Friday 4 May 2012

இந்தியாவின் முதல் கிறிஸ்தவம் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-4]



கிறிஸ்தவம் தழுவிய மீனவ மக்கள்.

சோழர்களை பிற்காலப் பாண்டியர்கள் வென்றதும் பாண்டியர்கள் அராபியர்களுடன் குதிரை வர்த்தகத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.  அராபியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சுமூக உறவு ஏற்படுகிறது. பாண்டியர்கள் முத்துக்களைக் கொடுத்து அராபியக் குதிரைகளை தங்களின் படை, பயணத் தேவைகளுக்காக தருவித்திக் கொண்டனர். பாண்டியர்களின் ஆட்சியில் அராபியர்கள் செல்வாக்கோடு அரசுப் பதவிகளை அனுபவித்தனர். அராபிய வணிகர்களோடு பாண்டியர்களின் நெருக்கமும் அதனால் உருவான செல்வாக்கின் காரணமாகவும் அராபியர்கள் பாண்டிய மன்னனுக்கு திறை செலுத்து விட்டு முத்துக்குளிக்கும் உரிமையை கைப்பற்றினார்கள். கொற்கை வண்டல் படிந்து நிலமான பின்னர் புதிய துறைமுகமாக உருவான பழைய காயல்துறைமுகத்தை தேர்ந்தெடுத்த அராபிய மூர்கள் ஆட்சி செய்தனர். ஏற்கனவே மலபார் கரையில் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததோடு காயலையும் கைப்பற்றியதால் கீழைக்கரையோரத்திலும் மேற்குக் கரையோரத்திலும் அராபியர்கள் செல்வாக்குப் பெற்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமையுடன் இருந்த பாண்டியர்கள் இலங்கையை வென்று முத்துக்குளித்தல் உரிமையையும் கைப்பற்றி முழு வலிமை பெற்றனர். பதினான்காம் நூற்றாண்டில் வடக்கிலிருந்து நடந்த முஸ்லீம் படையெடுப்பால் பாண்டியர்களின் செல்வாக்குச் சரிந்தது. இதுவும் பரதவர்கள் மீது மூர்கள் செல்வாக்குச் செலுத்த ஒரு காரணமாக அமைத்தது.

இதுவரை பாண்டியர்கள், சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக விளங்கிய கடலோரத்தில் அராபியர்கள் முழு உரிமையும் கொள்ளத் துவங்கினார்கள். ஏனைய எல்லா ஆட்சியாளர்களையும் விட அராபியர்கள் மலபாருக்கு (கேரளக்கரை) க்கு வந்து குடியேறிய பின்னர் அங்கு வாழ்ந்த மக்களோடு கலந்து திருமண உறவுகளை மேற்கொண்டதன் விளைவாய் பல குழுக்கள் தோன்றினார்கள். மிளகு வணிகத்தில் கொடி கட்டிப்பறந்த கொச்சி, மலபார் பகுதிக்கு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் வந்த அராபியர்கள் அடித்தட்டு மக்களோடு மண உறவு கொண்டதன் விளைவாய் மலபாரில் மாப்பிளாக்கள் உருவானார்கள். கடலோரச் சமூகங்களோடு அராபியர்கள் கொண்ட மண உறவாலும் மத மாற்றத்தாலும் மாப்பிள்ளாக்கள் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாப்பிளாக்கள் அடித்தட்டு சமூகமாக இருந்து இன்று கலாச்சாரத்தில் மிகச் சிறந்த இனமாக கேரளாவில் உள்ளனர். மரபு வழிபட்ட அவர்களின் இசையறிவு வியக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்திய சமஸ்தானங்களின் மன்னர்கள் அந்தந்த பகுதிகளில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடினாலும் அதை சுதந்திரப் போராட்டமாக வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் அதே நேரம் மாப்பிளாக்களின் கிளர்ச்சி சுமார் ஐம்பதாண்டுகாலம் வீரம் செறிந்த விவசாயிகளின் கலகமாக கேரளத்தில் நடந்ததெல்லாம் தென்னிந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகள்.

அராபியர்கள் பரவர்கள்,முக்குவர்களுடன் திருமண உறவிலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டதன் விளைவாய் தமிழகத்தில் லெப்பைகள், மரக்காயர்கள் தோன்றினார்கள். இது போல இந்தியா முழுக்க ஷேக்குகள், சியாட் முஸ்லீம்கள், தைரா முஸ்லீம்கள், பட்டானிய முஸ்லீம்கள் என பல இஸ்லாமியச் சமூகங்கள் தோற்றம் பெற்றன. தெற்கில் உருவான இஸ்லாமிய சமூகங்களின் தோற்றம் பெருமளவு கடற்கரை மக்களோடு கொண்ட உறவால் உருவானதாகவும் தெரிகிறது. பரவர்களில் முஸ்லீம் மதத்திற்கு மாறியவர்கள் மரக்காயர்கள் ஆனார்கள். முக்குவர்களோடு கொண்ட உறவில் லெப்பைகள் தோன்றினார்கள். இப்போதும் தமிழக கடலோரங்களில் இராமேஸ்வரம் தொடங்கி கேரளக் கரையோரமான நீரோடி வரை இஸ்லாமிய மக்கள் கடல் சார் வணிகத்திலும் ஈடுபடுகிறார்கள்.

புதிய சமூகங்களின் தோற்றம் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. முத்துக்குளித்து அதை அப்போது நிலவிய சமூக வர்த்தக நிலைக்கு ஏற்ப கொடுத்து வந்த பரதவர்களோடு அராபிய மூர்களின் வழித்தோன்றல்களாக மாறி விட்ட தங்களின் பழைய சகாக்கள் முத்துக்குளிக்க கடலில் மூழ்குவதை பரவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. காயல்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட அராபிய மூர்கள் நேரடியாக பரவர்களின் உற்பத்தியில் கைவைத்தனர். அவர்களை மதம் மாறக் கேட்டு அதற்கு போதுமான ஆதரவு இல்லாமல் போனபோது அவர்கள் தங்களின் உறவினர்களாக உருவாகியிருக்கும் மக்களை முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தினார்கள்.விளைவு பரவர்கள் முதன் முதலாக தங்களின் உரிமை பறிபோனதாக நினைத்தனர். பிற்காலப் பாண்டியர்களிடம் பரவர்கள் உதவி கேட்ட போது அவர்களோ அராபிய  மூர்களிடம் கிடைக்கும் லாபங்களைக் கருத்தில் கொண்டு பரவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். தவிரவும் பரவர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதிலும், பாண்டியர்களுக்கு உள்ளூர் பரவர்களால் தொடர் தொல்லைகள் இருந்த நிலையில் பாண்டியர்கள் பரவர்களைக் கைவிட்டனர். மூர்களால் கிடைக்கும் ஆதாயத்தை கணக்கிட்டு அவர்கள் அந்த முடிவை எடுத்தனர்.

போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அராபியர்கள் காயல் துறைமுகத்திற்கு வந்தனர். மலபாரில் தொடங்கி கீழைக்கடல் வரை செல்வாக்குச் செலுத்திய மூர்களை பரவர்கள் எதிர்த்தாக வேண்டிய தேவை எழுந்தது. தாங்கள் முத்தெடுத்து சந்தை மூலம் விற்பனை செய்த காலம் மாறி நேரடியாக உற்பத்தியிலேயே மூர்கள் கைவைத்தமை பரவர்களுக்குள் கடும் கொந்தளிப்பை உருவாக்க ஒரு தாக்குதலுக்கான சூழலை அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் ஒரு பரவனுக்கும் மூருக்கும் வந்த தகராறில் பல நூறு மூர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் படகுகள் சேதப்பட்டுத்தப்பட்டதான தகவல்கள் இயேசுசபை ஆவணங்களில் உள்ளது.

மேற்குக் கரை திருவிதாங்கூர் மன்னரின் அதிகாரத்தின் கீழும், வடக்குப்பகுதியின் பெரும்பகுதியை மதுரை நாயக்க மன்னர்களும் ஆட்சி செய்ய 1516 - ஆம் ஆண்டில் பழைய காயல் உள்ளிட்ட பெரும்பலான கடலோரத்தை இராமேஸ்வரம் தொடங்கி கேரளக்கரை வரை அராபிய மூர்கள் ஆட்சி செய்தனர்.

சிறு தெய்வங்களையும், இயற்கையையும் வழிபட்டு வந்த மீனவர்களைக் காப்பாற்ற குலசேகரப்பாண்டியனோ, உன்னி கேரள வர்மனோ, மார்த்தாண்ட வர்மாவோ, வெட்டும் பெருமாளோ என பரவர்கள் பலரிடமும் உதவி கேட்க, அன்று அவர்களுக்கு உதவ யாரும் தயாராக இருக்கவில்லை, இத்தகைய மோதல் உருவாகாமல் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பை வழங்கவும் இல்லை. கடைசியில் அவர்களும் வலுவிழந்து ஆட்சியைப் பறிகொடுத்தனர். யாவராலும் கைவிடப்பட்ட நிலையில் மூர்களைத் தாக்கியளித்ததற்கு பதலடியாக, கோழிக்கோட்டில் இருந்து படை திரட்டி வந்து மூர்கள் தங்களைத் தாக்குவார்கள் என்று அஞ்சினார்கள் பரவர்கள். முத்துக்குளித்துறையில் மூர்களுக்கும் பரவர்களுக்குமான மோதல் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இந்த நாட்களில் தொடர்ந்து பரவர்கள் மூர்களை தாக்கியதாகவும் மீனவர்களின் குடியிருப்புகளை மூர்கள் தீக்கிரையாக்கி பலரைக் கொன்றதாகவும் தகவல் குறிப்புகள் உள்ளன. தங்களையும் தங்களின் முத்துக்குளித்தல் தொழில் உரிமையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பரவர்கள் எடுத்த முடிவுதான் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியமை.

வாஸ்கோடகாமா சிலுவைகளோடு வந்த எஜமானன்.

பொதுவாக இந்தியாவில் மதமாற்றம் என்பது சாதீயக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வாழ்க்கை விடிவுக்காகவும் தங்களின் ஆன்மீகச் சுதந்திரத்திற்காகவும், சமத்துவ வாழ்விற்காகவுமே மதம் மாறுகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத மாற்றத்தின் மூலம் தங்களை வளர்த்துக் கொள்வதும் கண்கூடான நிகழ்வாக உள்ளது. ஆனால் தென் தமிழகத்தில் மதம் மாறிய பரவர்களுக்கோ, முக்குவர்களுக்கோ அப்படி எந்த ஒரு சாதிக் கொடுமைகளும் இல்லை. அவர்கள் சந்தித்ததோ உற்பத்தியில் தங்களுக்கான உரிமையை இன்னொருவர் பறித்துக் கொள்வது தொடர்பான பிரச்சனை, முத்துக்குளித்தலில் இருக்கும் தனி உரிமையை அராபியர்கள் பறித்த போது, அவர்களிமிருந்து முத்துக்குளிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான மோதல்தான் அராபியர்களுக்கும் பரவர்களுக்குமான மோதலாக நடந்தது. அதே உரிமையை எப்படியவாது காப்பாற்ற வேண்டுமென்றுதான் பரவர்கள் முதன் முதலாக கிறிஸ்தவம் தழுவினார்கள்.

1498- ஆம் ஆண்டு மே - திங்கள் இருபதாம் நாளில் ஐய்ரோப்பிய மாலுமியான வாஸ்கோடகாமா நன்னம்பிக்கைமுனையைச் சுற்றி கள்ளிக்கோட்டைக்கு வந்திறங்கியதுடன் போர்த்துக்கீசியரின் வருகையும் வணிகமும் துவங்குகிறது. அன்றைய காலச்சூழலில் துருக்கிப் பேரரசை மீறி கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு நுழைய முடியாத நிலையில் ஐய்ரோப்பியர்களுக்கு ஆசியாவுக்கான கடல் வழியைக் கண்டு பிடிக்க வேண்டிய தேவையிருந்ததன் அடிப்படையில்தான் வாஸ்கோடகாமா போர்ச்சுக்கல்லில் இருந்து தன் போர் வீரர்களுடன் பயணத்தைத் துவங்கினார். உரோமப்பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோப்பிள் என்று அழைக்கப்பட்ட இஸ்தான்புல்லை 1453- மே-29-ஆம் நாள் துருக்கிப் படைகள் கைப்பற்ற அது ஒரு நகரின் வீழ்ச்சி மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவோடு முத்து, மிளகு, உள்ளிட்ட நறுமணப்பொருட் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐய்ரோப்பிய வணிகர்களின் சந்தைச் சரிவாகவும் இருந்தது. இஸ்தான்புல்லை துருக்கியர்கள் வீழ்த்தியபோது  தென்னிந்தியாவில் ஐய்ரோப்பியரின் செல்வாக்கு சரிந்து  கீழைக்கடலோரத்திலும், மேற்கு கடலோரத்திலும் அராபியர்களின் செல்வாக்குப்பெற இஸ்தான்புல்லின் வீழ்ச்சியும் ஒரு காரணமாக இருந்தது.
அதுவரை ஐய்ரோப்பாவை அடைய இந்தியாவிலிருந்து மூன்று கடல் வழிகளை ஐய்ரோப்பியர்கள் பயன்படுத்தினார்கள். எகிப்தின் வழியாக ஐய்ரோப்பாவுக்கு, ஆக்சஸ், காஸ்பியன், கருங்கடல் வழியாக ஐய்ரோப்பாவுக்கு, சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐய்ரோப்பாவுக்கு என மூன்று வழிகள் மூலம் வணிகம் நடந்தது. துருக்கியர்கள் இஸ்தான்புல்லை வென்றி கண்டதன் மூலம் இந்த வழிகளில்  ஐய்ரோப்பியரின் செல்வாக்கு குறைந்தது, அல்லது நெருக்கடியைச் சந்தித்தது, புதிய கடல் வழியொன்றை கண்டு பிடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஸ்பானிய, போர்த்துக்கீசிய மாலுமிகள் ஆப்ரிக்கக் கடல் வழியாக தென்னிந்தியாவுக்கு புதிய கடல் வழியை கண்டு பிடிக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் பயணத்தைத் துவங்கினார்கள்.

வணிகமும், கூடவே கிறிஸ்தவத்தை பரப்புவதுமே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இம்மாதிரியான ஒரு முயற்சியில் ஈடுபட்ட போர்த்துக்கீசிய மாலுமியான பார்த்தலமேயூ டயஸ் (Bartolomeu Dias) 1487 -ல் நன்னம்பிக்கை முனையை அடைந்து போர்த்துக்கல்லுக்கு திரும்பிச் சென்று விட அடுத்து மூன்று கப்பல்களில் போர் வீரர்களோடு வந்தவர்தான் வாஸ்கோடகாமா.
வாஸ்கோடகாமாவின் வரவோடு போர்த்துக்கீசியர் இந்தியாவிலும் இலங்கையிலும் படந்து அதன் தொடர்ச்சியாக டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் வந்து நம்மை காலனித்துவ குடி மக்களாக ஆக்கியதுமான வரலாற்றின் துவக்கம் என்பதால் வாஸ்கோடகாமாவின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.வாஸ்கோடகாமா போர்ச்சுக்கல்லுக்கு ஒரு வருடத்தில் திரும்பி விட்டாலும், போர்த்துக்கீசியர் முதன் முதலாக குடியேறியது கொச்சியில். அவர்கள் கரைக்கு வந்த போது செல்வாக்கோடு திகழ்ந்த அராபியர்களை வெல்வதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர்.

1502- ல் அவர்கள் கள்ளிக்கோட்டையை அராபியர்களிடமிருந்து கைப்பற்றி  அங்கு ஒரு ஆலையை நிறுவினர். மேற்குக்கரையோரத்தில் கால் பதித்த போர்த்துக்கீசியர் கிழக்குக் கரையோரத்தை கைப்பற்றும் திட்டங்களோடு அராபியர்களைக் வீழ்த்த தருணம் பார்த்துக் காத்திருந்த அதே நேரத்தில்தான்.பரவர்களுக்கும் அராபிய மூர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உதவிகளுக்காக காத்திருந்தனர்.

தெற்கில் கொடுமைகளைச் சந்தித்து பதட்டமாக வாழும் பரவர்கள் கொச்சியில் இருக்கும் போர்த்துக்கீசியரிடம் உதவி பெற்று மூர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுமாறு ஜான் டி குரூஸ் என்பவர் பரவர் சாதி தலைவர்களான பட்டங்கட்டிகளுக்கு அறிவுரை வழங்க பட்டங்கட்டிகள் கொச்சிக்குக் சென்று போர்த்துக்கீசியரின் உதவியை நாடிய போது அவர்கள் மதத்தை ஒரு பாதுகாப்பான கருவியாக பயன்படுத்தினார்கள். மதம் மாறும் கோரிக்கையை அவர்கள் வைக்க, பட்டங்கட்டிகளும் வேறு வழியில்லாமல் கிறிஸ்தவத்தை தழுவ சம்மதித்தனர். கொச்சிக்கு உதவி கேட்டு தூது சென்ற பட்டங்கட்டிகளுக்கு கோவாவின் தலைமை குருவாக இருந்த மிக்கேல் வாஸ்சும். கொச்சின் பங்குகுருவாக இருந்த கொன்சால்வஸ் அடிகாளாரும் ஞானஸ்நானம் வழங்கி திருமுழுக்கு அளித்தனர்.

1536-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் போர்த்துக்கீசிய தளபதியான பேதுருவாஸ் தலைமையில் பெரும் கப்பற்படை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு வேதாளை என்ற இடத்தில் அராபிய மூர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் போர் நடந்தது. காயல்பட்டினம் மூர் மன்னன் கொல்லப்பட்டு போர்த்துக்கீசியர் காயல்பட்டினத்தை கைப்பற்றியதுடன் கீழைக்கடலோரத்திலும் போர்த்துக்கீசியர் கால் பதித்தனர்.

காயல்பட்டினத்தில் இருந்து ஆட்சி செய்த 500 ஆண்டுகால மூர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாதிரியார் மைக்கேல் வாஸின் முன்னிலையில் தூத்துக்குடி, பழையகாயல், புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு, திருசெந்தூர், உள்ளிட்ட ஏழு கடற்துறையச் சார்ந்த முப்பதாயிரம் மக்கள் கூட்டமாக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவினார்கள். இது இந்தியாவின் முதல் மதமாற்றம் அல்ல பரவர்களிடம்  மதமாற்றம் நடப்பதற்கு முன்பே சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளத்தில் தோன்றிவிட்டார்கள். இந்தியாவின் முதல் பள்ளிவாசலும், தேவாலையமும் கேரளாவில்தான் தோன்றியது. ஆனால் பரவர்களின் மதமாற்றம் என்பது தமிழகம், மற்றும் இலங்கையில் கிறிஸ்தவத்தின் பரவலுக்கு அஸ்திவாரமாக அமைந்ததோடு, இலங்கையையும் போர்த்துக்கீசியர் கைப்பற்ற வழிகோலியதும் இந்த மதமாற்றமே. ஒரு புதிய வரலாற்றில் துவக்கமாக இந்த மதமாற்றம் நடந்தது என்றாலும் இது குறித்த ஆய்வுகளே தமிழில் இல்லை. பெருந்தொகையான மக்கள் மதம் மாறிய அந்த ஆண்டு கிபி 1537 என்கிறது உரோம ஆவணங்கள். தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் மட்டும் அப்போதிருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டாயிரத்திற்கும் மேல்.


ஆனால் இந்த மாதமாற்றம் காலனித்துவத்தின் வரவை வலுவாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையினூடாக அறிவித்தது. அடுத்தடுத்து போர்த்துக்கீசியர் இலங்கையைக் கைப்பற்ற கிழக்குக் கரையோர முத்துக்குளித்துறை அவர்களுக்கு கேந்திர முக்கியத்துவமான பகுதியாக இருக்க அவர்கள் பாரம்பரிய மீனவர்களான பரவர்களையும், முக்குவர்களையும் அடுத்தடுத்து மதம் மாற்றினார்கள். இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒட்டு மொத்தமாக நீளமாக வாழ்ந்த சமூகம் தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றியாக கிறிஸ்தவத்தைத் தழுவியது. இடையில் மூர்களிடம் பறி கொடுத்த முத்துக்குளிக்கும் உரிமையும் வரிச்சலுகைகளும் மீண்டும் பரவர்கள் கைக்க்கு வந்தது.


ஆனால்,
மதம் மாறிய பரவர்கள் அனைவருமே மேன்மை தாங்கிய போர்ச்சுக்கல்  மன்னனின் குடி மக்களாக அறிவிக்கப்பட்டார்கள். போர்த்துக்கீசியரால், புதிய எதிரிகள் தங்களைத் தாக்கவும், நிற்க நிழலில்லாமல் ஓடவுமான ஒரு புதிய வாழ்வு சிலுவையின் பெயரால் அவர்கள் மீது சாத்தப்பட்டது.

இறுதியாக,

எங்கள் கடலில்
வளமான முத்துக்கள் இருந்தன.
நினைவெட்டாக் காலத்திலிருந்தே
எங்கள் முன்னோர்கள்
கண்டெடுத்த இயற்கைச் சொத்து அது.

கொற்கையிலும்
மன்னாரிலும்
பூம்பட்டினத்திலுமாக
வருடத்திற்கு ஒரு போகம் முக்குளித்தோம்.
மேற்கிலிருந்து வீசியக் காற்று
கொற்கைக்கும்
கீழைக்காற்று மன்னாருக்குமாக
முத்தைக் கொட்டிக் கொடுத்தது
அந்த இயற்கையின் சொத்துக்கு
எங்கள் முன்னோர்கள் அதிபதிகளாக
இருந்தனர்.

பண்டையில் பாண்டியர்களும்
சோழர்களும்
அராபியர்களும்
கிரேக்கர்களும்
ரோமர்களும்
தின்றது போக
மீதியை
நவாப்களும்
நாயக்க மன்னர்களும் தின்றார்கள்.
கடைசியில் அவர்கள் சிலுவைகளோடும்
பைபிளோடும் வந்தார்கள்.
கானலப் பெருந்துறையான
எங்கள் மூதாதைகளின் கடலில்
இப்போது முத்துக்கள் இல்லை.
மன்னாரிலும் கீழைக் கடலோரத்திலும்
வாழும் எங்கள் கைகளில் ஜெபமாலையும்
பைபிளுமே உள்ளது.
பிரமாண்ட தேவாலையங்களில்
நாங்கள் இப்போது தேரிழுத்துக் கொண்டிருக்கிறோம்.
பிதாவே, என்னை மன்னித்தருளும்.
ஆமென்.


தொடரும்..........

No comments:

Post a Comment