Sunday, 18 August 2013

டக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு!


வம்பர் 1-ம் தேதி... தீபாவ​ளியன்று மதியம் நண்பர் ஒருவரைக் காண சூளைமேடு போயிருந்தோம். நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் சமயம்... திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து வெடிச் சத்தம் கேட்டது! பட்டாசு சத்தம் மாதிரி தோன்றவில்லை... பின்? துப்பாக்கிச் சத்தமா? உடனே -
சத்தம் வந்த திசை நோக்கி நண்பருடன் ஓடினோம். எதிரே எக்கச்சக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தனர். சிலரை நிறுத்தி விவரம் கேட்க முயன்றோம். நம்மைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்...
பார்வையை ஓட்டினோம்... நம் வயிற்றை லேசாகக் கலக்கியது. காரணம் - நமக்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரண்டு பேர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டபடி, வெறித்தனமாகக் கூச்சலிட்டபடி ஓடிவந்து கொண்டிருந்தனர்... பளிச் என்று பயம் நம்மைச் சூழ்ந்துகொண்டது.
அதற்குள், ''ஏய்... அரசைச் சுட்டுட்​டாங்கடா...'' என்றும், அதைத் தொடர்ந்து, ''அந்தப் பசங்களை கல்லை எடுத்து எறிஞ்சு கொல்லுங்கடா...'' என்றும் குரல்கள்! ஒரு கும்பலைப் பின்தொடர்ந்து சென்றோம். அங்கே -மார்பின் வலது பக்கம் குண்டு பாய்ந்து, அதில் இருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கீழே கிடந்தார்.
இடது தோளில் இருந்து சதை சற்றுப் பிய்ந்து தொங்க, 'ஓ’ வென அலறித் துடித்தபடி இன்னொருவர்...
குண்டு பாய்ந்து கீழே புரண்டு புரண்டு கதறியபடி மற்றொருவர்...
தரை எல்லாம் ரத்தம்! கும்பலின் கோபம் மிக அதிகமானது...
''அந்தக் கத்தியை குட்றா...''
''என்கிட்ட அருவாமணைதான் இருக்கு...'', ''பெட்ரோல் வாங்கியாந்து அவனுகளை வீட்டோட எரிச்சிடலாம்...'' - இப்படி ஆவேசமாக பல்வேறு கருத்துகள்(?) பரிமாறிக்​கொள்ளப்பட்டன.
நம் நண்பரிடம், ''பக்கத்துலே ஏதாச்சும் ஆட்டோ கொண்டாங்க... அப்படியே பக்கத்து ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்லிட்டு வாங்க...'' என்றோம். நண்பர் சென்றார். அருகில் நின்ற ஒருவரின் லுங்கியைப் பிடுங்கி, மார்பில் குண்டு பாய்ந்தவரின் காயத்தின் மேல் நாம் இறுகக் கட்டினோம். நம் கைக்குட்டையை எடுத்து, கையில் காயம் பட்ட மற்றொரு நபருக்கு 'பாண்டேஜாக்கினோம்’.
இதற்குள் நிறையக் கூட்டம் சேர்ந்தது. அதில் ஒரு சாரார். ''அவர்களை ஒரு கை பார்ப்போம்...'' என்று கூவியபடி 'அந்தக் கொலையாளிகளின்’ வீட்டை நோக்கி ஓடினர். பலரின் கைகளில் அரிவாள், அரிவாள்மணை, மண்ணெண்ணெய் டின் இத்யாதிகள்...
இதற்குள் நண்பர் ஒரு ஆட்டோவுடன் வர, அடிபட்ட மூவர் மற்றும் துணைக்கு இரண்டு பேர் ஆகியோரை வண்டியில் (திணித்து) ஏற்றி அனுப்பினோம்.
பின்னர், மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்​கொண்டு இருந்த 'வீட்டை’ நோக்கி நாமும் ஓடினோம்.
அந்தக் 'கொலையாளி​கள்’ சுமார் 7 பேர், வீட்டின் மொட்டை மாடியில் நின்று சரமாரியாக சுட்டுக்கொண்டு இருக்க...
கும்பல், குண்டு படாதவாறு மறைந்து நின்று கற்களை, மண்ணெண்ணெய் டின்னை கிழித்து தீக்குச்சிகளை எறிய... இரண்டு போலீஸ் வேன்கள் படுவேகமாக வந்து நின்றன.
நாமும் பின்வாங்கி ஒரு கடைக்குள் சென்று கன்ட்ரோல் ரூம் மற்றும் கமிஷனர், ஐ.ஜி. இல்லங்களுக்கு போன் மூலம் தொடர்புகொண்டோம்.
திரும்பி வந்து பார்த்தபோது ஐ.ஜி-யான ஸ்ரீபால் வந்திருந்தார். போலீஸாரை கண்டதும் கும்பல், ''அவங்க எல்லாத்தையும் சுட்டுத் தள்ளுங்க...'' என்றபடி கோபத்துடன் கத்தியது.
பதிலுக்கு ஸ்ரீபால், ''முதல்லே நீங்கள்லாம் அமைதியா இந்தப் பக்கம் வாங்க... ப்ளீஸ்...'' என்றார் குரலை உயர்த்தி. கும்பல் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நகர்ந்தது. பிறகு ஸ்ரீபால் ஒரு இன்ஸ்பெக்டரை (மோகன்சிங்) அருகே அழைத்து ஏதோ பேசியபடி அந்த வீட்டை நெருங்கினார். மாடி இளைஞர்கள் சுடுவதை நிறுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, ''நான் ஐ.ஜி... ஸ்ரீபால்!'' என்றார். மாடியில் இருந்து, ''நாங்கள் அறிவோம்...'' என்று பதில் வந்தது!
''நான் சொல்றதைக் கேளுங்க... ஆயுதங்களைப் போட்டுட்டுக் கீழே இறங்கி வாங்க...'' என்றார் ஸ்ரீபால்.
கொலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்​கொண்டனர். தொடர்ந்து ஆயுதங்களுடன் கைகளை மேலே தூக்கியபடி இறங்கினர். பார்த்துக்கொண்டு இருந்த நமக்கு 'திக், திக்...’ அச்சமயம் - வெகுவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய கமிஷனர் தேவாரம், நேராக ஸ்ரீபால் அருகே போய் நின்றார். பிறகு அவசரமாகப் போய் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தார். தொடர்ந்து, ''நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்...'' என்று தேவாரம் சொன்னார்.
'போராளிகள்’ தலையசைத்துக் (சம்மதம்?) கொண்டனர்.
துப்பாக்கிக்காரர்கள் வேனில் ஏற்றப்பட்​டனர்.
ஐ.ஜி-யுடன் ஒட்டிக்கொண்ட நாம், அந்த வீட்டுக்குள் சென்றோம். உள்ளே ஏராளமான ரிவால்​வர்கள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் சகட்டுமேனிக்குக் கிடந்தன. சீட்டு விளையாடிக்கொண்டு இருந்ததற்கான அடையாள​மாகச் சீட்டுகள், ரூபாய் நோட்டுக்கள்...
கிடைத்த தகவல்கள்: கடந்த ஒரு வருடமாகவே இந்த வீட்டில் வசித்து வருகின்றனர் ஈழப் போராளிகளில் ஒரு பிரிவினரான ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) சேர்ந்த சிலர்.
அந்தத் தெரு இளைஞர்கள் நம்மிடம், ''தினசரி குடித்துவிட்டு தெருவில் போகும் பெண்களைக் கிண்டலடிப்பது. அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று 'பழம் குடுப்பா...’ என்று கேட்டு வாங்கி விட்டு, 'ஈழம் கிடைச்சதும் காசு தர்றோம்...’ என்று மிரட்டிவிட்டுச் செல்வதும்... வாடிக்கை நிகழ்ச்சி கள்!'' என்றனர்.
உச்சகட்டமாக துப்பாக்கியால் சுட்டது தீபாவளி​அன்று நடந்துவிட்டது.
வழக்கம்போல், ரோட்டை மறித்தவாறு நடந்து வந்துகொண்டு இருந்தார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பைச் சேர்ந்த நால்வர். எதிரே அரிஜனக் காலனியைச் சேர்ந்த ஓர் இளைஞர் வர, நால்வரில் ஒருவர் இளைஞரிடம் வம்பு செய்தார். இளைஞர், 'உங்களை உள்ளே விட்டதே தப்புடா...'' என்றிருக்கிறார். அவ்வளவுதான், இளைஞரை அடித்து துவம்சம் செய்துவிட்டனர் நால்வர். கூட்டம் ஆட்சேபித்து இருக்கிறது.
நால்வரில் ஒருவர் ஓடிப்போய் தன்(?) வீட்டுக்குள் நுழைந்து சகாக்கள் இருவருடனும் கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்து சுட ஆரம்பிக்க...
மார்பில் குண்டு பாய்ந்து இறந்தே போய்விட்ட திருநாவுக்கரசு, கையில் குண்டு பாய்ந்து துடித்த குருமூர்த்தி, தோள்பக்கம் பாதிக்கப்பட்ட ரவி... - இந்த சூழ்நிலையில்தான் நம் பிரவேசம்!
- அபராஜித்
இந்த வழக்கின் இன்றைய நிலவரம் இதுதான்!

துப்பாக்கியால் திருநாவுக்கரசுவைச் சுட்டதாகப் பதிவான வழக்கின் முக்கியக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவர். இந்த துப்பாக்கிசூட்டுடன் ஒரு சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க முயற்சித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு முதல் இவர் தமிழ்நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டவர். அவர் அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுடன் டெல்லிக்கு வந்து நம்நாட்டு ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொண்டார். ''தேடப்படும் குற்றவாளியான அவரை ஏன் கைது செய்யவில்லை?'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். ''இந்தியாவுக்கு அரசு சுற்றுப்பயணமாக வந்ததால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. அவர் மந்திரியாக இருப்பதால் தூதரக ரீதியான சட்டப்பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அதை மீறி அவரைக் கைது செய்ய முடியாது!'' என்று மத்திய வெளிவிவகாரத் துறையின் சார்புச் செயலாளர் சுஹல் மாதா பிரபுல்ல சந்திர சர்மா சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி : ஜூனியர் விகடன், 28-09-2011

No comments:

Post a Comment