Sunday 9 September 2012

ஜாதியின் பெயரால் - முத்துகிருஷ்ணன்





1991 இல் அம்பேத்கர் நூற்றாண்டு விழா மத்திய அரசால் பெரும் கொண்டாட்டமாக நடத்தப்பட்டது. மத்திய அரசு அம்பேத்கரின் நூற்றாண்டை அவ்வாறு கொண்டாடியதற்கு ஒரே காரணம் அப்பொழுது இந்திய பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் அம்பேத்கரின் அருமை அறிந்தவராக இருந்ததுதான். மத்திய அரசால் பெரும் தொகை செலவில் அம்பேத்கர் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்கள் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

மலிவு விலையில் அந்தத் தொகுதிகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது. இந்தத் தொகுதிகளின் வழியாக புதிய வெளிச்சம் ஒன்று விளிம்பிலிருந்து மையம் நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது. அது தலித் விடுதலை, தலித் உரிமை, தலித் இலக்கியம், தலித் கட்சிகள் எனப் பல வடிவங்களில் மலர்ந்தது. அம்பேத்கர் நூற்றாண்டின் ஒரு பகுதியாக அம்பேத்கரின் உருவச்சிலை முதல் முறையாக பாராளுமன்றத்துள் நுழைந்தது. சிற்பிகள் கோவிலுக்குள் நுழைய முடியாதுதானே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தைக்கு சுதந்திரம் பெற்று 44 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இடம் இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வைக்கும் விஷயமின்றி வேறு என்ன.

அதே வேளையில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கிய முடிவுகளில் ஒன்று அரங்கேறியது. அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள், பத்தாண்டுகள் தூசு படிந்திருந்த மண்டல் அறிக்கைக்கு உயிர் கொடுத்தார். இந்திய அதிகார வர்க்கம் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளுக்கு நிரந்தர சவப் பெட்டியைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத திருப்பமாக மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது. வி.பி.சிங் மண்டலை கையில் எடுத்த அதே நேரம் அத்வானி கமண்டலத்தைக் கையில் தூக்கி ரத யாத்திரையைத் தொடங்கினார்.  தேசமெங்கும் சாதிய, மதக் கலவரத்தை தனது வன்ம உரைகள் மூலம் அரங்கேற்றினார். மண்டல் பரிந்துரைகள் சமூகத்தில் பெற்ற கவனத்தைத் திசைதிருப்ப உச்சபட்ச செயலில் களமிறங்கியது ஹிந்து தீவிரவாதிகளின் படை. அவர்கள் ராமருக்கு கரசேவை செய்யப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியைக் களங்கப்படுத்தினர், தரைமட்டமாக இடித்தனர். நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, அது முதல் இந்திய உயர் சாதி சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அங்கமாக அது நிலைத்துவிட்டது.

ஒவ்வொரு தினமும் இரு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், ஒவ்வொரு தினமும் மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள், ஒவ்வொரு 18 நிமிடமும் ஒரு தலித்துக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுகிறது, ஒவ்வொரு வாரமும் 5 தலித்துகளின் சொத்துகள் சேதப்படுத்தப்படுகிறது, வீடுகள் முற்றாக எரிக்கப்படுகிறது. இப்படியான ஒரு பெரும் பட்டியல் நீண்டு செல்கிறது. இது நாம் தயாரித்த அறிக்கை அல்ல, மத்திய அரசின் தேசிய கிரிமினல் ஆவணக் காப்பகம் வெளியிடும் விபரங்கள் தாம் இவை. இந்தியாவில் தலித்துகள், சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளில் காவல் நிலையம் சென்று பதிவு செய்யப்படும் வழக்குகள் 5% கூட இருக்காது. அப்படிப் பதிவு பெற்ற வழக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை தான் மேற்கூறிய புள்ளிவிபரங்கள், அப்படியானால் நாம் ஊடகங்கள் வழி அறியும் சம்பவங்கள், வன்கொடுமைகள் வெறும் குறியீட்டு அளவிலானவையே.

கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மனக் குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்கான தலித்துகள், திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே.

இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிகளாக ஆக்கப்பட்டவர்களை ஊடகங்கள் எப்பொழுதும் கண்டுகொள்வதில்லை . இவர்களைத் தாண்டி எங்கு நோக்கினாலும் இதை ஒத்த கதறல்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அது சுந்தூர், கீழ்வெண் மணி, கம்பளப்பள்ளி, பெல்ச்சி, சென்னகரம்பட்டி, எறையூர், தாமிரபரணி, விழுப்புரம் முருகேசன் - கண்ணகி, மேலவளவு, பாப்பாபட்டி - கீரிப்பட்டி, பில்கிஸ் பானு எனப் பெயர் மட்டுமே மாறித் திகழ்கிறது. இந்தப் பட்டியல் நிரம்பிய காகிதச்சுருள் ஊர் மந்தைகளில் தொட்ங்கி சேரிகள் வழியாக காடுகளுள் புகுந்து, செசன்ஸ் நீதிமன்றங்களில் இழைப்பாறிவிட்டு மீண்டும் கர்ஜித்து உயர் நீதிமன்றங்களின் வெங்காய கோபுரங்களை எக்காளம் செய்துவிட்டு, பெரு ஊடக நிறுவனங்களின் நுழைவாயில்களில் போதை ஏற்றிக் கொண்டு மிகச் சில சமயங்களில் மட்டுமே உச்ச நீதிமன்றங்களின் கடவாய்ப் பல்லில் சிக்கிக் கொள்கிறது. அப்படி நீதிமன்றங்கள் கண்டிப்பான மொழியில் சுடும் சொற்களால் பேசினாலும் சிறிது நேரம் வாத்தியார் முன்பு கை கட்டி நிற்கும் மாணவனைப் போல, வாத்தி தலை மறைந்தவுடன் கும்மாளம் போடத் தொடங்கிவிடுகிறது.

1993ல் பம்பாய் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்கள் நடந்த பின் அதனை விசாரிக்க நியமிக்கபட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷ்னின் பரிந்துரைகள் மீது பல்லாண்டுக்காலத் தூசு படிந்துள்ளது. அந்த கமிஷன் தனது ஆள்காட்டி விரலை துல்லியமாக பால் தாக்க்கரேயின் மீது நீட்டி உள்ளது. அவர் அவரது வாழ்நாளிலாவது கைது செய்யபட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா? 1984ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டுவுடன் 7000த்திற்கும் மேற்பட்ட சீக்கியர்களைல் கொன்று குவித்தவர்களை சட்டம் என்ன செய்தது? போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கபட்ட லட்சகணக்கானவர்களுக்க்கு இன்று வரை ஏன் நியாயம் கிடைக்கவில்லை? நியாயத்தை விட்டு தள்ளுங்கள் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட வழங்கவில்லை, லட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்த யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சனை சிறையில் தள்ளாமல் அவருக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு பதமஸ்ரீ வழங்க முயன்றதை எங்கு சென்று முறையிடுவது. வெறும் 1450MW மின்சாரத்திற்காக கட்டபட்ட நர்மதா அணையால் பெயர்த்தெறியப்பட்ட லட்சக்கணக்கானவர்களின் வாழ்வுடன் விளையாடும் மூன்று மாநில அரசுகளுடன் நீதிமன்றம் ஏன் கொஞ்சி உறவாடுகிறது. கோத்ராவில் 2000 இஸ்லாமியர்களைக் கொன்றவர்களே விரிவான ஆதாரபூர்வமான வாக்குமூலங்கள் வழங்கிய பின்னும் ஏன் ஹிந்து தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமான உலவ அனுமதிக்கபட்டிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தவர்கள் எப்படி இன்று வரை பகிரங்கமாக வன்ம உரைகளை விதைக்க அனுமதிப்பட்டிருக்கிறார்கள்?

இந்தியாவை உலுக்கிய கயர்லாஞ்சி வன்கொடுமையில் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் இது ஒரு சாதாரணக் கொலை என வழக்கை முடிக்கிறது, இதற்கு ஜாதிய மேலாதிக்கத்திற்கும் தொடர்பு இல்லையாம். சுரேகாவும், பிரியங்காவும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை, நிர்வாணப்படுத்தப்ப படவில்லை என்கிறது.

1992ல் பன்வாரி தேவி அவரது கிராமத்தை சேர்ந்த 5 உயர் ஜாதி ஆண்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார், அவர் துணிச்சலாக காவல் நிலைய்த்தை அணுகியும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் படிகளிலும் ஏறினார். 1995ல் நீதிமன்றம் இந்தியாவின் உச்சபட்ச உதாரணமாகத் திகழும் தீர்ப்பினை வழங்கியது. இப்படி ஒரு வன்புணர்வு பன்வாரி தேவிடின் மீது நிகழ்ந்திருக்க வாய்பே இல்லை, ஒரு உயர்ஜாதி ஆண் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணுடன் புணர்வது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளித்தது.இந்த வழக்கின் சாயலுடன் தான் பெரும்பாலான தீர்ப்புகள் வருகின்றன. விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அதனை மட்டுமே நம்மால் கொண்டாட இயலாது.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் பயனாக சிறு சதவிகித தலித்துக்கள் அரசு பணிகள் நோக்கி சென்றுள்ளனர். இதை கூடத் தாங்க இயலாதவர்கள் பல தவறான தரவுகளை தயாரித்து சமூக மனநிலையை தலித்துகளுக்கு எதிராக அமைத்தவண்ணம் உள்ளனர். இவர்கள் தான் மண்டல் அமலான பொழுது அதற்கு எதிராக 1000த்திற்கும் மேற்பட்ட  தலையங்கங்களை  எழுதியவர்கள். ஆனால் இன்றும் தலித்துகளில் பெரும்பான்மையானவர்கள் கொத்தடிமைகளாக உள்ளன, 50% தலித் குழந்தைகள் ஊட்டக் குறைபாட்டுடன்  உள்ளன, 12% தலித குழந்தைகள் 5 வயதைக்கூட எட்டுவதில்லை. இவை எல்லாம் இந்திய அரசின் புள்ளிவிபரகளே. இந்திய ஜனத்தொலையில் 27.5% மாகத் திகழும் தலித்துகள், ஆதிவாசிகள், பழங்குடிகளின் நிலை இதுவே. 15% சிறுபான்மையினரின் நிலைமையும் இதுவே. இது எப்படி இருக்க 10% வளர்ச்சி யாருடைய வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?? ஊடகங்கள் உருவாக்கும் போலியாஅன ஒளிரும் பிம்பங்களைப் பார்த்து கண்கள் குருடாய் திரிபவர்களுக்கு நாம் எங்கு சென்று சிகிச்சை அளிப்பது?

ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கபடும் நாடுகளில், நீதித்துறை தன் கடமையை செய்யத் தவறிய சமூகங்களில் என்ன நிகழ்ந்துள்ளது என்பது குறித்து உலக வரலாறும், சமகால நிகழ்வுகளும் நமக்கு எண்ணற்ற செய்திகளை, படிப்பினைகளை வழங்கிக் கொண்டேயிருக்கிறது. வரலாற்றின் நெடுகிலும் தொடர்ந்து நியாயம் மறுக்கபட்ட சமூகங்கள் கிளர்ந்து எழுந்ததை காண்கிறோம். அப்படியிருக்க இங்கு மட்டும் “அய்யா மனு போட்டுக் கொண்டேயிருங்கள்” என அறிவுரை கூறுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். அவர்கள் தங்களின் சொந்த நலன் பாதிக்கபடும் பட்சத்தில் இவ்வாறு அமைதியாக அறவழியில் மினு போட்டுக்கொண்டேதான் இருப்பார்களா? ஜனநாயகத்தின் அனைத்து குறைதீர்ப்புக் கருவிகளும் செயல் இழந்த பின்பு ஒரு குடிமை சமூகம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? கடந்த 20 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பூர்வகுடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து பெயர்த்தெறிய எண்ணற்ற தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன. அவர்களுக்கு வழங்கபட்ட தற்காலிக உதவிகள் எவ்வகையிலும் அவர்களின் வாழ்வு சார் பிரச்சனைகளை தீர்க்காது. பிரச்சனைகளை அதன்  வேர்களுக்கு சென்று களையாமல் மேம்போக்கான, தற்காலிக தீர்வுகள் எந்த வகையிலும் பயனளிப்பவை அல்ல. இந்த தேசத்தில் அதிகார வர்க்கத்தின் அலட்சியங்கள், முன்முடிவுகள் மற்றும் மநுவின் வன்மம் நிறைந்த உடும்புப் பிடியினால்தான் தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் உருவாகிறார்கள். இந்த கட்டுமானங்களின் வன்மத்தை நிர்மூலமாக்குவதுதான் இன்றைய செயல்பாட்டாளர்கள், போராளிகளின் இலக்காக இருக்க முடியும்.

இந்த சூழலில் பெரும் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் சமூகத்தின் மனதை மந்தமாக மாற்றி வருகின்றன. கல்வி கற்ற சமூகம்தான் ஆகச் சுயநலமான ஒரு பொறுப்பற்ற மந்தையாக மிச்ச சமூகத்தையும் நுகர்வு, மற்றும் ஜாதிய வைரஸ் கிருமிகளைப் பரப்பி சீரழித்து வருகின்றது. அரசு வேலை, வாழ்க்கை உத்திரவாதங்கள், தொழில், வங்கி இருப்பு, சொந்த ஐந்து செண்டு வீடு, என வாழும் இவர்கள் தான் தங்கள் வீட்டு திண்ணைகளிலும் சொந்த கிராமத்திலும் ஜாதியத்தின் பெரும் நாற்றாங்காலை செல்லமாய் வளர்த்து வருகிறார்கள். சொந்த ஜாதிஜ்ஜுள் கச்சிதமாய் குடும்ப உறவுகள் மற்றும் திருமணம், ஊர்க் களரிகளில் சென்று ஜாதியச் செருக்கைக் காட்ட பணத்தை சூறைவிடுவது,  மகனுக்குக் காதுகுத்து - மகளுக்கு சடங்கு நடத்துவது, ஜாதிய திருமணத் தகவல் மையம் நடத்துவது, ஆவணி ஆவிட்டத்துக்திற்கு பூநூல் மாற்றுவது என, சீரழிவுகள் கச்சிதமாகச் செய்து ஜாதிய சங்கிலியை அறுபடாமல் பாதுகாத்துவிட்டு, அதையெல்லாம் அவ்வளவு எளிதாகத் தகர்த்துவிட முடியாது என அறிவியல் பூர்வமாக விளக்கமும் அளிப்பர். அவர்களின் ஜாதியும், பூநூலும், குடும்பமும் சொந்த விஷயமாம் - அதில் அவரது நண்பர்கள், சக ஊழியர்கள், இயக்கத்தார் என எவரும் நுழைய இயலாது. இதில் கூத்து “ ஜாதி ஒழிந்தால் தான் சார் எல்லாம் சரியாகும்” என அசந்தால் பொது இடத்தில் அவர் பெரும் உரையே நிகழ்த்தக்கூடும். குறிக்கோள் அற்ற ஒரு கல்விமுறையால் விழைந்த பேராபத்து இது.

லஞ்ச ஒழிப்பு, திவிரவாத ஒழிப்பு என்றால் மைக் செட் கட்டிக் கொண்டு வரும் இயக்கங்களின் கூட்டமைப்புகள், ஜாதி ஒழிப்பு - ஜாதிய நீக்கம் என்றால் “ சாரி சார் ராங் கால்” என உரையாடலை பட்டெனத் துண்டித்துக் கொள்கிறார்கள். முற்போக்கு இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் கூட ஜாதி ஒழிப்பை தங்கள் இயக்க அளவில் கூட விவாதப் பொருளாக மாற்றில் தங்களின் கைகளில் எடுக்காததுதான் இந்த நூற்றாண்டின் பெரும் சோகம். ஜாதி ஒழிப்பு போன்ற ஒன்றை கட்டாயமாக நாம் நம்மிலிருந்து தான் தொடங்க வேண்டும். இந்திய சூழலில் ஜாதி தான் இங்கு சமூகத்தை பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரும் ஆற்றல் அதனை முறியடிக்காமல் இங்கு அனைவருக்குமான ஒரு அமைதியுடன் கூடிய சமதையான வாழ்வு, சுகவாழ்வு சாத்தியமில்லை. அத் திசையில் நாம் ஒரு பெரும் தோழமையை உருவாக்க முனைய வேண்டும்.