Friday 1 June 2012

தமிழக மீனவர்களிடையே கிறிஸ்தவம் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-5 ]


”ஏனென்றால் நமக்கு உதவ கடவுளைத் தவிற வேறு எவரும் இல்லை” பிரான்சிஸ் சேவியர்.

புதிய எஜமானர்களாக போர்ச்சுக்கீசியர் கொச்சியிலிருந்து வந்து மூர்களை அடக்கியபின் பிரதிபலனுக்காக முப்பது கிராமங்களைச் சார்ந்த சுமார் 20,000 பரவர்களை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக்கியதுடன் 1532-ல் போர்த்துக்கீசியர் தூத்துக்குடியில் கால் பதித்தனர். கன்னியாகுமரி தொடங்கி இராமேஸ்வரம் வரையில் சுமார் 30 கிராமங்கள் பரவர்களின் கிராமங்களாக இருந்தன. அதில் முத்துக்குளித்துறையின் தலைமையாக 16-ஆம் நூற்றாண்டில் உருவான கிராமம்தான் தூத்துக்குடி.

போர்த்துக்கீசியர் கால்பதித்தனரே தவிற அங்கு மூர்களும் பலம் குன்றிய நிலையில் ஆனால் பரவர்கள் மீது செல்வாக்குச் செலுத்துபவர்களாக இருந்தனர்.  நீண்ட கால கலப்பினால் அவர்களது குடியிருப்புகளும் வலுவாக கடற்கரையில் உருவாகியிருந்தது. மரக்காயர் பட்டினம் உருவாக, காயல்பட்டினத்திலும் அவர்கள் கணிசமான அளவுக்கு குடியிருந்தனர். முழுமையான அதிகாரம் ஒன்று கைகூடாத நிலையில் போர்த்துக்கீசியர்கள்  இந்தியாவுக்கு வந்த முதல் ஐம்பது ஆண்டுகள் புன்னைக்காயலில் இருந்தே ஆட்சி செய்தனர் அவர்கள் அங்கு ஒரு கோட்டையையும் கட்டினார்கள்.

பரவர்கள் மதம் மாறிய 1532- க்கும் பிரான்சிஸ் சவேரியார் தூத்துக்குடிக்கு வந்த 1542-க்குமிடையேயான காலம் மிக முக்கியமானது. மீன் பிடிக்கிராமங்களில் அமையப்பெற்றிருந்த உள்ளூர் நிர்வாக அமைப்புகள் அனைத்தும் போர்ச்சுக்கீசியரால் கைப்பற்றப்பட்டன. கடன் வசூல், வரி வசூல் போன்றவைகளில் நேரடியாக போர்ச்சுக்கீசியர் ஈடுபட்டனர். போர்த்துக்கீசிய மன்னரால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவர்தான் ஜாண் டி குரூஸ் அவர்தான் மூர்களின்  நெருக்கடியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள போர்த்துக்கீசியரின் உதவியை நாடும் படி பரவர்களுக்கு அறிவுரை வழங்கியவர். சாதித் தலைவனான பட்டங்கட்டிகளுக்கு கட்டுப்பட்ட நிலை மாறி போர்த்துக்கீசியரின் ஆளுகைக்குட்பட்டவர்கள் என்ற நிலை உருவானது. அவர்கள் மீனவ மக்களின் தொழில் உரிமையையும் வழிபாட்டு உரிமையையும் தீர்மானித்தார்கள். இப்போது பட்டங்கட்டிகள் இருந்த இடத்தில் செல்வாக்கான போர்த்துக்கீசிய பாதிரிகள் இருந்தார்கள். பட்டங்கட்டிகளை இந்த பாதிரிகள் கட்டுப்படுத்தி பரதவ மக்களின் வாழ்வைத் தீர்மானித்தார்கள். மதம் மாறிய பரவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க பெயர்களைச் சூட்டிய பாதிரியார்கள் போர்த்துக்கீசியர்கள் குடும்பப்பெயர்களை சூட்டிக் கொள்ளவும் அனுமதித்தனர். அவர்கள் பரவர் சாதித் தலைவனான பட்டங்கட்டிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மேதகை (Dom) என்ற பெயரை சூட்டிக் கொள்ள அனுமதித்தனர். ஏனைய மக்களுக்கு கோமஸ், மொராய்ஸ், பெர்னாண்டோ, மஸ்கர்னாஸ், குரூஸ், மிராண்டா, வாய்ஸ், லிமஸ், கன்காஸ் போன்ற குடும்பப் பெயர்களைச் சூட்டினார்கள். இதில் எந்த ஒன்றை ஒருவர்  போர்த்துக்கீசியரிடம் இருந்து பெற்றுக் கொள்கிறாரோ அவரின் வழி வந்தவர்களும் அதே குடும்பப் பெயரால் அழைக்கப்படுவார்.

தென் தமிழக மீனவர்களிடையே கிறிஸ்தவம்.
..................................................................................................................

தூத்துக்குடியில் மதம் மாறிய பரவர்கள் ஒதுங்கி கடலோரமாகவும் துறைமுக நகரங்களிலும் வாழ்கிறவர்கள். அந்தக் காலக்கட்டங்களில் இன்றைக்கு சமவெளிச்சமூகங்களின் ஆக்ரமிப்பில் கடலோர நகரங்கள் தங்களின் பூர்வீக தன்மையை இழந்து சாதி இந்துக்களின் அடையாளங்களில் மூழ்கிய நிலை போன்று அன்று இல்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவறை குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை 16-ஆம் நூற்றாண்டை சாதிகள் இறுக்கமாக வலுப்பெற்ற காலம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். சாதிகள் இறுக்கம் பெற்ற அதே காலத்தில் பார்ப்பன பண்பாடு வெகுவேகமாக தமிழகத்தில் பரவியமையும். அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாதாரின் கிளர்ச்சியும், இன்னொரு பக்கம் விஜயநகரப்பேரரசில் தெலுங்கர்கள் பெருவாரியாக தமிழகத்தில் குடியேறியமையுமாக ஒரு பண்பாட்டு அசைவுக்கு தமிழகம் முகம் கொடுத்த நூற்றாண்டின் துவக்கமாகவும், தொடர்ந்து சண்டாளர்கள் எனப்படுவோரை கீழான நிலையில் நிறுத்தியமையும் கூட இந்த நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்றதாகக் கொள்ள முடியும். நிலத்தோடு தொடர்புடைய விவசாயச் சமூகங்களை வலங்கை என்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்ட சமூகங்களை வலங்கை என்றும் நிர்வாக வசதிக்காக பிரித்து மோதிச் சென்ற சமூக அசைவியக்கம் சுமார் 900 ஆண்டுகள் நீடித்ததாகத் தெரிகிறது. இன்னொரு பக்கம் பாசன வசதி இல்லாத நிலமற்ற ஏழைகளான பல சமூகங்கள் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டமையும் இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.

பல் வேறு படையெடுப்புகள், சாதி தொடர்பான இறுக்கமான நிலையை சமூகத்தில் தோற்று வித்த அதே நூற்றாண்டில் சாதி பற்றிய ஓர்மைகளுக்கு அப்பால் ஒரு இனம் தன் தொழில் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தனது பாரம்பரீய வதிவிடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் போராடிக் கொண்டிருந்தது. அராபியர்கள் தொடுத்த பண்பாட்டுப் போருக்கு தென் தமிழக பரவர்களால் முகம் கொடுக்க முடியாது போன போது தங்களின் தொழில் உரிமையை காப்பாற்றிக் கொள்ளவே பரவர்கள் மதம் மாறினார்கள். சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு மத மாற்றம் ஒரு தீர்வாக அமையும் என்ற கருத்து செல்வாக்குச் செலுத்த துவங்குவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பரவர்கள் முத்துக்குளிதல் உரிமையை அராபிய மூர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள மதம் மாறினார்கள். அதுவே தமிழகத்தில் முதல் கிறிஸ்தவ மத மாற்றம். முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியரின் காலமான கிபி 1533 -ல் தொடங்கி டச்சுக்காரர்கள் வரும் வரை இந்தியக் கரையோரங்களில் வாழ்ந்த பரவர்கள், கரையார், முக்குவர் ஆகியோர் தொழில் உரிமையையும் கடல் உரிமையையும் பாதுகாக்கவே  தொடர்ச்சியாக மதம் மாறியுள்ளனர். முத்துக்குளித்துறை பரவர்களின் மதமாற்றத்திற்கு முத்துக்குளித்தல் உரிமை ஒரு காரணமாக எப்படி இருந்ததோ அப்படித்தான் இலங்கை கரயோரத்தில் கரையார்களும், முக்குவர்களும் மதம் மாற அதுவே காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் தென்னிந்தியாவின்  கீழைக்கடலோரத்திலும், மலபார் கடலோரத்திலும் முதன் முதலாக மதம் மாறியவர்கள் உயர்சாதி நம்பூதிரிகளும், நாயர்களும் , வணிகத்திற்காக போர்த்துக்கீசியர் வருவதற்கு சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே தோமையார் எனப்படும் தாமஸ் மலபார் கரைக்கு வந்து கிறிஸ்தவம் பரப்பினார். தாமஸ் வருவதற்கு முன்பே சிரியன் கிறிஸ்தவர்கள் மலபாரில் குடியேறியிருந்தார்கள். தாமஸ் தன் மதப் பரம்பலை தொடர சென்னை மயிலாப்பூர் வந்த போது அவரால் யாருக்கும் திருமுழுக்குக் கொடுக்க இயலவில்லை.  இது குறித்து பாதிரியார் எஸ். வெனன்சியூஸ்  ” புனித தோமையார் போதித்த திருமறை மயிலாப்பூர் பகுதியில் முதன் முதலாக காலூன்ற முடியாமல் போயிற்று! அவருக்குப் பின் ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத் தமிழக மண்ணில்  நிலை பெற முடியாமல் தவித்த கிறிஸ்தவ திருமறையானது கி.பி-1535-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி துறைமுகத்திலும் மதுரை மாநிலத்திலும் பரவத் தொடங்கியது”

1535- தொடங்கி வெகு வேகமாக தென் தமிழக கரையோரங்களில் ரோமன் கத்தோலிக்க மதம் பரவத் தொடங்கியது. சென்னை கரையோரத்தில் நடந்த மதப்பரப்புதல் முயற்சி வெற்றியடையாத நிலையில் புனித தாமஸ் என்கிற தோமையார் கிபி 52-ல் மேற்குக் கரையான மலபாரில் கிறிஸ்தவம் பரப்பினார். பின்னர் கிழக்குக் கரையோரமான சென்னைக்கு வந்து மதப்பரப்பலில் ஈடுபட்ட போது மயிலாப்பூர் மன்னனால் கிபி 72-ல் கொல்லப்பட்டார். அவர் புதைக்கப்பட்ட இடமே சாந்தோம் பேராலயம் ஆனது. பின்னர் போர்த்துக்கீசிய சபைகளுள் ஒன்றான பிரான்சிஸ்கன் சபையினர் (1182-1226) மதப்பரப்பலுக்காக வந்தனர். சபையின் ஒரு துறவியாக இருந்த ஜான்மோந்தே கொர்வினோ நூற்றுக்கும்  அதிகமானோருக்கு திருமுழுக்க அளித்ததாக கூறப்படுகிறது.4. ஆக மொத்தம் சென்னை சந்தோமில் 1535 - ஆம் ஆண்டிற்கு முன்னரே திருமுழுக்கு நடந்திருந்தாலும் சரியான ஆண்டு தெரியவில்லை. சற்றேறக்குறைய பதின்மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதமாற்றம் நடந்திருக்கலாம்.சென்னை கடலோரத்தில் பரவரின் வழித்தோன்றலான பட்டினவர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். 300 ஆண்டுகளுக்கு முன்னர் கூட சென்னை ஒரு மீனவ கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சிஸ்கன் சபையிலிருந்து உருவான கப்புச்சின் சபையில் கூட இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் பாதிரியார்கள் பணி செய்ய வந்து சென்றார்கள்.


போர்த்துக்கீசியரின் காலம்.
..........................................................................

தோமையாரின் பணி கேரளக்கரையான மலபாரோடும், தமிழகத்தின் சென்னைக் கரையோரத்திலும் முடிந்து போக 16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாலமியால் “கொசிக் கொரே” என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடியில் வேர்விட்டது. பரவர்கள் மதம் மாறி சுமார் ஏழு ஆண்டுகளின் பின்னர் கிபி-1542-ல் பிரான்சிஸ் சேவியர் என்ற இயேசு சபைத் துறவி மணப்பாடு வந்தார். தங்களின் முதல் மறை மாநிலமான கோவாவிலிருந்து மதம் மாறிய பரவர்களை உறுதிப்படுத்தவும் மேலும் கரையோர மீனவ மக்களை கத்தோலிக்க திருச்சபைக்குள் ஈர்க்கவும் பிரான்சிஸ் சவேரியார் மதம் மாறிய பரவர்களின் ஏழு கடற்துறைகளுக்கும் பொறுப்பாளியாக அனுப்பப்பட்டார்.

அவர் உண்மையில் அந்த மக்களை நேசித்தார், பல நேரங்களில் கண்டிப்போடும் சில நேரங்களில் கரிசனத்தோடும், மக்களிடம் பழகினார். மக்கள் அவரை சவேரியார் என்று அன்போடு அழைத்தார்கள். வடுகப்படைகளிடம் இருந்து மீனவ மக்களைக் காக்க அவர் காட்டிய அக்கறையை அவர் கடிதங்கள் வாயிலாக படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.  நிர்வாகத் திறனிலும் சக ஊழியர்களிடம் அவர் காட்டிய அன்பும், கண்டிப்பும், கரிசனமும்தான் அவரை இந்த மக்கள் வரலாற்றில் மாபெரும் தலைவனாக ஏற்றுக் கொள்ள வைத்தது என்றால் அதுதான் உண்மை.

கொற்கை துறைமுகம் தாமிரபரணி வண்டல் மண்ணால் மூடி நிலமான போது  புதிய துறைமுகமாக காயல் உருவானது. அதுவும் அராபிய மூர்களின் குடியேற்றப்பகுதியாக இருந்தது. போர்த்துக்கீசியர் 1532-ல் அராபிய மூர்களை வெல்லும் வரை அது அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மூர்களிடமிருந்து போர்த்துக்கீசியர் பரவர்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக பரவர்கள் ரோமன் கத்தோலிக்கர்களாக மதம் மாறி  பத்தாண்டுகள் கழித்தே சவேரியார் 1542- கோவாவிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார். மூர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பரவர்கள் காயலில் இருந்து வெளியேறி தூத்துக்குடி , புன்னைக்காயல் உள்ளிட்ட பகுதிகளில் குடியேறியிருந்தனர். சவேரியார் காலத்தில் அப்பகுதியை  பல குறு நில மன்னர்கள் ஆண்டு வந்தனர். வடக்கில் ஆண்ட தெலுங்கு வடுக மன்னர்களும்  வெட்டும் பெருமாளின்  அரசில் கடலோரப்பகுதிகளான பரவர் கிராமங்களான வேம்பாறு தொடங்கி புன்னைக்காயல் வரை அடங்கியிருந்தது. உன்னி கேரள வர்மன் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட போது புன்னைக்காயல் தொடங்கி கன்னியாகுமரி வரையான கடலோரப்பகுதிகள் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னனான உதய மார்த்தாண்ட வர்மாவின்  அரசின் கீழ் கோவளம் தொடங்கி மலபார் கரை வரையிலான கடலோரப்பகுதிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. இப்படி கீழைக்கடலோரமான வங்கக்கடலிலும், மேற்குக்கடலோரமான  அரபிக்கடலிலுமாக நீளமான இந்த கடலோரம் இவர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில்தான் கரையோர பரவர்களை போர்ச்சுக்கீசியர் மதமாற்றம் செய்து போர்ச்சுக்கீசிய குடிமக்கள் ஆக்கியிருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கு முன்பும் பின்புமாக இக்கரைக்கு வந்தவர்களுக்கும் போர்த்துக்கீசியருக்கும் ஒரு நுட்பமான வேறு பாடு இருந்தது. அராபியர்கள் வணிகத்திற்காக வந்து இந்தியாவெங்கிலும் பரவினாலும் அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள குறு நில மன்னர்களையும் பெரு நில மன்னர்களையும் அனுசரித்து அவர்களுக்கு திறை செலுத்தியே தங்களை இந்த மண்ணில் வலுப்படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மன்னனின் பகுதியை வெற்றி பெறுவதும், பின்னர் அதை இன்னொருவர் கைப்பற்றுவதுமாக மன்னர் ஆட்சிகள் அமைய, முத்துக்குளிக்கும் தொழில் செழிப்பாக நடந்த தென் தமிழக கடலோரப்பகுதியில்  சோழர்களும், பாண்டியர்களும் மேற்கொண்டிருந்த வர்த்தகக் கொள்கை என்பது திறந்த சந்தை வணிகமாக இருந்தது அவர்கள் எல்லா வெளிநாட்டு வணிகர்களுக்காகவும் இக்கடற்கரையை திறந்து விட்டனர். வணிகத்திற்காக வந்தவர்கள் ஆளும் மன்னனுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டதோடு முத்துக்குளித்தலில் கிடைத்த வருமானத்தில் கணிசமான பங்கொன்றை மன்னர்களுக்குக் கொடுத்துமே அவர்கள் முத்து வளத்தை அள்ளிச் சென்றனர். விஜயநகரமன்னர்களின் நிலக்குத்தகைதாரர்களாகவும் திறை பெற்று மன்னனுக்குக் கொடுக்கும் குறு நில மன்னர்களாகவும் இருந்த நாயக்க மன்னர்களும் கூட சோழர்களும் பாண்டியர்களும் கொண்டிருந்த அதே   திறந்த சந்தை வணிக கொள்கையையே கொண்டிருந்தனர். ஆனால் கரையோரங்களில் வந்திறங்கி வணிகச் சாவடிகளை அமைத்த போர்த்துக்கீசியர்கள் உள்ளூரில் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்களை கணக்கில் எடுக்கவில்லை. வணிகம் செய்யும் தொழிலில் ஏகபோக உரிமையைக் கொண்டவர்களாக போர்த்துக்கீசியர்கள் விளங்க முற்பட்ட போது அவர்கள் புதுப் புது எதிரிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. மலபாருக்கு அவர்கள் வந்த போது அதுவரை அங்கு செல்வாக்குச் செலுத்திய போது  அராபிய வணிகர்களின் கப்பலுக்கும் மலபார் கடலைப் பயன்படுத்தும் எவர் ஒருவருக்கும் வரி வசூலித்தனர். அவர்கள் ஏக போக எஜமானர்களாக இப்படி உலவுவதை எந்த குறுநில , பெரு நில மன்னர்களும் விரும்பவில்லை என்றாலும் ஒன்றை ஒன்று மோதி வென்று ஆக்ரமிப்பு  போர் வெறியில் அலைந்த மன்னர்கள் துவக்கத்தில் போர்த்துக்கீசியரின் வருகையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த மன்னர்களுக்கிடையில் எழும் நாடு பிடிக்கும் ஆசையை தங்களின் வணிகத்திற்காக நுட்பமாக போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்திக் கொண்டனர். நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆளும் உன்னி கேரளவர்மனுக்கும், வெட்டும் பெருமாளுக்கும் நடக்கும் போர், இன்னொரு பக்கம்  போர்த்துக்கீசியர்கள் பரவர்களை மதம் மாற்றியதால் கோபமடைந்த வடுகர்கள் பர்வர்களைத் தொடர்ந்து தாக்கிய நிலையில் தூத்துக்குடியில் இருந்த போர்த்துக்கீசிய படைத்தளபதி கோஸ்மி டி பாய்வா குறு நில மன்னன் வெட்டும் பெருமாளோடு குதிரை வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அராபியர்களும், வடுகர்களும், முத்துக்குளித்துறையை கட்டுப்படுத்தினார்கள். அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறோம் என்று வந்த போர்த்துக்கீசியர்கள் பரவர்களை எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாராணமாக உள்ளது.

ஒரு பக்கம் போர்த்துக்கீசியர்கள் பரவர்களை மதம் மாற்றி முத்துக்குளித்தல் உரிமையை பரவர்களிடம் வழங்கி பரவர்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ஆட்சி செய்தாலும், அவர்களைப் காப்பாற்றுகிற வலுவோ முக்கியத்துவமோ இல்லாமல் இருந்தனர். தங்களின் ஆட்சியை இங்கிருந்து இலங்கைக்கு விரிவு படுத்திய போர்த்துக்கீசியரால் தென்னிந்திய, இலங்கை கரையோரங்களில் நிலை மத ரீதியாக நிலை பெற்றார்களே தவிற அரசியல் ரீதியாக தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை. உள்ளூர் ஆட்சியாளர்களுக்கிடையிலான போட்டிக்கும் அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. போர்த்துக்கீசியர்களின் இத்தகைய நிலைதான் அவர்களால் அங்கு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாமல் போனமைக்கான காரணம், தவிறவும் கரையோரங்களில் மதப்பரப்பலில் ஈடுபட்ட போர்த்துக்கீசியரால் உள்ளூர்களில் பெரிய அளவில் கடலோர கிராமங்களை ஒட்டிய உள்ளூர்களில் ரோமன் கத்தோலிக்க மதம் பரவினாலும் கடலோர சமூகங்கள் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவிய அளவுக்கு தென் தமிழக உள்ளூர் மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தைத் தழுவவில்லை.  ஆனால் உள்ளூரில் அடிமைச்சாதிகளாக இருந்த நாடார் மக்களிடமும் தலித்துக்களிடமும் சீர்திருத்தக்கிறிஸ்தவம் டச்சுக்காரர்களால் வெகுவாக பரப்பப்பட்டது. அது அந்த சமூக மக்களுக்கு பெரும் முன்னேற்றமாகவும் அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. சீர்திருத்தக் கிறிஸ்தவர்களாக வந்த டச்சுக்காரர்கள் 1658-ல் தூத்துக்குடியை போர்த்துக்கீசியர்களிடமிருந்து கைப்பாற்றினார்கள். 1532 தொடங்கி 1658-வரையிலான 126 ஆண்டுகளில் வங்கக்கடலோரத்தில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும்,  அரபிக்கடலோரத்தில் கன்னியாகுமரி தொடங்கி மலபார் கடற்கரை வரையிலும் நெடு நீளத்திற்கு ரோமன் கத்தோலிக்கம் போர்த்துக்கீசியரால் பரப்பப்பட்டது. இந்த ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு படையெடுப்புகளாலும் ஆக்ரமிப்புகளாலும் பரவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் பரவர்கள் எதிர்த்து போராட முயன்று தோற்றுப் போனார்கள். சவேரியார் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பெரும்பாலும் அது தோல்வியில் முடிந்த போராட்டமாகவே நடந்து வந்தது.

புனித பிரான்சிஸ் சேவியர்.
...................................................................

பரவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடந்தாலும் அதன் பின்னர் போர்த்துக்கீசியர்களின் வருகையும் அதையொட்டி இயேசு சபையினரின் வருகையும்தான் பரவர்கள் பற்றிய அதிகளவான பதிவுகளைக் கொண்டிருந்தது. புன்னைக்காயலில் தங்களின் முதல் இல்லத்தை இயேசுசபையினர் அமைத்த போது அது வடுகப்படைகளின் தாக்குதலுக்குள்ளானது. பின்னர் 1658- ல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றிய போதும் இயேசு சபையினரின் ஆவணங்களை முழுமையாக அவர்கள் அழித்தனர். இப்போது எஞ்சியிருப்பதெல்லாம் வணிகத்திற்கு வந்து சென்ற பயணிகளின் குறிப்புகளும், இயேசு சபையினர் எழுதிய கடிதங்களும், பிரான்சிஸ் சவேரியார் எழுதிய கடிதங்களும், போர்ச்சுக்கல் லிஸ்பன் வரலாற்று ஆவணக்காப்பகத்திலும், ரோமில் உள்ள இயேசு சபை பழஞ்சுவடி நிலையத்திலும் உள்ள ஆவணங்களும், கடலோர கிராமங்கள் தோறும் வெளியிடும் தேவாலய ஆண்டு விழா மலரில் உள்ள தகவல்கள் மட்டுமே போர்த்துக்கீசியருக்குப் பின்னரான வரலாற்றை புரிந்து கொள்ள உதவுகிறது. வடுகர்களால் பரவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரிகிறது ஆனால் அது தொடர்பான ஆண்டுகளோ விபரங்களோ எதுவும் இல்லை. இந்த நிலையில் இயேசு சபைக்கடிதங்களும், புனித சவேரியாரின் கடிதங்களுமே பரவர்களின் வாழ்நிலையை துயரமான அந்த ஓட்டத்தைப் புரிந்து கொள்ள நம்மிடம் இருக்கிறது.

போர்த்துக்கீசியருக்கு வர்த்தக நோக்கம்தான் முதன்மையாக இருந்தது. தங்களின் வணிக நோக்கத்திற்கு தடையாக இருந்த மூர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி முத்துக்குளித்தலையும் பரவர்களையும் கைப்பற்றுவதே போர்த்துக்கீசியரின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதற்கு மூர்களோடு மோதிக் கொண்டிருந்த பரவர்க
ளை பயன்படுத்திக் கொண்டார்கள். பரவர்கள் மதம் மாறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே கிபி 1523-1525 -ல் மேனுவல் டி ஃ ப்ரைஸ் தலைமையில் பயணப்பட்ட போர்த்துக்கீசிய குழுவினர் ( தமிழக கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு பக்கம்-88)  கொற்கையை அடைந்தனர். ஆனால் அதற்கு முன்னரே போர்த்துக்கல் மன்னரின் முத்து தரகு வணிகராக ஜோஹோ ஃப்ராள்ஸ் நியமிக்கப்படிருந்தார். 1524 -ஆம் ஆண்டு மூர்களைத் துரத்திவிட்டு போர்த்துக்கீசியர் முத்துக்குளித்தலை கைப்பற்றிக் கொண்டனர். மூர்களிடமிருந்து தங்களை காப்பாறியமைக்காக ரோமன் கத்தோலிக்கத்திற்கு மாறியது அப்போதிருந்தே தொடர்ந்திருக்கிறது. முத்துக்குளித்துறை பரவர்கள் ஆண்டொன்றுக்கு 1,500 குரூஸோடா (cruzados) வை முத்துக்குளிப்பதற்கான வாடகையாக வசூலித்தனர்.  இவ்வாறு பரவர்கள் மூர்களின் கொடுமையிலிருந்து மீண்டாலும் தங்களையறியாமல் இன்னொரு அடிமைத்தனத்திற்கு தங்களை விற்றுக் கொண்டனர்.

பரவர்களிடம் முத்துக்குளிக்கும் உரிமை ஒப்படைக்கப்பட்டதே தவிற அந்த வணிகத்தின் முழு பலனையும் அனுபவித்தவர்கள் போர்த்துக்கீசியர்களே. பரவர்களின் உள்ளூர் நிர்வாக அமைப்புகள், நீதி முறைகள் அனைத்தும் போர்த்துக்கீசியரால் கைப்பற்றப்பட்டது. அவர்களின் தனியுரிமைகள் அனைத்தும் போர்த்துக்கீசியரின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. தொழிலை பாதுகாக்கவும் பர்வர்களை தங்களின் குடிமக்களாக நிலை நிறுத்தவும் போர்த்துக்கீசியர் மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினர். 1532-1537- க்குள் ஏழு கடற்துறையிலுமாக சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பரவர்கள் ரோமன்கத்தோலிக்கத்தை தழுவினாலும் அது அவர்களுக்கு மன நிறைவான ஒன்றாக இல்லை. அவர்கள் தங்களின்  பழைய தேவதைகளையும் கிராம தெய்வங்களையும் தேடுவதிலும்தான் விருப்பம் கொண்டிருந்தனர். மனந்திருந்திய மீனவ கிறீஸ்தவர்களை உறுதிப்படுத்தவும், திருமுழுக்கு பெறாத கிறிஸ்தவர்களை மீனவர்களை ரோமன் கத்தோலிக்கத்தின் பால் ஈர்க்கவும் 1542-ல் பிரான்சிஸ் சவேரியார் இப்பகுதிக்கு வராமல் போயிருந்தால் பரவர்கள் தங்களின் பழைய வழிபாட்டு மரபுகளையே தொடர்ந்திருப்பார்கள். கீழைக்கடலோரத்திலும், மேற்குக் கடலோரத்திலும் பெரும்பலான மீனவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவ பிரான்சிஸ் சவேரியாரின் வருகையே காரணம். ஏனென்றால் முத்துக்குளித்துறையில் மதம் மாறிய பரவர்களுக்கு முறையான வழிபாடோ இல்லாமல் இருக்க அவர்கள் தங்களின் பழைய சிறு தெய்வ சிலை வழிபாட்டை மேற்கொள்ள போர்ச்சுக்கல் மன்னர் 3-ஆம் ஜாணுக்கு இவர்களை கிறிஸ்தவர்களாக உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதனால் பதுரவாதோ என்றழைக்கப்படும் ஞான அதிகாரச் சலுகையை பயன்படுத்தி பிரான்சிஸ் சவேரியாரை முத்துக்குளித்துறைக்கு அனுப்பினார் போர்ச்சுக்கல் மன்னர்.

தொடரும்..........

1 comment: