வரலாற்றுச் சிறப்பு மிக்க மாப்ளா போராட்டத்தை விவசாயிகளின் எழுச்சி என்று பதிவு செய்கிறது வரலாறு. பிரிடீஷாருக்கு எதிரான கிளர்ச்சியில் பங்குபெற்ற மைசூர் சமஸ்தானமும் அதன் கீழ் இயங்கிய குட்டிக் குட்டிக் சமஸ்தானங்களும் வரிகொடா கலகத்தைத் துவங்கிய போது அதுவும் விவசாய மக்களின் போராட்டமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு வர்க்கமாக விவசாயிகளை அடையாளப்படுத்தவும் பொது வெளியில் அதை அங்கீகரிக்கவும் செய்யும் பொது மனம்.
மீனவர்களை ஒரு சாதியாகக் காண்கிறது. பரமக்குடியில் தலித்துக்கள் மீதான இனப்படுகொலையை நாம் பேசும் போது அவர்களை தலித் என்று சொல்லாதீர்கள். தமிழர்கள் என்று சொல்லுங்கள் என்று சொல்லும் தமிழ் தேசியர்கள். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 25 ஆண்டுகளாக போராடும் மீனவ மக்களின் அடையாளங்களையும் மறுத்து தமிழர் போராட்டம் என்று அடையாளப்படுத்த முனைகிறது. ஆனால் அரசோ போலீசோ திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய திமுகவோ, அதிமுக மிகத் துல்லியமாக அந்த மக்களின் புவியியல் வதிவிடத்தையும் அது சம வெளி அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையும் புரிந்துள்ளதால் மட்டுமே போலிசை இறக்கி அடக்கு முறையை ஏவுகிறது. மக்கள் சமூகங்களின் தனித்த அடையாளங்களை அங்கீகரிக்க மறுக்கும் சம வெளியிடம் தன் இருத்தலுக்கான உரிமையைக் கோரி நிற்பதே தென் தமிழக மீனவ மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்.நாங்கள் இங்கே வாழ வேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கை இன்று நேற்றல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டது பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை நெடுநீளமாய் விரிந்து கிடக்கும் அம்மக்களை பொது அரசியல் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அவர்கள் அரசியலில் தனித்த சக்திகளா? கூடங்குளம் போராட்டத்தில் சம வெளிச்சமூகம் என்ன செய்தது? மீனவ மக்கள் என்ன செய்தார்கள்? அதன் வரலாறு என்ன? இதிலிருந்துதான் இந்த தொடரை நான் தடாகம் இணையத்துக்காக எழுதத் துவங்குகிறேன்.
மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற கோஷத்தை முன் வைக்கிறார் டாக்டர் ராமதாஸ். இது ராமதாஸின் கோரிக்கை மட்டுமல்ல எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கோரிக்கையும் கூட, பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் உரிமை கோரல் சமூக நீதியின் மற்றொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. சாதி வாரி வாக்கெடுப்பு தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு ஒப்பீட்டளவில் எவ்விதமான ஆதாயங்களையும் அளிக்காத நிலையில் தலித்துக்கள், பழங்குடிகளும் சாதி வாரி வாக்கெடுப்புக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்பது சமூக நீதி சிந்தனையாளர்களின் கருத்து. ஆனால் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் தலித் மக்களுக்கு வழங்கப்படும் சிறிதளவு உரிமையைக் கூட சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருப்பது நாம் அறிந்த சம கால அரசியல் வரலாறு. தமிழகம் முழுக்க நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கிற வழிபாட்டு உரிமை, தெருவில் நடக்கும் உரிமை, பொது வழிகளை பயன்படுத்தும் உரிமை போன்றவை தலித்துக்களுக்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளால் மறுக்கப்படுவதில் தொடங்கி ஒரு அம்பேத்கர் திரைப்படத்தைக் கூட திரையிட அனுமதிக்க முடியாதவர்களாக பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறி தமிழகத்தில் கோலோச்சி பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சாதி அதிகாரம் மிக வலுவான முறையில் புத்தியிர்ப்பு பெறும் வகையில் 2011 தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
சமூக நீதி போன்ற தற்காலிக ஏற்பாடுகள் பன்மைத்துவ அடையாளத்தைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கத்தின் கூட்டுக் கோரிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் தமிழகத்தில் நடந்த நடந்து கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத முன்னேறிய சாதி, பிற்படுத்தப்பட்ட சாதி அரசியலின் போக்கு தலித்துக்களுக்கும் எல்லையோர பழங்குடிகள், மீனவ மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை தோற்று விக்கும் சூழல் வெகு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அம்பேதகர் நூற்றாண்டு விழாவின் பின்னர் ஏற்பட்ட தலித் எழுச்சி இலக்கியத்திற்கும் அரசியலுக்குமான ஒரு ஒத்திசைவை உருவாக்கியதோடு அடங்கிப் போய் விட்டது. ஆனால் சமூகத் தளத்தில் சின்ன அசைவைக் கூட ஏற்படுத்தாத காலம் காலமாக வெறும் வேடிக்கை மனிதர்களாக நிலங்களின் ஓரத்தில் காவல் தெய்வங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் மீனவ மக்கள். சமவெளிச் சமூகங்களுக்கு அடியாள் வேலை பார்க்கவும், சமவெளிச் சமூகங்கள் அதிகாரம் பெற ஒவ்வொரு தேர்தலிலும் பலியாடுகளாக தலை வெட்டப்படுகிறவர்கள்தான் இந்த காவல் தெய்வங்கள்.
பிரிட்டீஷாரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்களிடம் இருந்து அதிகாரம் வேண்டிய வெள்ளாளர், செட்டியார், முதலியார், நாயக்கர்கள் உள்ளிட்ட இன்னபிற பார்ப்பனரல்லாத முன்னேறிய சாதிகளின் துவக்கமாக இருந்த திராவிட இயக்கம் எண்பதுகளின் பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் தங்களின் செல்வாக்கை விரிவு படுத்தின. அல்லது பெருந்திரள் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி மக்களை அரவணைப்பதன் மூலம் தங்களின் அதிகாரத்தை வலுவாக நிறுவிக் கொண்டன. பெரியார் பேசிய பார்ப்பன எதிர்ப்பு பின் தள்ளப்பட்டு, சாதி ஒழிப்பும் கை விடப்பட்ட நிலையில் சாதி வெறியும் பெருந்திரள் சாதிகளைத் திரட்டுவதும், அதையே சமூக நீதியாக தம்பட்டம் அடிப்பதுமே இன்றைய திராவிட இயக்க அரசியல் நிலையாக இருக்கிறது. இன்றைய நிலையில் ஒதுக்கப்பட்டுள்ள சமூகம் சார்ந்த ஒருவர் திராவிட இயக்கத்தைக் கொண்டாட ஏதும் இல்லை. திராவிட இயக்கம் சம வெளிச்சமூகங்களின் பிரநிதித்துவம் செய்வதோடு சமவெளிச் சமூகங்களின் அதிகாரக் கோரல் குறித்துமே கவலை கொள்கிறது. எல்லையோரங்களில் வாழும் விளிம்புச் சமூகங்களின் குரல் இன்று வரை தமிழில் இல்லை. தமிழக வரலாற்றில் இது வரை பேசப்பட்ட எல்லா அரசியல் உரையாட்களுமே சம வெளிச்சமூகங்களுக்கிடையிலான முரண்கள்தான். கலகம், கட்டுடைத்தல், மையம், விளிம்பு என்று கவர்ச்சி பூசப்பட்ட கோஷங்களைக் எல்லையோரத்தில் நின்றால் நிராகரித்து விட முடியும். ஏனென்றால் இதில் விளிம்பின் விளிம்பு. ஆகக் கீழான நிராகரிப்பு.
தமிழக அரசியல் வரலாற்றில் எண்பதுகளுக்குப் பிந்தைய காலம் என்பது பெருந்திரள் சாதீய வரலாறாக உருவாக்கப்பட்டு விட்டது. காமராஜரின் தொடர்ச்சியாய் நாடார்களும், அதிமுகவின் தொடர்ச்சியாய் தேவர்களும், பின்னர் வட மாவட்டங்களில் வன்னியர்களின் எழுச்சி என பெருந்திரள் சாதித் திரட்டலினூடேதான் தமிழக அரசியல் இயங்கி இன்றளவும் இயங்கி வருகிறது. பார்ப்பனரல்லாத முற்பட்ட வகுப்பினர் பார்ப்பனர்களை சூத்திர மக்களின் எதிரிகளாகச் சித்தரித்து தங்களை மட்டும் வளர்த்துக் கொண்ட நிலையில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட சாதிகளில் அதுவும் குறிப்பாக தேவர் அரசியலை ஊட்டி வளர்த்தது அதிமுக. இதை எதிர்கொள்ளத் தீர்மானித்த திமுக அதிமுகவின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கி அதிமுகவையே இன்று விஞ்சி நிற்கிறது. நகர்புறம், நடுத்தரவர்க்கம் என்று கட்சி கட்டிய திமுக கிராமப்புற வாக்கு வங்கியைக் கொண்ட இயல்பாகவே சாதீயக்கூறுகைகளைக் கொண்ட அதிமுகவின் பண்புகளை உள்வாங்கி தேர்தலை எதிர்கொள்கிறது. இத்தேர்தலில் சிறப்பாக திமுகவும் மூத்த திராவிட இயக்க தலைவர் என்று சொல்லப்படுகிறவருமான கருணாநிதி கூடுதலாக கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகளை குறிவைக்கிறார். அணிதிரட்டலுக்கப்பால் மன்னர் மரபில் பொன்னர் சங்கரின் துணையோடு தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார்.
சாதி அரசியலில். அதிமுகவாவது வெளிப்படையாக சாதியைச் சொல்லி இன்ன சாதி ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்று சொல்லி வரும். ஆனால் திமுக முற்போக்கு இயக்கம் அல்லவா? அது சாதியைச் சொல்லாது. மாறாக மறைமுகமாக நிலத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்துகிறது. சேர, சோழ, பாண்டியர், என்பதில் தொடங்கி மூவேந்தர் குலப்பெருமை, ராஜராஜ சோழன் என மன்னர் கால மதிப்பீடுகளை தூக்கி நிறுத்துவதன் மூலம் தமிழர்களை பழைய மன்னர் மரபுக்குக்குள் கொண்டு செல்கிறார்கள். செம்மொழி மாநாட்டிற்குப் பின்னர் தமிழர் கலாசார நிலமரபு என்று கதைக்கப்பட்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள் இதற்கான மிகப்பெரிய வணிக வலைப்பின்னல் ஒன்று நிலத்தோடு எவ்வித தொடர்புகளும் இல்லாத எம்,எஸ். சுவாமிநாதன் என்பவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கடற்கரை மேலாண்மைச் சட்ட வடிவமைப்பிலும், மீன் பிடி ஒழுங்காற்று விதியென்று என்று மீனவ மக்களுக்கு சுவாமிநாதன் போன்றோர் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க கிளம்பியதெல்லாம் தனிக் கதையாக இருந்தாலும், இப்போது ஐந்திணை நிலங்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் விதமாக ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் நிறுவப்படும் என்று அறிவித்த தமிழக அரசு அதற்கு பொறுப்பாக சுவாமிநாதனை நியமித்தது. குறிஞ்சி பூங்கா ஏற்காட்டிலும், முல்லைப்பூங்கா சிறுமலையிலும் (திண்டுக்கல்) மருதப் பூங்கா மருதாநல்லூரும் (தஞ்சாவூர்) நெய்தல் பூங்கா திருக்கடையூரிலும் (நாகப்பட்டினம்) பாலைப் பூங்கா அச்சடிப்பிரம்ம புரத்திலும் (ராமநாதபுரம்) அமைக்கப்படும் என நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பூங்காக்களின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.32.413 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. சங்கால மரபை நம் கண் முன் நிறுத்தும் இந்த சமகால சித்திரத்திரத்திற்கும் எல்லையோர மக்களுக்களின் வாழ்நிலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? நிலவெளிச்சமூகங்களின் மேன்மைகளை இன்று நிறுவ நினைக்கும் திராவிட அதிகாரம். ஏன் எல்லையோரப் பழங்குடிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே கேள்வி. சங்கலாக மரபின் தொடர்ச்சியால் விவசாய நிலங்களை வகை பிரித்தவர்கள் நாஞ்சில் நாடு, கொங்கு மண்டலம், என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். நிலங்களின் பெருமிதங்களால் ஆன தமிழகத்தில் இன்று நிலவுவது சமவெளிச்சமூகங்களின் சாதி அரசியலை நேரடியாக சாதியால் அடையாளப்படுத்த முடியாதவர்கள் கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என்று அழைக்கிறார்கள்.
நாஞ்சில் நாடு
கன்னியாகுமரி மாவட்டத்தை நாஞ்சில் நாடு என்கிறார்கள். குமரி மாவட்டத்தை ஒட்டிய வயல், மலை, உள்ளிட்ட விவசாயப் பரப்பைக் அடையாளப்படுத்துகிறது இது. தமிழகத்தின் மற்றெல்லா மாவட்டங்களையும் விட குமரி மாவட்டத்திற்கு மட்டும் பிரத்யேகமான ஒரு அம்சம் உண்டு. பாலை நிலம் தவிர்த்து ஏனைய நால் வகை நிலங்களுமே குமரியில் உண்டு. எப்படி மலையும் மலைசார்ந்த இடங்களும், வயலும், காடும் உண்டோ அதை விட அதிகமான நெடு நீளப்பரப்பிற்கு கடலும் உண்டு. ஒன்றல்ல மூன்று கடல்கள் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடலோரத்தில் பல்லாயிரம் மீனவக் குடிகள் கடலை நம்பி பாரம்பரீய மீனவர்களாக வாழ்கிறார்கள். விவசாய பெருங்குடி வாழ்வைச் சித்தரிக்கும் நாஞ்சில் என்ற சொல்லில் எங்காவது மீனவர்களுக்கான அடையாளம் உண்டா? ஆக இந்த நாஞ்சில் நாட்டு சித்திரத்திற்குள் கடலுக்கு இடமில்லை. ரசனைக்குரிய கடலுக்கே இடமில்லை என்றால் மீனவனுக்கோ கருவாட்டுக்கோ இடம் கொடுத்து விடுவார்களா என்ன? நாஞ்சில் நாட்டு நிலம் என்றால் அது விவாசாய நிலம், விவசாயம் என்பது நில உரிமையாளர்களுக்கான சித்திரம். பெரும்பலான நில உடையாளர்கள் ஆதிக்க சாதியினராய் இருப்பதாலும், அதில் கூலிகளாக தலித்துக்கள் இருப்பதாலும் நாஞ்சில் நாட்டில் அவர்களுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. ஆரல் வாய் மொழிக் காற்றின் சுகந்தத்தை அனுபவிக்கும் அனுகூலங்கள் வாய்க்கப்பெறாதவர்கள் எப்படி இந்த நாஞ்சில் நாட்டு சித்திரத்திற்குள் வரமுடியும். உள்ளூர்புறங்களில் நிலங்களில் வாழும் விவசாயப் பெருங்குடிகளும் பெருங்குடிகளை அண்டி வாழும் தலித் சிறுகுடிகளும் நிலத்திற்கு வெளியே கடலோரங்களில் வீசப்பட்டுள்ள மீனவர்களுக்கும் நாஞ்சில் நாட்டு சித்திரத்திற்குள் இடமில்லை. ஆனால் நாஞ்சில் நாட்டில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக வெள்ளாளர்களும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெரும் வாய்ப்பைப் பெருகிறவர்களாக நாடார்களும் உள்ளனர். எல்லையோர பழங்குடிச் சமூகமான மீனவர்கள் இவர்களின் எவர் ஒருவரையும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது வெறும் வேடிக்கை மனிதர்கள்.
கொங்கு நாடு
கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் கொங்கு மண்டலம் எனப்படுகிறது. நிலத்தால் நமக்கு உருவான சித்திரங்களுக்கப்பால் கொங்கு மண்டலம் என்பது வெள்ளாள கவுண்டர்களின் ராஜ்ஜியமாக இருக்கிறது. தமிழகத்தில் பரவாலாக சாதிக் கொடுமைகள் நடந்தாலும் கொங்கு மண்டலத்தில் தலித்த்துக்களுக்கு எதிராக நடக்கும் சாதிக் கொடுமைகளும் அதன் கொடூர வடிவங்களான இரட்டை டம்ளர், மலம் ஊற்றுதல், உடல் ரீதியாக துன்புறுத்தல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் ஆயிரம் கிராமங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களையும் கொடுமைகளையும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிக் கொண்டு வந்தார்கள். நான் ஒரு முறை சென்ற போது தோழர் பாலமுருகன் பவானி பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை என்னை அழைத்துச் சென்று காட்டினார். இக்கொடுமைகள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. இங்கே கவுண்டர் சாதியைத் தவிர்த்த இன்னொருவர் போட்டியிட்டு வெல்லவே முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கொங்குநாடு முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் திமுகவோடு கூட்டு வைத்துள்ளது. கணிசமான கவுண்டர் ஒட்டுக்களை திமுக பெற்றுக் கொள்ளப் போகிறது. உடனே கொங்கு தமிழர் பேரவை என்கிற போட்டி கவுண்டர் அமைப்பு அதிமுகவை ஆதரிக்கிறது.
இப்படி தமிழகத்தில் எல்லா மண்டலங்களையும் நிலத்தால் அடையாளப்படுத்தி உள்ளுக்குள் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை ஒருங்கிணைத்து அதை தேர்தலில் அடையாளப்படுத்த நினைக்கிறது திராவிட இயக்கம். பாண்டி மண்டலம் தேவர்களுக்கு, வட மண்டலம் வன்னியர்களுக்கு, தென் மண்டலம் நாடார்களுக்கு, மேற்கு மண்டலம் கவுண்டர்களுக்கு, சென்னை பார்ப்பனர், பார்ப்பனரல்லாத பிற உயர்சாதிகளுக்கு என்று வகுந்து பங்கு போட்டு ஓட்டுப் பிரிக்கிறார்கள்.
எல்லையோரப் பழங்குடிகள்
தலித்துக்களின் அரசியல் பிரநிதித்துவத்திற்காக தனித் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க தலித் தலைவர்களும் அரசியலுக்கு வந்து ஜோதியில் ஒன்று கலந்து விட்டார்கள். ஆனால் காலம் காலமாக வெறும் வாக்கு வங்கியாகவே எந்த விதமான அனுகூலங்களையும் அனுபவிக்காமல் புறக்கணிக்கப்பட்ட இனமாக இருப்பது தமிழகத்தின் நீளமான கடலோரங்களில் ஒதுக்கப்பட்டு வாழும் மீனவ மக்கள்தான். தெற்கே இந்தியப் பெருங்கடலிலும், கிழக்கே வங்காள விரிகுடா, அரபிக்கடலிலுமாக பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரின் நீரோடி வரை 1,225 கிலோ மீட்டர் நீளமாக மீனவ மக்கள் கடலோரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். பட்டினவர், பரவர், வலையர், கரையார், பர்வதராஜகுலம், முக்குவர், மரக்காயர், இன்னும் சில சாதிகளாக சாதிகளாக அடையாளம் காணப்படும் மீனவ மக்கள் நீளமான இக்கடலோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) , திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், திருப்போருர், செய்யார் (தனி), திண்டிவனம் (தனி) கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் (தனி) சீர்காழி (தனி), பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி) வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி) பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, திருவாடணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் , ராதாபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், என சென்னை தொடங்கி குமரி மாவட்டம் வரை நான் சுட்டிக்காட்டியிருக்கும் தொகுதிகள் அனைத்துமே கடலோர மாவட்டங்களில் பெரும்பலான மீனவ வாக்காளர்களை உள்ளடக்கியத் தொகுதிகள். இத்தொகுதிகளில் மீனவ மக்களின் கணிசமான வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. ஒட்டு மொத்தமாக இந்தத் தேர்தலில் திமுக திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் கே.பி.பி சாமி என்கிற மீனவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. திருவொற்றியூர் தொகுதியில் கணிசமான நாடார் வாக்குகள் இருந்தாலும் மீன் பிடித்துறைமுகம் சார்ந்து தொழில் மேலாதிக்கத்திற்காக பயன்படும் நோக்கில் மட்டுமே திமுக சாமிக்கும் அதிமுக குப்பனுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தவிறவும் சாமியை ஒரு மீனவராக கருத முடியாது. மீனவர்களின் குரலை அவர் பிரதிபலிக்கவும் இல்லை. அதிமுக மூன்று மீனவர்களை இம்முறை வேட்பாளராக்கி இருக்கிறது இதில் நகர்ப்புற தொகுதிகளாக திருவொற்றியூர், ராயபுரம் தவிர்த்து, நாகையில் போட்டியிடும் கே.ஏ.ஜெயபாலும், குளச்சலில் போட்டியிடும் லாரன்சும் உள்ளூர் வாக்குகளைப் பெற்று வெற்றிபெருவார்களா? என்பது பெரும் கேள்விதான். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக சுமார் முப்பது கடலோரத் தொகுதிகளில் மீனவர்கள் இருந்தும் அவர்கள் பொதுத் தொகுதிகளிலேயே போட்டியிட்டு வெல்ல வேண்டிய நிலை. பொதுத் தொகுதிகள் என்பது உள்ளூர் சமவெளிச் சாதிகளின் ஏக போக ஆதிக்கமாய் இருக்க உண்மையான மீனவப் பிரதிநிதிகள் சட்டமன்றம் செல்ல வாய்ப்புகளே இல்லை.
மீனவ மக்கள் செல்வாக்குப் பெற்றுள்ள இந்த முப்பது தொகுதிகளில் ஏழு தனித் தொகுதிகள். ஒரு பக்கம் பொதுத் தொகுதிகளில் சமவெளிச் சமூகங்களை பிரநிதித்துவப்படுத்தும் சாதி இந்து வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களாக மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ள மீனவ மக்கள் தனித் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களைத் தேடுக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழக அரசின் சாதிச் சான்றிதழில் பி.சி, அல்லது எம்.பி.சி என்று அடையாளப்படுத்தப்படும் மீனவ மக்கள் சமவெளிச் சமூகங்களால் சமூக வாழ்நிலையில் தலித்துக்களாகவே பார்க்கப்படுகின்றனர். சமவெளிச் சமூகங்களின் சாதீய ஒதுக்கல் ஒரு பக்கம் என்றால் கூடவே நில ரீதியாக ஒதுக்கலும் இணைந்து கொள்ள முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இனமாகவே மீனவ மக்கள் வாழ்கின்றனர். எல்லையோர மீனவ மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்து சுமார் முப்பது வருடங்கள் ஆகி விட்ட நிலையில் அது பற்றிய ஒரு விவாதம் கூட இங்கு இல்லை. பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டம் வரையிலான மீனவ மக்கள் நீண்டகாலமாகவே தங்களை பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் சென்ற தேர்தலுக்கு முன்னர் நடந்து முடிந்த தொகுதி மறு வரையறையில் மேலும் பல தொகுதிகளிலும் விசிறியடிக்கப்பட்டு ஒட்டு மொத்த பலத்தையும் இழந்து போயினர் மீனவ மக்கள். அதே நேரம் உள்ளூர் சமவெளிச் சமூகங்களை நடந்து முடிந்துள்ள தொகுதி வரையறை மேலும் ஐக்கியப்படுத்தியிருக்கும் ஒரு நிலையையும் காண முடிகிறது. இந்த ஐக்கியப்படுத்தல் மூலம்தான் பெருந்திரள் சாதி அணி திரட்டல்கள் முன்னர் எப்போதையும் விட மேலோங்கி வருவதை உறுதிப்படுத்துகிறது. மீனவர் என்ற அடையாளத்துடன் ஒரு வர்க்கமாய் இணையும் எல்லா சாத்தியங்களையும் கொண்ட மீனவர்கள் இப்போது தேர்தல் அரசியலும் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்று அவர்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என நான் நம்பவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் தலைவர்களுக்கு மட்டுமே அது வளர்ச்சியாக மாறி விட்ட நிலையில், கடவுள் மறுப்பாளன் எப்படி வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கிறானோ அப்படியான ஒரு இக்கட்டான நிலையிலிருந்தே மீனவ மக்களின் அரசியல் உரிமைக்காக நான் இதை எழுதுகிறேன். இன்று நாம் காணும் அரசியல் என்பது திராவிட இயக்க அரசியலோ, முற்போக்கு அரசியல் வடிவமோ அல்ல அப்பட்டமான சாதி ஆதிக்க அரசியல் தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அந்த சாதியைச் சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ஏனைய மக்களை தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களை நிர்பந்தித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக விரோத சாதி அரசியலாகவே இதைக் காண வேண்டியிருக்கிறது. இந்த அரசியலில் ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகமான மீனவ மக்கள் தங்களின் அடிமைத் தனத்தையோ ஒதுக்கப்பட்ட தங்களின் வாழ்நிலையையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
மீனவர்களின் பாரம்பரீய பிரதேசங்களாக தூத்துக்குடி, இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இன்று அவர்கள் செல்வாக்கிழந்து விட்டார்கள். சமவெளிச் சமூகங்களால் கைப்பற்றப்பட்ட நிலமாக மீனவர்களின் பாரம்பரீய பிரதேசங்கள் மாறுவதோடு, தனியார் தாரளமயத்தின் கோரத் தாக்குதலையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கிறார்கள் மீனவ மக்கள். வனப்பாதுகாப்புச் சட்டம் என்பது வனங்களையோ வனத்தின் மக்களான மலைவாழ் பழங்குடி மக்களையோ பாதுகாக்காததோடு காடுகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பழங்குடிகளை காட்டிலிருந்து துரத்துகிறது. வனங்களையே பாதுக்காக்காத வனப்பாதுகாப்புச் சட்டம் கடல், மீன் பிடி உரிமை, கரையோரம் உள்ளவற்றையும் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறது. நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட மீனவ மக்களின் குரலை இன்று ஓரளவுக்கு பேசத் துணிந்திருக்கிறார்கள் மீனவ சமூக சிந்தனையாளர்கள். இன்று எம் தலைமுறையில் நாங்கள் எங்களுக்காக எழுதவும் பேசவும் முயல்கிறோம். சம வெளிச்சமூகங்களிடமும் அதை பிரநிதித்துவப்படுத்துகிற அரசிடமும் எங்களுடைய உழைப்பின் உரிமையை, சுதந்திரமான இருத்தலை, வாழ்வதற்கான உரிமையை கோரி நிற்கிறோம்.
உற்பத்தி செய்பவன் தன் பொருளுக்கான விலையை தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைக் கோரும் போது கடலில் பிடிக்கும் மீனின் விலையை கடலுழைப்பிற்கு சம்பந்தமே இல்லாத சம வெளிச்சமூகங்கள் தீர்மானிக்கலாகாது. சிறிய கட்டுமரங்களில், வள்ளங்களில் மீன் பிடித்த நிலை இன்று மாறி விட்டது. விசைப்படகுகளும் இழுவைப் படகுகளும் சிறு கட்டுமரத் தொழிலை நசுக்கி நாசமாக்கியிருக்கும் நிலையில் பெரும்பலான சமவெளி ஆதிக்க சாதியினரின் முதலீடு கடலை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. மீனவர்களின் உரிமைக்காக இவர்கள் போராடுவது போலவும். குரல் கொடுப்பது போலவும் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் மீனவ மக்கள். எண்பதுகளில் தொடங்கி இன்று வரை இராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கொல்லப்பட்ட நிலையில் கடிதம் எழுதியோ தந்தி அடித்தோ இம்மக்களை ஏமாற்றி விட முடியும். சமவெளிகளில் உள்ள ஆதிக்க சாதிகளை இப்படி எல்லாம் இத்தனை காலம் ஏமாற்ற முடியும் என நான் நம்பவில்லை. அதுவல்லாமல் மீனவர் படுகொலைகளைப் போல உள்ளூர் ஆதிக்கசாதிகளில் இம்மாதிரியான கொலைகள் இன்னொரு சமூகத்தாலோ வேறு நாடொன்றாலோ நிகழ்த்தப்பட்டிருக்கும் என்றால் திராவிட மனமோ தமிழ் மனமோ அதை பொறுத்துக் கொண்டிருக்குமா? என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்.
இது வரை தொழிற்பட்டு வந்துள்ள அரசியல் அதிகாரங்களால் ஏமாற்றப்பட்டுள்ள மீனவ மக்கள் அரசியல் பிரநிதித்துவம் பெற வேண்டும் என்றால் தாங்கள் ஒன்றிணையும் சாத்தியங்களை ஆராய வேண்டும். சம வெளிச்சமூக அரசியலுக்கு முதலில் அவர்கள் வக்களிப்பதை நிறுத்தி மீனவர்களை ஒருங்கிணைக்கும் தனித்த தொகுதிகளுக்காக போராடும் அதே நேரம் பழங்குடிப்பட்டியலில் தங்களை இணைக்கக் கோரும் குரலை தீவீரப்படுத்த வேண்டும். இந்த அதிருப்தி தமிழகமெங்கிலும் உள்ள மீனவ சமூக பிரதிநிதிகளிடம் பரவியுள்ள நிலையில் இதற்கான முன்னெடுப்புகள் சிந்தனை மட்டங்களில் ஆராயப்பட்டு வருகின்றன. கர்ம வீரராகவே இருந்தாலும் காமராஜர் எப்படி குறிஞ்சிப்பாடியில் ஜெயிக்க முடியாதோ, வன்னியத் திலகமாகவே இருந்தாலும் டாக்டர் ராமதாஸ் எப்படி நாகர்கோவிலில் ஜெயிக்க முடியாதோ அப்படித்தான் இதுவும். சாதி சாதியைக் கடந்து இங்கே எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தில் சாதியைக் கடந்து ஒரு வர்க்கமாக திரளும் சாத்தியம் மீனவ மக்களிடம் மட்டுமே உண்டு. ஏனென்றால் அவர்களின் கடலின் மக்கள். கடல்தான் அவர்களை ஒன்றிணைக்கிறது.
தொடரும்..........
Very nice and happy n proud to see atleast one brave person came front and spoke about மீனவ மக்கள்.People want rich vitamin and omega 3 from seafood but dont want hear the problem and tears of us
ReplyDeleteVery nice and happy n proud to see atleast one brave person came front and spoke about மீனவ மக்கள்.People want rich vitamin and omega 3 from seafood but dont want hear the problem and tears of us
ReplyDeleteஇவனுங்க மீன் திங்கரத்துக்காக அவங்க கடலில் உயிரை பணயம் வைத்து சாகனும
ReplyDelete