோக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றிலும் இராமேஸ்வரம் தொடங்கி  கன்னியாகுமரி வரை வாழ்ந்த பரதவர்கள் அடங்கி நடந்தது ஒரே ஒரு குழுவினரிடம்தான் அது போர்த்துக்கீசியரிடம் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகாலம் நீடித்த அந்த வரலாற்றில் மீனவ மக்களின் மேய்ப்பர்களாக போர்த்துக்கீசியர் இருந்துள்ளனர்.

இறுதியாக,
..................................

பொதுவாகவே சங்க இலக்கியங்கள் கடல்சார் நகரத்தையும் அது சார்ந்த கடல் வணிக வர்த்தகத்தையும் அது சார்ந்த செல்வச்செழிப்பையும் அது சார்ந்த கொண்டாட்டங்களையுமே வர்ணிக்கின்றன. ஒவ்வொரு திணையும் அது சார்ந்த தலை மக்களையும் குறிக்கும் அதே நேரம் நெய்தல் நிலத்தைப் பொறுத்தவரை அடித்தட்டு மீனவ மக்களின் வாழ்க்கை முறை தொடர்பாக எந்த விபரங்களையும் பெற முடியவில்லை. பொதுவாக பரதவர்கள் வசதியாக வாழ்ந்தது போன்றும் அவர்கள் வணிகம் செய்து செல்வத்தோடும் செல்வாக்கோடும் இருந்தது போன்றும் தெரிகிறதே தவிற பிற நிலங்களோடு அவர்களுக்கு வணிக நலன்களுக்கு அப்பால் உறவு இருந்ததற்கான சான்றுகள் மிக குறைவாகவே உள்ளன. பிற நிலங்களில் உள்ளவர்கள் சங்ககாலத்தில் நெய்தல் வெளியை எப்படிப் பார்த்தார்கள்?

வரலாற்றில் சைவர்கள், வைணவர்கள், சமணர்கள் என எல்லோருமே வேட்டையையும் புலால் உணவுகளையும் வெறுத்தவர்கள். சங்க இலக்கியங்களில் மலைக்காடுகளில் வாழ்ந்த வேட்டைப் பழங்குடிகள் பற்றியும் கடல்சார்ந்த வேட்டைப்பழங்குடிகள் பற்றியும் ஏனைய திணைகளைப் போன்ற பதிவுகள் இல்லாமல் போனதற்கு அவர்களின் சமையச் சார்புகளே காரணமாக இருந்திருக்கலாம் என்னும் நிலையில் பாரம்பரீய மீன்பிடிச் சமூகத்தில்  வணிகம் பெருகியதன் விளைவாக உற்பத்தி பெருகி அதில் மேல்தட்டுப் பிரிவினர் வணிகர்களாக மாறி கரையில் இருந்து கடலில் மீன்பிடித்த மீனவனின் உற்பத்திப் பொருளுக்கு விலை நிர்ணயித்த வரலாற்றின் தொடர்ச்சி இன்றும் உள்ளது. மீனவர்களிடையே மேசைக்காரர்கள் என்றும் மரக்காயர், என்றும் செட்டியார்கள் என்றும் அழைக்கப்படுவோர் இவர்களே.

மீனும், உப்பும், கடலும் உலகளாவிய வர்த்தக மையங்களாக இருந்த போதிலும் அந்த வணிகத்தால் மீனவர்கள் பயன் அடைந்தார்களா? சங்க இலக்கியங்கள் காட்டும் செழிப்பு என்பது அன்றைக்கு கடலோரத்தில் வாழ்ந்த மீனவனின் செழிப்பா அல்லது அவர்களை ஆட்சி செய்தவர்கள் அல்லது வரி வசூலித்துக் கொடுத்தவர்களின் செழிப்பா? மீனைப் பிடித்த போதும், முத்துக்குளித்த போதும், உப்பு விளைவித்த போதும் அதை விற்பனை செய்யும் உரிமை விலை நிர்ணயிக்கும் உரிமை மீனவர்களிடம் இருந்ததா? என்ற கேள்விக்கு இன்றைய நிலையில் இல்லை என்று சொல்லலாம். சங்ககாலத்தில் அதற்கான சான்றுகளே இல்லை.  கரையோரத்தை சம வெளி எப்போதுமே வென்று கொண்டுதான் இருக்கிறதா? தார்ச்சாலையும், இரயில் பாதைகளும் உருவாகி நகரம் சமவெளியை நோக்கி நகரந்த பின்னர் கடற்கரையை ஆக்ரமித்தவர்கள் யார்? உப்பை விளைவித்தவர்கள்  மீனவர்கள் அதை விற்பனை செய்தவர்கள் உமணர்கள் என்பது போல இன்றைய மீன்பிடிச்சமூகமும் அதன் பாரம்பரீய நிலங்களும் ஆக்ரமிப்புக்குள்ளாகி நிற்கிறதா? என்கிற கேள்வியிலிருந்தே கடலோர  அடித்தட்டு மக்களின் வாழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும்.

.........................................................................

துறைமுகங்கள், கிரேக்கர்கள், வணிகம், மூர்களின் வருகை..... உள்ளிட்ட சிலவும்.... போர்த்துக்கீசியர் எப்படி தூத்துக்குடிக்கு வந்தனர்? சாதிக் கொடுமையால் பரதவர்கள் மதம் மாறினார்களா? கோதுமைக்கும், மஞ்சள் மாவுக்குமா மதம் மாறினார்கள் மீனவர்கள்? போர்த்துக்கீசியர் வருவதற்கு முன்னால் கிறிஸ்தவர்கள் தென்னிந்தியாவில் இருந்தார்களா? இந்த கேள்விகளுக்கான பதிலை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

மூழ்கியவனின் கதை [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-3]


முத்துக்களின் கதை அல்ல, மூழ்கியவனின் கதை

காட்டைப் போல கடலும் அரிய வகை உயிரினங்களைக் கொண்டது. காட்டில் அரியவகை மரங்களும், மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருட்களும், லட்சக்கணக்கான ஆண்டுகளாக மட்கி உருவான கனிமங்களும் இருப்பது போன்று கோடிக்கணக்கான ரகசியங்களும் அரிய வகை கனிமங்களும் கொட்டிக் கிடப்பதுதான் கடல். உயிருள்ள உப்பு நீராக அடிவானம் தொட்டு விரிந்து கிடக்கும் கடலின் கண்டுபிடிக்க முடியாத அதன் ரகசியங்களிலிருந்து சிப்பியின் வயிற்றில்தான் முத்து இருக்கிறது என்பதை எவன் கண்டறிந்தான்?

உலக வணிகத்தில் பெரும் போட்டியையும், ஆக்ரமிப்பையும், யவன தேசத்தின் அழகிகளையும் பாண்டியர்களின் அந்தப்புரங்களுக்கு அழைத்து வரும் வல்லமையும் கொண்டதுமான இந்த முத்துக்களை முதன் முதலில் கடலில் மூழ்கி எடுத்தவன் எவன்?

இலங்கையை வென்று தன் பேரரசை நிறுவிய சோழர்கள் தன்னைப் புகழ்ந்த கவிஞர்களுக்கும், காதலிகளுக்கும், கோவில்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்களே அந்த முத்துக்களின் உரிமையாளர்கள் யார்?

உங்கள் கழுத்துக்களை அலங்கரிக்கும் முத்தின் அழகிற்குப் பின்னே கடலில் மூழ்கி மூர்ச்சையாகிப் போன மீனவனின் உயிரின் பற்றி நீங்கள் அறிவீர்களா?அந்தக் கதை வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது. நினைவுக்கு எட்டாத, நாம் கண்டறியாத காலத்திற்கு முந்தையது. முத்துப்பரல்களா? மாணிக்கப்பரல்களா? என்ற சர்ச்சையில் கோவலனின் உயிர், காவு வாங்கப்பட்டதிலிருந்து அறத்திற்கும் நீதிக்குமான ஆட்சிமுறை பற்றி நுட்பமாக கதை சொன்ன இளங்கோவடிகள் அந்த முத்துக்களை மூழ்கியெடுத்தவன் பற்றி எதையும் எழுத வில்லை.

இது முத்துக்களின் கதையல்ல அதன் செல்வாக்கின் பின்னே முத்துக்களுக்காக கடலில் மூழ்கியவர்களின் கதை.


தென்னிந்தியாவின் ஆதி மனிதச் சமூகங்களுள் ஒன்றாக கடலோரங்களில் வாழ்ந்த பரவர்கள் தொல் காலம் தொட்டே முத்துக்குளித்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். நினைவுக்கு எட்டாக் காலத்தில் இருந்தே பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக தமிழகக் கடலோரம், இலங்கையின் மன்னார், மற்றும் மலபார் கடலோரங்களில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றி(Dolphin) பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரிய மீனவர்கள்.


ஆனால் பாரம்பரிய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.


செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே, முத்து பேசப்பட்டது, மூழ்கியவன் மூச்சுத் திணறியே மரித்துப் போனான். அந்த சுரண்டலில் விளைவுதான் இன்று தென் தமிழக கரையோரங்களில் சுவாசிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறான்.

முத்தின் கதை.

தென்னிந்தியாவைத் தவிர இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவாலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற இடங்களாக தமிழக கடலோரமும் இலங்கையின் மன்னார் கடலோரமும் இருந்தன என்பது அறியக் கிடைக்கிற செய்தி.

சிப்பியின் வயிற்றில் விலைமதிப்பற்ற கவர்ச்சிகரமான முத்து ஒன்று இருக்கிறது என்பதை யார் கண்டறிந்திருப்பார்கள். பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் பிஷப்பும், எம். அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள். முத்தின் தோற்றம் பற்றியோ அது எப்படி கண்டெடுக்கப்பட்டது என்பது பற்றியோ உறுதியான தகவல்கள் எதுவும் இன்று இல்லை. தொன்மையில் மிக மிக முன்னேறிய நாகரீகச் சமூகங்களாக வாழ்ந்த கரையோரச் சமூகங்கள் பற்றிய பதிவு எப்படி இல்லையோ அப்படித்தான் முத்து எடுத்தவன் பற்றிய பதிவும் இல்லை,

முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இந்த பகுதிகள் எப்போதும் ஆக்ரமிப்புகளாலும் போராலும் சூழப்பட்ட பதட்டமான இடமாகவே வரலாற்றுக் காலம் தொட்டு இருந்து வந்துள்ள நிலையில், ஒரு சமூகம் தொடர்பாக அதை ஆள்வோர் அல்லது கட்டுப்படுத்தி வைத்திருப்போர் எழுதிய ஆவணங்களை இன்னொரு ஆக்ரமிப்பாளர்கள் அழிப்பதுமே நடந்திருக்கிறது. போர்த்துக்கீசியரின் ஆவணங்களை டச்சுக்காரர்களும், டச்சுக்காரர்களின் ஆவணங்களை ஆங்கிலேயரும் அழித்தது போல, இயேசு சபையின் ஆவணங்களை சீர்திருத்த கிறிஸ்தவமும், சீர்திருத்த கிறிஸ்தவத்தின் ஆவணங்களை ரோமன் கத்தோலிக்கமும் அழித்தது போல பழைய ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் விளைவாய் உள்ளூரில் ஏதும் வரலாற்றுப் பதிவுகள் இல்லை. ஆனால் தென் தமிழக கடற்கரையோரங்களில் நிலை பெற்று இருக்காமல் வர்த்தகத்திற்காக, தூதர்களாக, பயணிகளாக, வந்து போனவர்களின் முத்து பற்றி எழுதிய குறிப்புகள் உலகங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே முத்தெடுக்கும் தொழிலில் பரதவர்கள் ஈடுபட்டிருந்தாலும் முத்துக்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பதற்கான குறிப்புகள் கிபி- 1200 களிலிருந்தே கிடைக்கின்றன.  கிறிஸ்துவுக்கு முன்பு மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிசும், கிறிஸ்துவுக்கு பின்பு கிபி 140 -ல் இந்தியா பற்றிய குறிப்புகளை எழுதிய ஏர்ரியனும் (Arrian) முத்துக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர். நாம் அறிந்து கொள்ளாத பல விஷயங்களை அவர்கள் கூறுகிறார்கள். முத்துக்கள் பற்றிய அந்தக் குறிப்பில்,
தேனீக்களுக்கு எப்படி ராணீ தேனீ உண்டோ அப்படி முத்துக்களுக்கும் அரசன், அல்லது அரசி உண்டு. சிப்பிகளும் தேனீக்களைப் போல கூட்டமாக வசிக்கின்றன. அரசனைப் பிடிக்கிற அளவுக்கு நல்வாய்ப்புக் கிடைத்தால், அந்த மொத்தக் கூட்டத்தையும் வலையில் பிடித்து விடுவார்கள், அதே வேளை, அரசன் தப்பித்தால், மற்ற சிப்பிகளைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பே இல்லை - என்கிறது அந்தக் குறிப்பு. (Mr. Crindle, "Ancient India as described by Megasthenes and Arrian") - (தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு - எஸ். அருணாச்சலம்)

மெகஸ்தனிசுக்குப் பிந்தைய பிளினி தனது இயற்கை வரலாற்றில் சிப்பியின் வயிற்றில் முத்து எப்படி உருவாகிறது என்று ஒரு குறிப்பை எழுதியுள்ளார். இந்தியா பற்றிய குறிப்புகளில் சிப்பிகள் எப்படி கூட்டமாக வாழ்கிறது, சிப்பி எப்படி உருவாகியிருக்கிறது என்பது குறித்து எழுதியிருக்கிறார். ஆனால் சிப்பிக்குள்தான் முத்து இருக்கிறது. அதை இந்த நூற்றாண்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் முத்து தொடர்பாக மிக நீண்ட தரமான ஆய்வொன்றை மேற்கொண்ட எஸ்.அருணாச்சலம் மரபுவழியாக ஆதி காலம் தொட்டே சிப்பிகள் தமிழக கடலோரத்தில் தோன்றி சிப்பியிலிருந்து முத்து கண்டெடுக்கப்பட்டு  வணிகத்தோடு தொடர்பிலிருந்த உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்று கணிக்கிறார். ( தமிழக கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு - எஸ்.அருணாச்சலம்)

கொற்கைத் துறைமுகம்.

கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மெகஸ்தனிசும், கிபி 60 பதுகளில் எழுதப்பட்டதாக கூறப்படும் பெரிப்புளூஸ் நூலிலும், பிளினியின் (கிபி- 70)  இயற்கை வரலாற்றிலும், புவியியல் அறிஞரான தாலமியின் (கிபி-130) குறிப்புகளிலும் பின்னர் வெனிஸ் பயணியான மார்கோபோலாவாலும் (1270-1300) சீனத்தில் எழுதப்பட்ட ‘சுஃபான்சி’ நூலின் ஆசிரியர் சௌஜூகுவா (chujukua) வாலும், பின்னர் ஃப்ரையர் ஜோர்டன்னஸ் ( கி.பி -1330) (Friar Jordannus) ஆகியோராலும் எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகள் முத்து பற்றியும் கரையோரம் பற்றியும் உள்ளது. இது போக ஏராளமான வெளிநாட்டு பயணிகளும், மாலுமிகளும், இயேசுசபை துறவிகளும் வீரிவான குறிப்புகளை எழுதியுள்ளனர். ஆனால் அவை எதுவுமே நம்மிடம் இல்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தந்த நாட்டு ஆவணக்காப்பங்களிலும் லிஸ்பனில் உள்ள கிற்ஸ்தவ வரலாற்றுச் சுவடிக் காப்பங்களிலும் இந்த குறிப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

கடலோரங்களுக்கு அப்பால் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முத்துக்குளித்தலின் சந்தை தலை நகராக விளங்கிய கொற்கை பற்றியும் குறிப்புகள் உள்ளன. பெரிப்ளூஸ், பிளினி, தாலமி ஆகியோர் முத்துக் குளித்தலின் சந்தை என்று கோல்கிக் வளைகுடாவைக் காட்டுகிறார்கள். கோல்கிக் என்று அவர்கள் கூறுவது கொற்கைக் குடாவை .பரவலாக கொற்கைக்குடாவிலும் இலங்கை கரையோரங்களிலுமே முத்துக்குளித்தல் நடைபெற்றது.

பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது.

கீழைக்கடலோரமான தமிழக கடலோரத்தில் முத்துக்கள் கிடைத்த இடங்களுள் ஏற்றுமதிக்கும் சந்தைக்குமான ஒரு முக்கிய நகரமாக கொற்கை விளங்கியதாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நில நூல் அறிஞரான தாலமி கொற்கையை கொல்கோய் (kolknoi) என்றும் பெரிப்ளூஸ் கோல்ச்சி (colchi) என்றும் அழைக்கிறார்கள். இந்த இருவராலும் அழைக்கப்பட்டது தாமிரபரணி கடலில் கலக்கும் முகத்துவராத்தில் அமைந்து பின்னர் தாமிரபரணி வண்டல் மண்ணால் தன் பண்பை இழந்த பண்டை துறைமுக நகரான கொற்கையைத்தான் என்பதை கால்டுவெல் தன் திருநெல்வேலிச் சரித்திரம் நூலில் கூறுகிறார்.

கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் முற்காலத்துப் புத்த மதத்தினரால் இன்றைய தாமிரபரணி தம்பரன்னி (Tambapanni) என்று வழங்கப்பட்டதாகவும் மகா அலெக்ஸ்சாண்டரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவை அடுத்து பெரியதொரு தீவு உள்ளதென்பதும் அதன் பெயர் தப்ராபனி (Taprobane) என்றும் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லும் கால்டுவெல்,  புத்தர்களின் தம்பரன்னிதான் கிரேக்கர்களால் கொச்சையாக தப்ரானி என்று அழைத்திருக்கிறார்கள் என்கிறார். இன்று சிறிலங்கா என்று அழைக்கப்படும் இலங்கைத் தீவு பண்டையில் லங்கா, சிகாளம், சிலாம், சிலந்திப், செரன்திப், சீலன், சிலான், சிலோன், என்று இன்றைய சிறிலங்காவாக மருவி வந்திருந்தாலும், பண்டையில் அது தாம்பாபன்னி அல்லது தாம்ரபரணி என்று அழைக்கப்பட்டதாகவும் மகாவம்சத்தை உதாரணமாக காட்டுகிறார் கால்டுவெல். விஜயன் கூட்டத்தார் முதன் முதலில் குடியேறிய சிலோனின் மேற்குக் கரையோரமான புட்லம் என்ற குடியிருப்பு கிட்டத்தட்ட தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் கூடுதுறைக்கு அருகில் உள்ளதாகவும் அதன் அருகில் அமைந்த கொற்கையையும் தாமிரபரணி ஆற்றையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் பாண்டியர்களோடு விஜயன் கூட்டத்தார் மண உறவு கொண்டிருந்தனர் என்றும் கணிக்கிறார் கால்டுவெல் அடிகளார்.

ஆனால், தமிழர் நாகரீகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப் பட்ட  கொற்கையை பாண்டியர்களின் பண்டைத் தலைநகர் என்ற கால்டுவெல்லின் கருத்தை முத்துக்குளித்தல் என்னும் நூலை எழுதிய எஸ். அருணாச்சலம் மறுக்கிறார்.கொற்கை வேந்தர்கள் என்றழைக்கப்பட்ட பாண்டியர்களின் துணை தலை நகரமாக கொற்கை இருந்திருக்கலாமே தவிர பாண்டியர்களின் தலைநகராக கொற்கை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் சங்க இலக்கியங்களில் இல்லை என்கிறார். இதுவும் ஒருவகையில் நம்பத்தகுந்த ஆய்வாகவே உள்ளது. இந்த இரண்டு மேதைகளின் ஆய்வுகள் எதுவும் கொற்கையின் சிறப்பையோ அது பண்டை உலக வணிகத்தின் மையமாக இருந்தது என்பதையோ மறுக்கவில்லை.

அராபியர்கள், காயலுக்கு வருவதற்கு முன்னர் ஆதிகாலம் தொட்டு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவர்கள் முத்துக்குளித்தலில் தனி உரிமை பெற்றவர்களாக இருந்ததையும், பின்னர் மூர்கள் தொடங்கி ஆங்கிலேயர் வரை பரதவர்களை ஒட்டச் சுரண்டி முத்து வளத்தையே அழித்து, முத்துத் தொழில் இல்லாமல் போனதையும் எஸ்.அருணாச்சலம் மிக நேர்த்தியாக விவரிக்கிறார்.

’’பேருலகத்துமே எந்தோன்றி சீருடை விழுச் சிறப்பின், விளைந்து முதிர்ந்த விழு முத்தின், இலங்குவளையிருஞ்சேரிக் கட் கொண்டிக் குடிப்பாக்கத்தும், நற்கொற்கையோர்,,” என்கிற மதுரைக் காஞ்சி பாடலின் மூலம் வீரமிக்க பரதவர்கள் முத்துக்களையும் சிப்பிகளையும் கடலில் மூழ்கியெடுத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்ற போது அவருடைய ஆட்சியதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனியாட்சி செய்து முத்துக்குளித்தலில் தனி உரிமை பெற்றிருந்த பரதவர்களை நெடுஞ்செழியப் பாண்டியன் போர் செய்து வென்று பரதவர்களை வீழ்த்தி விலையுயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்ட கழுத்தணி ஒன்றை எடுத்துக் கொண்டான் என்கிறது சிறுபாணாற்றுப் படை, பரதவர்களை வென்றபின் முத்தின் உரிமை பாண்டியர்களுக்கு செல்வதையும் அவர்கள் முத்தின் மீதும் சந்தனத்தின் மீதும் ஏகபோக உரிமை கொண்டிருந்தனர் என்றும் சங்கப்படால்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போன்று காவிரிப்பூம்பட்டினத்தையும் உறையூரையும் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் கிபி-990- ல் பாண்டியர்களையும் வட இலங்கையையும் வெற்றி கொண்டு பேரரசு ஒன்றை நிறுவியதன் மூலம் கொற்கைக்குடா, மன்னார்வளைகுடா என முழு முத்துக்குளித்தல் உரிமையையும் எடுத்துக் கொண்டனர். நாளடைவில் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் படிந்து பெரும்பகுதி நிலமாக மாறியதால், அதன் அருகில் உள்ள பழைய காயல் என்ற காயல்பட்டினம், அதன் பின்னர் துறைமுகமானது.

முத்து விற்பனை சந்தை

சுமார் கிமு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் அதன் நூலாசிரியர் கௌடில்யர் தென்னிந்தியாவில் கிடைத்த விலையுயர்ந்த முத்துச் சிப்பிகள், தங்கம் பற்றியும், அதை மையப்படுத்திய வடநாட்டு வணிகம் பற்றியும் குறிப்பிடுகிறார். ஆனால் இதற்கு முன்னரும் வேத காலம் தொட்டே இந்த வணிகம் நடந்து வந்ததாக பல நூலாசிரியர்களும் எழுதுகின்றனர். நடுக்கடல் வணிகம், கடல் கடந்து வணிகம், கரையோர வணிகம் என்று பண்டையில் கடல்சார் வணிகமும் நகர உருவாக்கமும் கொற்கைக் குடாவில் செழித்தோங்கியிருந்தது. பெரும்பாலும் மீன்பிடித்தலில் நுளையர், திமிலர், சாலர், பஃறியர் போன்ற கடலோடிச் சமூகங்கள் ஈடுபட்டாலும் நெய்தலில் தலை மக்களாக சங்க இலக்கியங்கள் கட்டுவது பரதவரைத்தான். அவர்கள் கடலில் பல தொழில்களில் ஈடுபட்டாலும் வருடத்திற்கொரு முறை முத்துக்குளித்தலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் முத்தும், மீனும், உப்பும் இருந்ததே தவிர விற்பனை உரிமை அவர்களிடம் இல்லை. உப்பு வணிகத்தில் கரையோர உமணர் சமூகமும், கடல், மற்றும் கரையோர வணிகத்தில் மாசத்துவான் என்னும் இனமும் ஈடுபட்டதற்கான் சான்றுகளே உள்ளன.

கடல் கடந்த வணிகங்கள் நடந்தாலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பண்டமாற்று பரிவர்த்தனை மூலம்தான் பெற்றுக் கொண்டனர். அக்காலத்தில் உணவுப்பழக்கத்தில் இருந்த விளை பொருட்களை விவசாயப் பெருங்குடிகள் மீனவர்களிடம் கொடுத்து தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுச் செல்லும் வளமை இருந்திருக்கிறது. கள்ளுக்காக மீனவர்கள் முத்துக்களைக் கொடுத்த குறிப்புகளும் சங்கப் பாடல்களில் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது நாடார் இன விவசாயிகள் மாம்பழங்கள், கொல்லாம்பழம் (முந்திரி பழம்) பனங்கிழக்கு ஆகியவற்றைக் கொடுத்து மீன்களைப் பெற்றுச் செல்வார்கள். மீனவர்கள் மட்டுமல்ல எல்லா சமூங்களுமே தான் உற்பத்தி செய்கிற பொருளைக் கொடுத்து தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிற சிறு பண்டப் பரிவர்த்தனை உறவே பண்டையில் நிலவியிருக்கிறது. ஆனால் பெருவணிகம் என்பது கொற்கை, தொண்டி, காவிரிப்பூம்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் இருந்து கால நீட்சியாய் நடைபெற்றிருக்கிறது.

உறையூர்,காவேரிப்பூம்பட்டினம்,நெல்கிண்டா (கோட்டயம்), முசிறி(கிராங்கனூர்) ஆகியவை பிரதான முத்து விற்பனை மையங்களாக இருந்தன.இதில் கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் முசிறி ஆகியவை செழிப்பான சந்தையைக் கொண்ட துறைமுக நகரங்களாக விளங்கின. ஆதிக்காலத்தில் வட இந்தியாவோடு வணிகம் நடைபெற்றாலும் ரோமாபுரி, கிரேக்கம், சீனம் ஆகிய இடங்களுக்கும் முத்துக்கள் தமிழக கரையோரங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. ரோமானியர்களும், பாபிலோனியர்களும் முத்துக்களின் மதிப்பைக் கொண்டு சமூக உயர் வர்க்க அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். முத்து ஆடம்பரத்தின் அடையாளமாக மேன்மை மிக்க செல்வச்செழிப்பின் அடையாளமாக ஆதிக்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.

வணிகர்களின் வருகை.

தென்னிந்தியாவில் உள்ள யானைத் தந்தங்கள், நறுமணப்பொருட்கள், முத்துக்கள் ஆகியவை அந்நிய வணிகர்களைக் கவர அவர்கள் கிறிஸ்து காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வர்த்தக நோக்கில் தென்னிந்தியாவுக்கு வரத்துவங்கினார்கள். எகிப்தியர்களும், ரோமானியர்களும், கிரேக்கர்களும், சீனர்களும் என பல நாட்டு வணிகர்களும் கொற்கையை தங்கள் தேவைக்கான பரிவர்த்தனை துறைமுகமாக பயன்படுத்தியுள்ளனர். அதே காலத்தில் முற்காலப்பாண்டியர்கள் முத்துக் குளித்தல் உள்ளிட்ட எல்லா உற்பத்தியிலும் ஏக போக உரிமை கொண்டிருந்தனர். பின்னர் கிபி முதலாம் நூற்றாண்டில் சோழ மன்னன் இலங்கையை வென்று சோழர்கள் தங்களின் பேரரசை விரிவுபடுத்திய பின்னர் சோழர்களின் கைகளுக்கு முத்துக் குளித்தல் சென்றது. இதில் குறிப்பிடத் தக்கதாக நான் புரிந்து கொள்வது என்னவென்றால் முத்துக்குளித்தலில் தனியுரிமை கொண்டவர்களாக இருந்த பரதவர்களிடமிருந்து பாண்டியர்கள் திறையாக முத்துக்களை வசூலித்துக் கொண்டு வணிகத்தை கட்டுப்படுத்தினார்களே தவிர முத்தெடுக்கும் பரதவர்களின் உரிமையை அவர்கள் பறித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இந்த வரி வசூலிக்கும் விஷயத்தில் கறாரான அணுகுமுறையை பாண்டியர்கள் கொண்டிருக்க வேண்டும். முத்து வளம் குன்றிய போது. (முத்து வளம் என்பது காற்று, சூரிய ஒளி போன்ற காலச்சூழல் மாறுபாட்டிற்கு ஏற்ப மன்னாரிலும், கீழைக்கடலோரத்திலும் பருவத்திற்கேற்ப குன்றியும் செழித்தும் கிடைத்து வந்தது) பரதவர்களால் வரிச் செலுத்த முடியாமல் போன போது பாண்டியர்கள் பரதவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை அடக்கியும் உள்ளனர். முத்துக்குளித்தல் உரிமையிலும், வரி விதித்ததிலும் பாண்டியர்களும், சோழர்களும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் பரதவர்கள் மீது கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் கரையோரங்களில் வாழ்ந்த பண்டை பரதவர்கள் மன்னர்களின் ஆளுகைக்குட்படாத தனி ஆட்சி முறையைக் கொண்டிருந்தனர். அவர்கள் சாதி தலைவர்களால் அம்பட்டர், அல்லது பட்டங்கட்டிகளால் ஆளப்பட்டு வந்தனர். இதை ஆட்சி முறை என்று புரிந்து கொள்வதை விட மன்னராட்சி நிலப்பரப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்ட ஒரு கடலோர இனமாக பரதவர்கள் உள்ளிட்ட எல்லா கடலோரச் சமூகங்களுமே இருந்திருக்க வேண்டும். அதை பரதவர்களின் சாதித் தலைவர்களாக கடற்கரையில் செல்வாக்குச் செலுத்திய பட்டங்கட்டிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த பட்டங்கட்டிகள் ஆங்கிலேயர் ஆட்சி வரை கடலோரக் கிராமங்களில் செல்வாக்குச் செலுத்தியவர்கள் இப்போது கூட பட்டங்கட்டி பரம்பரை என்று உழைக்கும் மீனவர்களை விட தங்களை மேன்மையானவர்களாக கட்டிக் கொள்கிறவர்கள் கடலோர கிராமங்களில் உண்டு.

ஆனால் கடல்தான் பயணங்களுக்கான வழியாகவும் வர்த்தக நிலையமாகவும் இருந்தபடியால் இவர்களால் நிம்மதியாக எப்போதும் நீடித்த அமைதியான ஆளுகையையோ ஆட்சி முறையையோ கொண்டிருக்க வில்லை. ஆனால் அதே நேரம் மன்னாரில் பாரம்பரிய மீனவ இனமான முக்குவர்கள் தங்களுக்கான தனி முக்குவச் சட்டத்தைக் கொண்டு தனி ஆட்சிமுறையையும் கொண்டிருந்தனர். ஆனால் பரவர்களுக்கென்று தனிச்சட்டங்கள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களின் பழைய தலைநகரான கொற்கையும், சோழர்களின் தலைநகரான உறையூர் அல்லது காவேரிப்பூம்பட்டினமுமாக முத்து வணிகம் அவரவர் ஆளுமைக்கேற்ப நடந்துள்ளது. பாண்டியர்கள் நீண்ட கால ஆட்சிமுறையைக் கொண்டுருந்தவர்கள் என்பதாலும் கொற்கை பாண்டியர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்த படியாலும் கொற்கை இயல்பாகவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் கிபி முதலாம் நூற்றாண்டில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக நெல்கிண்டாவில் (கோட்டயத்தில்) விற்பனை செய்யப்பட்டதாக பிளினி குறிப்பிடுகிறார்.உள்நாட்டுத் தேவைக்கான முத்துக்கள் மதுரைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் தரம் பிரிக்கப்பட்டு பல் வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. முத்துக்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரதானமாக ரோமாபுரிக்கு ஏற்றுமதியானதாக பிளினி கூறுகிறார்.இப்படி வணிகத்திற்காகச் சென்றவர்கள் முத்துக்களைக் கொடுத்து அழகிய  யவனப்பெண்களையும், போர் வீரர்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கிவந்ததற்கான குறிப்புகளும் உள்ளன. பாண்டியர்களின் அந்தப்புரங்களில் யவனப்பெண்கள் பாண்டிய மன்னர்களுக்கு மதுபானங்களை பரிமாறியாதான குறிப்புகளும் உள்ளன. இந்த யவனர்கள் கிரேக்கர்கள் எனப்படுகிறார்கள்.

கிபி 990 வாக்கில் சோழப் பேரரசு நிறுவப்பட்ட பின்னர் பின்னர் காவிரிப்பட்டினம் என்றழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து முத்தும், மிளகும், தங்கமும் ஏற்றுமதி செய்யப்பட்டு விலையுயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு காவிரிப்பூம்பட்டினம் செழித்தோங்கியதை பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது. ஆனால் விலைமதிப்பற்ற இந்த முத்துக்களை உலகிற்கு வழங்கியவர்கள் என்று அதை வணிகர்களையும் ஆட்சி செய்தோரையும் புகழ்கிறது பெரும்பாணாற்றுப்படை. பாண்டியர்களின் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் மண்ணால் நிலமாக மாறியதால் பின்னர் பழைய காயல் பாண்டியர்களின் புதிய துறைமுகம் ஆனது போல, சோழர்களின் காவிரிப்பூம்பட்டினத்தையும் கடல் கொள்ள காஞ்சிபுரத்தை சோழர்கள் தலைநகராக மாற்றியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரம் சோழர்களின் தலை நகர் என்பதை மறுப்வர்களும் உண்டு. பாண்டியர்களைப் போல சோழர்களும் எகிப்தியர்களோடும், ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும், சீனர்களோடும் முத்து வணிகத்தில் ஈடுபட்ட காலத்தில் சோழர்களை பிற்கால பாண்டியர்கள் என்றழைக்கப்படும் பாண்டிய அரசின் கடைசி மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கிபி.1268-1310) கொல்லத்தையும் இலங்கையையும் வென்று சோழ சாம்ராஜ்யத்தைச் சரித்தான். சோழர்கள் முத்துக்களை அள்ளி தன்னைப் புகழ்ந்து பாடியவர்களுக்கும், கோவில்களுக்கும் அள்ளிக் கொடுத்த வரலாறுகள் வேள்விக்குடி செப்பேடுகள் மூலம் தெரியவருவதெல்லாம் தனி வரலாறு.

தொடரும்..........