Saturday, 2 June 2012

பரதவர்களின் நாட்டார் மருத்துவம்


ஆ. சிவசுப்பிரமணியன்

பரதவர்களிடம் வழங்கும் மருத்துவத்தினையும் நாம் (1) இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம் ,(2) மந்திர-சமய மருத்துவம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம் என்பது கடல் விலங்குகள், தாவரங்கள், கரையிலுள்ள விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அவர்களின் மந்திர-சமய மருத்துவம் என்பது அவர்கள் பின்புற்றும் கத்தோலிக்க சமயத்தின் புனிதர்கள், தேவாலயங்கள், துறவிகளின் கல்லறைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவம்:
பரதவர்களின் இயற்கை சார்ந்த நாட்டார் மருத்துவத்தினை 1) உட்கொள்ளும் மருந்து, 2) மேற்பூச்சி மருந்து என இரண்டாகப் பகுக்கலாம். அவர்கள் பயன்படுத்தும் உட்கொள்ளும் மருந்துகளில் சில வருமாறு.
உடல் பலத்திற்கு: காரல் மீன் அவித்து சாறு எடுத்துக் குடித்தல் (காரல் மீன் – வளர்ச்சியுறத சிறு மீன்)
குறுக்கு நோவு: ஆமைக்கறி உண்டல்
இரத்தமூலம்: ஆமை ரத்தம், ஆமை வார் சூப் குடித்தல்
தாய்ப்பால் பெருக: பிள்ளைச்சுறா அவித்து உண்ணல்.
சோகைக்கு: காக்கையைச் சுட்டு உண்ணுதல்
நிர் பிரியாமல் இருந்தால்: வெள்ளெலியை உரலில் இட்டு இடித்துப் பின்னர் அதனை அவித்து உண்ணுதல்
இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர், சிறுமியருக்கு: இரைமீன் உண்டல்(மற்றொரு மீனால் விழுங்கப்பட்டு ஒரளவு செறித்தமீன் இரைமீனாகும்).

வெளிப்புச்சு மருந்து
குழந்தைகளுக்கு வரும் கரப்பானுக்கு: வெள்ளாட்டிற்கு வேப்பங்குழையை மட்டும்போட்டு சில நாட்கள் வளர்த்து, பின்னர் அதனை வெட்டி அதன் இரப்பையின் உள்ளே உள்ளதை எடுத்து கரப்பான் மேல் வைத்துக் கட்டுதல்.
பரு உடைய: 1) ஓணானைக் கொன்று அதன் இரப்பையை அப்படியே வைத்துக் கட்டுதல். 2) பன்றிக் கொழுப்பை வைத்துக் கட்டுதல்.
விட்டில் கொசுத் தொல்லையை நீக்க: கடற்பாசியை நெருப்பிலிட்டு புகை போடுதல்.


பரதவர்களின் நாட்டார் ம்ருத்துவத்தில் இடம் பெற்றுள்ள சில மந்திர மருத்துவ முறைகளைக் காண்போம்.


புனித நீர் – புனித எண்ணெய் மருத்துவம்
தண்ணீர், எண்ணெய் ஆகியனவற்றைத் தெய்வங்கள் மற்றும் புனிதர்களின் உருவங்களுடனும் இறந்த குருக்களின் கல்லறைகளுடனும் தொடர்புபடுத்துவதன் மூலம் அவற்றிற்கு மந்திர ஆற்றல் (Magic Power) எற்படுவதாக இவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு மந்திர ஆற்றல் பெற்ற தண்ணீர் , எண்ணெய் ஆகியனவற்றை நோய் தீர்க்கும் ம்ருந்தாகப் ப்யன்படுத்தும் வழக்கம் பரதவர்களிடம் உள்ளது.

கத்தோலிக்கத் தேவாலயங்களில் சில ஆலயங்கள் புண்ணியத்தலங்களாக( பசலிகா – Basilica) எற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தலங்களில் உள்ள மேரியன்னை அல்லது புனிதரின் உருவத்தின் பாதங்களில் சிறிதளவு நீரை ஊற்றிக்கழுவி அதனைப்ப்டித்து வைத்து நோய்யாளிகளுக்குக் கொடுத்தால் நோய் தீரும் என்பது இவர்களிடையே நிலவும் ஒரு பரவலான நம்பிக்கையாகும்.

ஈஸ்டர் இரவில் ( புனித வெள்ளியை அடுத்து வரும் சனிக்கிழமை முடிந்து புனித ஞாயிறு பிறக்கும் நள்ளிரவில்) தூத்துக்குடியிலுள்ள பனியமாதா தேவாலயத்தில் மெழுகுதிரிகள் எற்றிவைக்கப்படும். தேவாலயத்திற்கு வரும் பக்தர்களும் வீட்டிலிருந்து மெழுகுதிரிகளையேற்றிக் கொண்டு வருவார்கள். பூசையின் ஒரு கட்டத்தில் எல்லா மெழுகுதிரிகளும் நீர் நிரம்பிய ஓர் அண்டாவில் தோய்த்து அணைக்கப்படும். இந்த அண்டாவிலுள்ள நீரானது புனித நீராகக் கருதப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் வாழும் வீட்டில் ஏதோ ஒரு குறைப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். இதனைப் போக்கமேற்கூறிய புனித நீரையெடுத்து வந்து வீட்டின் உட்பகுதியில் தெளிக்கிறார்கள். சிலர் பாதிரியாரை (Parish Priest) அழைத்து வந்து சமய மந்திரங்களைக் கூறி அதனைத் தெளிக்கச் செய்கிறார்கள். இதன் முலம் குடும்பத்தினர் நோய்வாய்ப்படாமல் இருப்பார்கள் என்பது இவர்கள் நம்பிக்கையாகும்.

சிலர் தேவாலயத்தின் ஆல்டர் பகுதியில் எரியும் எண்ணெயினை எடுத்து வந்து பாட்டில்களில் பத்திரபடுத்திக் கொள்கிறார்கள். தலைவலி மற்றும் உடலில் எற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயினைத் தடவினால் வலி போய்விடும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். மேல் பூச்சாகமட்டுமின்றி ஒன்றிரண்டு சொட்டுக்களை உள்மருந்தாகவும் சில நேரங்களில் பயன்படுத்துவதுமுண்டு.

கி.பி 1885ல் காலமான ரொண்டோ என்ற போர்ச்சுக்கீசிய கத்தோலிக்கத் துறவியின் கல்லறை தூத்துக்குடி நகரிலுள்ள ஒர்னாலிஸ் மேல்னிலைப் பள்ளியின் எல்லைக்குள் உள்ளது. இவர் இப்பகுதியிலுள்ள பனிமயமாதா தேவாலயத்தில் பங்குக்குருவாக இருந்து இப்பகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கியுள்ளார். இவருடைய கல்லறைக் கல்வெட்டு கல்லறையின் மேற்புறத்தில் அமைந்துள்ளது.

கருவுற்று குறைப்பிரசவமான பெண்கள் மீண்டும் குறைப்பிரசவம் ஆகிவிடக் கூடாது ஏன்பதற்காக இக்கல்லறைக்கு வந்து கல்லறைக் கல்வெட்டுக் கல்லின்மீது நல்லெண்ணையை ஊற்றிப் பின்னர் அதனை வழித்தெடுத்து மீண்டும் பாட்டிலில் அல்லது பாத்திரத்தில் ஊற்றிக் கொள்கிறார்கள். இந்த எண்ணெயைத் தினமும் வயிற்றின் மீது தடவி வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். சுகப்பிரசவம் வேண்டுமென்ற விருப்பத்தினடிப்படையில் குறைப்பிறசவத்திற்காளாகாத கருவுற்ற பெண்ளும் இதுபோல் செய்வதுமுண்டு.

புன்னைக்காயல் என்னும் கடற்கரைக் கிராம்த்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கற்சிலுவையொன்று சிறு மண்டபத்தினுள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதனைத் திருமணச்சிலுவை என்று பரதவர்கள் அழைக்கிறார்கள். இச்சிலுவையின் உச்சியில் பால் ஊற்றி கீழெ வழியும் பாலை மீண்டும் பாத்திரத்தில் சேகரித்துக்கொள்கிறார்கள். இதனை நோய்ள்ளவர்களுக்குப் பருகுக் கொடுத்தால் நோய் குணமாகும் என்பது இவரிகளிடையே நிலவும் நம்பிக்கையாகும். பாலுக்குப் பதிலாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயினைப் பயன்படித்துவதுமுண்டு. இந்த எண்ணெயினை உடலில் தோன்றும் கட்டிகள், காயங்களின் மீதும், வலிதோன்றும் பகுதியிலும் பூசினால் குணமேற்படும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்.

இதே ஊரில் 1889ல் பிறந்த ஜான்சிங்கராயர்லோபோ என்பவர் தூத்துக்குடிக் கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள பல தேவாலயங்களில் பங்கு குருவாகப் பனி புரிந்து 13-4-1972ல் காலமானார். இவரது உடல் புன்னைக்காயலில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் பிரதான நுழைவு வாயிலின் முற்றத்தில் தென்புறமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது கல்லறை எதுவும் கட்டப்படாமல் கோவில் முற்றத்தின் தளத்தின் மீதே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறைக் கல்வெட்டு அமைந்துள்ளது.

பெரும்பாலும் செவ்வாய்க்கிழமையன்று நல்லெண்ணெய், தேங்காயொண்ணேய், பால் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை இக்கல்லறைக் கல்வெட்டின் மீது ஊற்றி அதனைத் துணியால் பிழிந்தெடுத்துச் சேகரித்து நோய்தீர்க்கும் உள் மருந்தகவும் வெளி மருந்தகவும் பயன்படுத்துகிறார்கள். இது எழுபதுகளில் புதிதாகத் தோன்றிய நோய் தீர்க்கும் கல்லறையாகும்.

பதினாறாம் நூற்றாண்டில் பரதவர்களிடயே சமயப்பணி புரிந்து வந்த ஹென்றிகு ஹென்றிக்ஸ் எனும் சபைத் துறவி கி.பி 1600 பிப்ரவரியில் புன்னைக்காயலில் காலமானார், அவரது உடல் தூத்துக்குடி பனிமயமாதாக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. ”அவரது கல்லறைக்குக் கூட்டம் கூட்டமாக வந்து புனித அந்தோணியார் மற்றும் புனிதர்களிடம் உதவி வேண்டுதல் போல வெண்டுதல் செய்தனர். அவரது கல்லறையைச் சுற்றிலும் மெழுகுதிரிகளையேற்றினார்” என்று 1601 ஆம் ஆண்டு சேசுசபைக் கடிதம் குறிப்பிடுகிறது. [ ச இராசமாணிக்கம் 1967 :]. எனவே 17ஆம் நூற்றாண்டின் கல்லறைகளில் சென்று வேண்டுதல் செய்யும் பழக்கம் பரதவர்களிடம் தோன்றிவிட்டது எனலாம்.

புனிதர்கள் மற்றும் சமயக் குருக்கள் மூலம் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்வதாகவே இச்செயல்கள் அமைகின்றன மற்றபடி, கல்லறைகளை வழிப்படுவதாகக் கருதக்கூடாது என்று கத்தோலிக்க சமயக் குருக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நடைமுறையில் இக்கல்லறைகள் வழிப்பாட்டுக்குரியனவாகவும், மந்திர ஆற்றல் உடையனவாகவும் பெரும்பாலான பரதவர்களால் கருதப்ப்டுகின்றன.



தொற்று வியாதிகளுக்கான சிகிச்சை
காலரா, அம்மை போன்ற கொடிய தொற்று நோய்கள் பரதவர்கள் வாழும் பகுதிகளில் பரவினால் செபஸ்தியார் என்னும் புனிதரின் உருவத்தை வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். (இந்துக்களிடம் மாரியம்மன் வசிக்கும் இடத்தைப் பரதவர்களிடம் புனித செபஸ்தியார் வகிக்கிறார்.) இவ்வாறு ஊர்வலமாகச் சப்பரத்தில் எடுத்து வரும்பொழுது உப்பையும், மிளகையும் கலந்து வீதிகளில் தூவுவதுமுண்டு.

டைஃபாய்டு, அம்மை, காலரா, மஞ்சட்காமாலை போன்ற தொற்று நோய்களுக்கு சிறுவர் சிறுமியர் ஆளாகினால் புனித அந்தோணியார், புனித ராயப்பர்(பீட்டர்) ஆகிய புனிதர்களில் ஒருவரை நினைத்து நோய் குணமானால் தலையை மொட்டையடிப்பதாகவும் காதில் வாளி அணிவதாகவும் வேண்டிக் கொள்ளுகிறார்கள். (தொற்று நொயின்றி வேறுபல உடற்பிணிகளுக்கும் சிலர் இவ்வாறு வேண்டிக் கொள்வதுமுண்டு.)

இவ்வேண்டுதலின்படி மொட்டையடிப்பதனை “பட்டம் வைத்தல்” என்றழைக்கிறார்கள். இது இந்துக்கள் மொட்டை அடித்துக் கொள்ளும் முறையிலிருந்து மாறுபட்டதாகும். நெற்றிப்பகுதிக்குச் சற்று மேலே ஒரு கயிற்றினைத் தலையைச் சுற்றி வட்ட வடிவில் கட்டியதைப் போல முடியானது ஒரே சீராகக் கத்தரித்து விடப்பட்டு எஞ்சிய தலைப்பகுதி முழுவதும் மொட்டையடிக்கப்பட்டிருக்கும். அந்தோணியாரை வேண்டிக் கொண்டவர்களால் இம்முறை பின்பற்றப்படும். இது “அந்தோணியார் பட்டம்” என்றழைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கடற்கரைச் சிற்றூர்களில் வாழும் பரதவர்கள் நாகர்கோவிலில் கோட்டாறு என்னும் பகுதியிலுள்ள புனித சவேரியார் தேவாலயத்திற்குச் சென்று பட்டம் வைத்துக் கொள்வதும் உண்டு.

அந்தோணியார் பட்டத்தை விடச் சற்று அகலமாக வட்ட வடிவில் கத்தரிக்கப் பட்ட பகுதி காட்சி தரும். இப்பட்டத்தைச் “சவேரியார் பட்டம்” என்றழைக்கிறார்கள்.

இராயப்பரை வேண்டிக் கொண்டவர்கள் தலையின் பின்பகுதியில் வட்டமாக மொட்டையடித்துக் கொல்கிறார்கள். இது “குருபட்டம்” என்றழைக்கப்படும்.

எனவே சிறுவர் சிறுமியரின் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கும் முறையிலிருந்தே அவர்கள் எந்த புனிதரை வேண்டி முடி காணிக்கை அளித்துள்ளார்கள் என்பதனை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
முடி காணிக்கையுடன் காதில் வாளி அணிந்து கொள்வது “வாளிபூரூதல்” எனப்படுகிறது. வாளிபூரூவதில் முடிகாணிக்கையில் காணப்படும் வேறுபாடு கிடையாது. “இராயப்பர் வாளி” என்றெ வாளி அழைக்கப்படுகிறது, வேண்டிக் கொண்ட காலத்திற்கேற்ப இது சிறுவர் சிறுமியரின் காதில் பல ஆண்டுகள் கிடக்கும்.


*ஒத்த மந்திர சிகிச்சை ( Homeopathie Magic Cure) *

கை கால் போன்ற உறுப்புக்களில் காயம் அல்லது முறிவு எற்பட்டாலோ கண், மூக்கு, காது போன்ற உறுப்புக்களில் நோய் எதுவும் எற்ப்பட்டாலோ வெள்ளி அல்லது பித்தளையால் கண் – கால் – கை போன்ற உறுப்புக்களைச் செய்து காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். நோய் குணமானால் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோவிலிலோ, புளியம்பட்டி, உவரி ஆகிய ஊர்களில் உள்ள புனித அந்தோணியார் கோவிலிலோ இவைகளைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

பிள்ளை வரம் வேண்டுபவர்களும் தங்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கப் பெற்றால் வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட சிறு தொட்டில்களைக் காணிக்கையாகத் தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைப்பேறு வாய்க்கப் பெற்றால் மேற்கூறிய கோவில்களில் தங்கள் காணிக்கையைச் செலுத்துகிறார்கள்.


தொத்து மந்திர சிகிச்சை ( Contagious Magic Cure)

பிறருடைய தீயபார்வையினால் உடல் நலக்குறைவு ஏற்ப்ட்டதாகக் கருதினால் அதற்குப் பின்வரும் முறையில் பரதவர்களிடம் பரிகாரம் நிகழும்.

உப்பு , மிளகாய் வற்றல் ஆகியவைகளை ஒரு துணியில் சிறு பொட்டலமாகக் கட்டிக் கொள்கிறாகள். விசுவாச மந்திரத்தைக் கூறிய வாறே அப்பொட்டலமாகக் கட்டிக் கொள்கிறார்கள். விசுவாச மந்திரத்தை கூறியவாறே அப்பொட்டலத்தால் நோயுற்றவரின் தலையிலிருந்து கால்வரை மூன்றுமுறை தடவுகிறார்கள். பின்னர் அப்பொட்டலத்தால் நோயுற்றவரின் தலையை மும்முறை சுற்றி அதனை எரியும் நெருப்பில் போடுகிறார்கள். தீய கண்பார்வயுடையவர்கள் என்று சந்தேக துக்காளானவர்கள் காலடி மண்ணில் சிறிதளவுயெடித்து வந்து உப்பு-மிளகாய் வற்றலுடன் சேர்த்து பொட்டலத்தில் கட்டுவதுமுண்டு.

இச்செயல் தீமையை மாற்றுவித்தல் (Transference of Evil) என்று பிரேசர் குறிப்பிடும் முறையைச் சார்ந்ததாகும்.

மத்திய செலபிஸிலுள்ள தேர்ரடியாஸ் என்ற மலைஜாதியினர் யாருக்காவது தோல் வீக்கம் வந்து விட்டால், ஓர் உறுதியான கம்பை எடுத்து, உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தின் மீதுவைத்து அழுத்திக் கொண்டு “இதற்குள் செல்” என்று சொல்வான். இவ்வாறு செய்யும் போது அந்த வீக்கம் அவனது உடலிருந்து நீங்கி கம்புக்கு மாறிவிடுவதாக அவன் நம்புகிறான்.

இதுபோலவே நோய்ற்றவரின் உடலில் உப்பு மிளகாய் வற்றல் ஆகியவைகளைக் கொண்ட துணிப்பொட்டலத்தை உடலில் தேய்ப்பது நோய்க்குக் காரணமான தீய பார்வையினை அதில் மாற்றுவதாக அமைகிறது. துணிப் பொட்டலத்திலுள்ள உப்பின் கரிப்புத் தன்மையும் மிளகாய் வற்றலின் காரமும் அதனை வருந்துகின்றன. துணிப் பொட்டலத்தை நெருப்பில் போடுவது தீய பார்வையின் விளைவை அடியோடு எரித்து அழிப்பதாக அமைகிறது. மேலும் உப்பும் மிளகாயும் நெருப்பில் ஓசையுடன் வெடித்து அழிவதன் அடையாளமாக நம்பப்படுகிறது.

பரதவர்களும் காலடி மண்ணையெடித்து நெருப்பில் போடுவதன் மூலம் அதற்குரியவணைத் தண்டிக்கிறார்கள். இத்தகைய பழக்கம் இனக்குழு வாழ்வைக் ( Tribal life) கடந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்பும் பரதவைகளிடமும் தமிழகத்தில் வாழும் பல சாதியினரிடமும் இன்றும் வழக்கிலுள்ளது.




No comments:

Post a Comment