Thursday, 10 May 2012

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத மந்திரி என்று யரையாவது சொல்லமுடியுமா?


லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு
 

கேள்வி: தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத மந்திரி என்று யரையாவது சொல்லமுடியுமா?


பதில்: காமராசர் ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்த லூர்தம்மாள் சைமன் தான் லஞ்சம் வாங்காத மந்திரி. -துக்ளக் “சோ”


“உண்மையைச் சொல்லவேண்டுமானால் லூர்தம்மாள் சைமன் யாரென்று எனக்குத் தெரியாது. அவர்களுக்கு நூற்றாண்டு விழா வருகிறது என்றும் எனக்குத் தெரியாது” -பிரின்ஸ்(குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்)


1957 முதல் 1962 வரை ஸ்தாபனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் அவர்கள். 1957.ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக குளச்சல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் லூர்தம்மாள் சைமன். அந்த தேர்தலில் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்வானவர் நேசமணி. 'பெருந்தலைவர்' காமராசர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.

காமராசர் ஒன்பதுபேர் கொண்ட மந்திரிசபையை அமைத்தார். சமூகத்தில் பின்தங்கிய, விழிம்பு நிலையில் வாழுகின்ற மக்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள், ஆகியோருக்கு மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்ற பெருந்தன்மையில் அவை எல்லாம் பொருந்தி வரக்கூடிய வகையில் லூர்தம்மாள் சைமனுக்கு மந்திரிசபையில் இடமளித்தார். அவரே தமிழகத்தின் முதல் பெண் அமைச்சரும் ஆனார். காமராசரின் அந்த முடிவுக்கு அப்போது நேசமணியும் ஒப்புதல் அளித்தார். ஆனால் அன்றைய நாடார் சமூகத்தவர்கள், “நேசமணிக்கு மந்திரி பதவி கொடுக்காமல் ஒரு மீனவருக்கு (லூர்தம்மாளுக்கு) மந்திரி பதவி கொடுத்தவர்தானே” என்று காமராசரை விமர்சனம் செய்தனர்.

மீனவ சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வந்த லூர்தம்மாள் சைமன் அளப்பரிய பல செயல்களைச் செய்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அவர் மந்திரியாக பொறுப்புவகித்த ஐந்து ஆண்டுகளும் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் செய்த சாதனைகள் திட்டங்கள் ஏராளம்.

அப்போது தமிழ்நாட்டு மக்கள் பலரும் மருத்துவ வசதியின்றி பெரும் அவதிக்கு ஆளாகினர். மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் கைகளில் இருந்தது. சிறிய வியாதிக்கு மருத்துவ உதவி பெறவேண்டுமானாலும் மக்கள் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஆங்கில மருத்துவம் இருந்த பக்கமே போகாமல் கைமருந்தும், பாட்டி வைத்தியமும், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ உதவியும் பெற்று வந்தனர். ஆங்கில மருத்துவமும், உயிர்காக்கும் உயர் மருத்துவமும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் சென்றுசேர வேண்டுமென்று முடிவு செய்து, பல்வேறு இடங்களில் அரசு பொதுமருத்துவமனைகளை நிறுவினார். குமரிமாவட்டத்தில் கோட்டாறு பகுதியில் அரசு பொதுமருத்துவமனை ஒன்றை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது மாவட்டத்தின் ஒட்டுமொத்த மருத்துவ சேவைக்கும் மொத்த குத்தகைதாரர்கள் என்று தங்களை நினைத்துக்கொண்டிருந்த தனியார் மருத்துமனை முதலாளிகளும் (மருத்துவர்கள்), அவர்களைச் சார்ந்தவர்களும் தங்கள் அரசியல் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அதைத்தடுக்கப் பார்த்தனர்.

ஆனால் “ஏழை மக்கள் மருத்துவ உதவியின்றி கஷ்டப்படுகிறார்கள். பெரும் பணக்காரர்களின் நலனுக்காக இந்த அடிப்படை மக்களுக்கான திட்டத்தைக் கைவிடமாட்டேன்” என்று உறுதியாக நின்றார் லூர்தம்மாள். “அரசு பொதுமருத்துவமனை திட்டத்தை கைவிட்டால் உங்களையே அடுத்த முறையும் எம்.எல்.ஏ ஆக்கி மந்திரியாக்குகிறோம்” என்று லூர்தம்மாளிடம்  நேரடியாக கோரிக்கை வைத்தனர். அதற்கும் அவர் செவி மடுக்காததால் மிரட்டிப் பார்த்தனர். ஒரு கட்டத்தில் லூர்தம்மாளின் கணவர் சைமன் மூலமாகப் பேசி இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.சைமன், லூர்தம்மாளிடம் “1962 தேர்தல் வரையாவது இந்தத் திட்டத்தை கிடப்பில் போடு, தேர்தல் முடிந்து மந்திரியான பிறகு பார்த்துக் கொள்ளலாம், இல்லையேல் அவர்கள் உன்னை தோற்கடித்து விடுவார்கள்” என்று சொன்னார். ஆனால், லூர்தம்மாள் “மக்களின் நலன் காக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன். தேர்தலில் எனது வெற்றியை பெருந்தலைவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறி விடாப்பிடியாக எந்த மிரட்டலுக்கும் பணியாமல், கோட்டாறு அரசு பொது மருத்துவமனையைக் கொண்டுவந்தார். ஆசாரிப்பள்ளத்தில் இயங்கிய காசநோய் மருத்துவமனையில் இலவச மருந்து, ஆய்வகம் மற்றும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினார். ஆய்வகம், அறுவை சிகிச்சை, உயிர்காக்கும் உயர் சிகிச்சை என்று வெளிநாடுகளிலிருந்து மருத்துவ வசதிகளையும் தமிழக மக்களின் நலனுக்காக கொண்டுவந்தார்.

அதன் விளைவுதான் 1962 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருமதி. லூர்தம்மாள் சைமனை பெருந்தலைவர் காமராசர் அறிவிக்க அதே கட்சியைச் சேர்ந்த திரு.சுவாமிதாஸ் நாடாரை சுயேட்சையாக களமிறக்கி, பெரும் தனவந்தர்களும் மருத்துவமனை முதலாளிகளும் சாதி, மத வெறிகளையும் தூண்டிவிட்டு லூர்தம்மாள் சைமனை தோற்கடித்தார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக தன் ஆட்சியை திரு.வி.பி.சிங் இழந்தது போன்று ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன் பதவியை இழந்தவர் லூர்தம்மாள் சைமன். இந்த பிரச்சினையில் தன்னுடையை பேச்சைக் கேட்கவில்லையென்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, லூர்தம்மாளை விட்டு அவர் கணவர் சைமன் பிரிந்து சென்றதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

அன்று அரசு பொது மருத்துவமனையை குமரிமாவட்டத்தில் வர விடாமல் தடுத்த அதே மருத்துவ ஜாம்பவான்கள் தான் அந்த மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரியாக மாறுவதற்கான முயற்சியிலும் தடைகளை ஏற்படுத்தினார்கள். இப்போதும், அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளும், ஆய்வக வசதிகளும், ஆராய்ச்சி மையங்களும் வரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குமரிமாவட்ட அரசு மருத்துக்கல்லூரிக்கு அடித்தளமிட்டவர் 'லூர்தம்மாள் சைமன்'தான் என்று பெருமைபட கூறமுடியும். இந்த சாதனைகளில் லூர்தம்மாள் சைமனின் பெயரை மறந்து கூட யாரும் பயன்படுத்துவதில்லை.

பாரிம்பரிய மீனவ குடும்பத்தில் பிறந்த லூர்தம்மாள் அவர்கள், மீனவர் மேம்பாட்டிலும் அக்கறை காட்டினார். பொருளாதாரத்தில் கடைநிலையில் இருந்த மீனவர்களிக்கு வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற, அவரின் மந்திரி பதவி மிகப்பெரும் உதவி செய்தது. அந்த காலத்தில் மீனவர்களின் கட்டுமரங்களின் வலை மற்றும் மடிகளில் அதிகப்படியான மீன் கிடைக்கும். ஆனால் விலை கிடைக்காததால், எவ்வளவு மீன் கிடைத்தாலும் அது அன்றன்றைக்கான தேவைகளை பூர்த்தி செய்வதாக மட்டுமே இருந்தது. மீன் விலை மலிவாகும் போது மீனெல்லாம் வீணாகப் போவதும் உண்டு. லூர்தம்மாள் மந்திரியானதும் கடலோரத்தைத் ஒட்டியுள்ள உள்நாட்டுப் பகுதிகளில் மீன் விற்பனை செய்யும் சந்தைப் பகுதிகளை உருவாக்கினார்கள். இன்று மிகப் பிரபலமாக இருக்கும் சந்தைகள் அனைத்தும் மீன் விற்பனையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டவைதான். தமிழகத்தின் பல பகுதி மக்களின் விளைபொருட்களையும் சந்தைப்படுத்தும் சந்தைமுறையை உருவாக்கியது மீனவர்கள்தான் என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சந்தைகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து நவீனப்படுத்தி சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு, போன்ற பல்வேறு காரியங்களை செய்தார்.

மீனவர்களின் தொழில் வளத்தை மேம்படுத்த, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க, ஏற்றுமதி ஏற்ற தரமான மீன்களைப் பிடிக்க இயந்திர மயமாக்கப்பட்ட துயரமான ஓன்றுபடகுகளை அறிமுகப்படுத்தினார். இந்தோ - நார்வே தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பஞ்சு நூல்களுக்குப் பதில் பட்டுநூல், கங்கூஸ், நவீன தூண்டில்கள், டிஸ்கோ வலை, என்று அவர் கொண்டு வந்த பயன்கள் ஏராளம். ஏழை எளிய மீனவர்களுக்கு கூட்டுறவுசங்கங்கள் உருவாக்கி, நான்குபேர், ஜந்துபேருக்கு ஒரு விசைப்படகு என்று மானிய விலையில் வழங்கினார். விசைப்படகுகளை அறிமுகப்படுத்தி நவீன முறையில் மீன்பிடி முறைகளைக் கொண்டுவந்த்தால் பாரம்பரிய கட்டுமரம் மற்றும் கரமடி தொழில் பாதிகப்படும் என்று அவர் சார்ந்த மீனவர் இனமே பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. விசைப்படகு வைத்திருப்பவர்கள் வீடுகளும், விசைப்படகுக்கு ஆதரவான கிராமங்களும் பாரம்பரிய மீன் பிடி தொழில் செய்பவர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. . லூர்தம்மாள் சைமன் மீதான பாரம்பரிய மீனவர்களின் வெறுப்பாகவும் இது மாறியது. இவை எதையும் பொருட்படுத்தாமல் அந்த திட்டங்களை அவர் நிறைவேற்றியதால், மீனவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு ஏற்பட்டது. அவர் செய்த தொழில் புரட்சி மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியதோடு, இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டி தந்து, வெளிநாடுகளில் மீன் உணவு ஏற்றமதி மூலம் மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்கச்செய்தார். கடலில் இறக்கும் மினவர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களையும் லூர்தம்மாள் சைமன் நிறைவேற்றித் தந்தார். இன்று மீனவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் பலவற்றிற்கு அஸ்திவாரம் அமைத்தவர் லூர்தம்மாள் சைமன் அவர்கள்.

வறுமையில் வாடும் மக்களுக்கும், வேலை வாய்ப்பற்ற கிராமத்து மக்களுக்கும் அவர்கள் பசியைப்போக்க பல திட்டங்களை கொண்டுவந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அடுப்பு எரிப்பதற்காக காட்டுமரங்களை வெட்டி இயற்கையை அழிப்பதைத் தடுக்கவும், அடுப்பு எரிக்க மாற்று விறகை உருவாக்கவும், வருமானமில்லாத கிராமப்புற மக்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தவும், ஒடை மரங்களை (முள்ளுமரம்) வளர்க்க உத்தரவிட்டார். அதனால் ஒடை மரங்களுக்கான விதைகளை ஹெலிகாப்டர்மூலம் தூவி நாடு முழுவதும் பச்சைப் பசேலென்று மரங்கள் வளர்ந்தன. அது நாட்டைப் பசுமையாக காட்டியதோடு ஏழை எளிய மக்களின் வறுமை நிலையையும் ஓரளவு நீக்கியது. காலப்போக்கில் அந்த முள் மரங்களே அழிக்க முடியாத பெரும் இடைஞ்சலாக வளர்ந்து நிற்பது வேறுகதை. ஆனால் அந்த மரம் வளர்ப்பதில் காமராசரின் நோக்கம் கபடமில்லாதது.

அப்போது லூர்தம்மாள் சைமன், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் மீன்பிடித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த உள்நாட்டு மீனவர்களின் பொருளாதார நிலையில் முன்னேற, வெளிநாடுகளிலிருந்து சிலோப்பியா மீன் இனங்களை கொண்டுவந்து ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் விட்டு வளர்த்தார். சிலோப்பியா மீனைப் பொறுத்தவரை மிக வேகமாக வளரக்கூடியது. அதனால் உள்நாட்டு மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைத்தது. சிலோப்பியா மீன்களை ஏரி, குளங்களில் வளர்த்ததோடு, அதை பராமரித்து வளர்த்து மீன்பிடிக்கும் உரிமையும் உள்நாட்டு மீனவர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்கப்பட்டது. தற்போது உள்நாட்டு நீர் நிலைகளில் மீன்பிடிககும் உரிமையை உள்நாட்டு மீனவர்கள் இழந்து வருகிறார்கள் என்பது துயரமான ஓன்று.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பள்ளிகள் லூர்தம்மாள் சைமனின் முயற்சியால் நிறுவப்பட்டவை. பள்ளிகளுக்கு அரசு அனுமதி, ஊதியமில்லா ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம், பள்ளிக் கட்டிடங்கள், குடிநீர், கழிவறை வசதிகளைப் பெற்று தந்த லூர்தம்மாள் சைமனின் பெயரைச் சொல்லி இன்றும் உயர்ந்து நிற்கின்றன பல பள்ளிகள்.

படித்த பலருக்கு வேலைவாய்ப்பு, இல்லையென்று வருபவர்களுக்கு நிதி உதவி, தொழில் தொடங்க வங்கிக்கடன் உதவி, மருத்துவ வசதி கிடைக்காத வறியவர்களுக்கு உயர் சிகிச்சை உதவி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று லூர்தம்மாள் சைமன் அவர்களால் பயன் பெற்றோர் பலபேர் சாட்சியம் சொல்கிறார்கள்.
கன்னியாகுமரி கடலில் இருக்கும் பாறை பாரம்பரிய மீனவர்களின், மீன்பிடி உரிமை பகுதியாக இருந்தது. பாறையில் ஒரு சிலுவையை நிறுவி அங்கே வழிபாடுகள் நடத்தியதும், தங்கள் குடும்பங்களுடன் விழா கொண்டாடியதும், கடலில் மீன்பிடிததுத் திரும்பும் போது களைப்பைப் போக்க ஓய்வெடுப்பதும், அதிகமான மீனைக் கொண்டுவந்தால் அதை அந்த பாறையில் போட்டு உலர்த்துவதும், வலைகள் போன்ற தொழில் யாத்தினங்களை காயவைப்பதும் என்று தங்கள் வாழ்வாதார இடமாக அந்தப் பாறையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சங் பரிவார் அமைப்புகள் கன்னியாகுமரி கடலில் இருந்த பாறையை அபகரிக்க சதி செய்தது. அதனால் அங்கே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார் என்று கூறி மீனவர்களின் பூர்வீகப் பாறையை அவர்களிடமிருந்து பறித்து விவேகானந்தருக்கு மண்டபம் அமைக்க அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். லூர்தம்மாள் சைமன் மந்திரியாக இருந்த ஜந்து ஆண்டுகளும், அதன்பின் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி செய்த காலம் முழுக்கவும் சங் பரிவார்-ன் சதி வேலைகளை தடுத்து நிறுத்தினார். அந்தப் பாறை மீனவர்களின் வாழ்வாதார இடம் அதில் சங்பரிவார் அமைப்புகளுக்கு இடமளித்தால் மக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என்று காமராசருக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார். அவர் கூற்றின் உண்மையை புரிந்துகொண்டு காமராசர் தன் ஆட்சிகாலம் வரை பிரிவினைவாதிகளின் சதியை தடுத்து நிறுத்தினார்.

காமராசருக்குப் பின்வந்த ஆட்சியாளர்களிடம் மீனவர் தரப்பிலான நியாயங்களைக்கூறி புரிய வைக்க யாரும் இல்லாத்தால் சங்பரிவார்.-ன் திட்டமிட்ட செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி, மீனவ நண்பனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், அந்த பாறையில் மீனவர்களுக்கான உரிமை முற்றிலுமாகப் பிடுங்கப்பட்டு, விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டு அது விவேகானந்தா கேந்திரத்தின் பராமரிப்பில் விடப்பட்டது. மண்டைக்காடு கலவரத்தின்போது கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.-காரர்களுக்கு போர்ப்பயிற்சியும் ஆயுதப்பயிற்சியும் நடைபெற்றதாகவும், கேந்திரத்தில் மதத் தீவிரவாதிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப் படுவதாகவும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

1962 தேர்தலில் சதியாலும் துரோகத்தாலும் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டாலும் மக்கள் பணியிலிருந்து லூர்தம்மாள் ஒதுங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றினார். எனக்குத் தெரிந்து என் முதல் நினைவே எழுபதுகளின் துவக்கத்தில் லூர்தம்மாள் சைமன் தலைமையிலான மீனவர்களின் பேரணியும், பொதுக்கூட்டமும்தான் கடலோர மக்கள் சங்கம் நடத்திய பேரணியில்

“சி.பி.ஓ.சிந்தாபாத்
கடலோர மக்கள் சிந்தாபாத்
ஓட்டுப் போட நாங்கள் வேண்டும்
சாதனை ஒன்றும் எங்களுக்கில்லை”
என்ற முழக்கமும், அந்தப் பேரணியில் தலைமை ஏற்றுவந்த லூர்தம்மாள் சைமனின் உருவமும் தான் என் நினைவடுக்குகளில் முதல் இடத்தில் உள்ளது.

மண்டைக்காடு கலவர காலங்களில் தன் முதிர்ந்த வயதிலும் கடற்கரை மணலில், பொழியும் பனியில் ஒரு போர்வையை மூடிக்கொண்டு கலவரப் பகுதியில் நேரடியாகச் சென்று அமைதி முயற்சியில் ஈடுபட்டது மறக்க முடியாதது. கலவரம் செய்ய, மீனவர் கிராமங்களுக்குள் அத்துமீறி புகுந்து, மீனவர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பலருக்காக, மனிதநேயம் பேசி அயலானுக்கு அன்பு செய்யச் சொன்ன இயேசுவின் போதனைகளை எடுத்துக்கூறி மீனவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தவர் லூர்தம்மாள் சைமன். இரவு பகல் பாராது மக்களுடன் இருந்து அமைதி முயற்சியில் ஈடுபட்டார்.

1912 செப்டம்பர் 26-ல் மணக்குடி கிராமத்தில் பிறந்த லூர்தம்மாள் சைமனுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. காமராசர் ஆட்சிகாலத்திலிருந்த தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட காங்கிரசும், தி.மு.க, அ.தி.மு.க அரசுகளும் போட்டி போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் மீனவ சமூகத்தில் பிறந்தவர் என்ற காரணத்தால் லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசுகளும், காங்கிரசும் மறுக்கின்றன. கடந்த தி.மு.க ஆட்சியின் போது அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட கோரி்க்கை வைத்தபோது, 'அவர் காங்கிராஸ் கட்சிக்காரர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இந்த கோரிக்கையை வைக்கச் சொல்லுங்கள்' என்றார்.

காமராஜருக்கும், கக்கன்ஜிக்கும், சி.சுப்ரமணியத் திற்கும் நூற்றாண்டு விழா கொண்டாடினார்களே! அவர்களும் காங்கிரஸ்காரர்கள் தானே! தற்போதைய அரசு, லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் நேசமணி, காங்கிரஸ் குஞ்சன்நாடார், சிதம்பரநாதன் போன்றோருக்கெல்லாம் மணிமண்டபமும், கௌரவமும் வழங்கும்போது லூர்தம்மாள் சைமனை மட்டும் புறக்கணிப்பது எதனால்? அவர் மீனவர் என்பதாலன்றி வேறென்ன இருக்கமுடியும்?

சரி தங்கள் தலைவருக்கு விழா எடுக்கவேண்டுமென்று கேடுகெட்ட காங்கிரசுக்காவது அக்கறை இருக்கிறதா? மாவட்ட காங்கிரசுக்காவது அக்கறை இருக்கிறதா? மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் லூர்தம்மாள் சைமனைப் பற்றி தெரியாது என்கிறார். இவர் என்ன அரசியலைப் படித்தாரோ? ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைக் கேட்டால், அவர் அப்போதைய தலைவர் தங்கபாலுவைக் குற்றம் சாட்டுகிறார், தலைவர் என்ன செய்கிறாரோ தெரியவில்லை. மக்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினால் நான் வந்து பேசுகிறேன் என்கிறார். மக்கள் மேடை அமைத்துக் கொடுத்தால் இவர்கள் பெயர் வாங்கிக் கொண்டு போவார்களாம்.

ஆனால் மீனவ மக்கள் தங்கள் தலைவியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கும் கோரி்க்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*தமிழக அரசு லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
*அவர் பிறந்த மணக்குடியில் கட்டப்பட்டு வரும் இணைப்புப்பாலத்திற்கு 'லூர்தம்மாள் சைமன்' பெயர் சூட்ட வேண்டும்.
*கன்னியாகுமரி அல்லது அவர் போட்டியிட்டு வென்ற குளச்சல் தொகுதியில் ஒரு மணிமண்டபம் அமைக்கவேண்டும்.
*குளச்சல், காந்தி சந்திப்பில் லூர்தம்மாள் சைமன் முழு உருவச் சிலை அமைக்கவேண்டும்.
*தேங்காப்பட்டணம் மீன்பிடித்த துறைமுகத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டவேண்டும்.

மீனவ மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அப்பழுக்கற்ற தலைமையைப் போற்றவேண்டும். kurumpanai c berlin.

No comments:

Post a Comment