முதல் கோவிலும் மீனவர்களின் பங்களிப்புகளும்.
..........................................................................................................
1532 -ம் ஆண்டிலிருந்தே காயல் பரவர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவத் துவங்கினார்கள். ஈடுபாடின்றி மதப்பற்றில் உறுதியற்ற நிலை நிலவியதால் இவர்களை கத்தோலிக்க நெறியில் உறுதிப்படுத்துவதற்காகவும், மேலும் கத்தோலிக்க மதத்தை மீனவ மக்களிடம் பரப்பவும் தூத்துக்குடிக்கு அனுப்பட்டவர்தான் பிரான்சிஸ் சவேரியார் அவர் 1542 -ம் ஆண்டு வருவதற்கு முன்பே தூத்துக்குடியில் முதல் கோவில் உருவாகி விட்டது.
’’ பரவ மக்களுக்கு திருமுழுக்கு அளித்த கொச்சி பங்குக் குரு பேதுரு கொன்சால்வஸ் அவர்களே தூத்துக்குடியில் முதல் கோவிலைக் கட்டினார். அதனை அவர் தன் பெயரைக் கொண்ட ‘’பேதுரு” என்ற பெயரைக் கொண்ட புனித இராயப்பருக்கே அர்ப்பணித்தார். இவரை மக்கள் (கொன்சால்வஸை) கட்டச்சாமி என்று அன்போடு அழைத்து வந்தனர். 1582-ல் ‘இரக்கத்தின் மாதா” என்ற ஆலையம் உருவான பின்னரும் புனித இராயப்பர் கோவில்தான் தூத்துக்குடி மக்கள் வழிபடும் கோவிலாக இருந்தது. சவேரியார் முத்துக்குளித்துறையில் தங்கியிருந்த போது கூட இந்த இராயப்பர் கோவிலில்தான் வழிபாடுகளை நடத்தி வந்தார் ‘’ (2)
முதலில் கொச்சி மறை மாநிலமும், தூத்துக்குடி திருச்சபையும் கோவாவில் உள்ள போர்ச்சுக்கீசிய இயேசு சபையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. 1557-ல் கோவா மறை மாநிலத்திலிருந்து பிரிந்து கொச்சி தனி மறைமாநிலமாக ஆன பிறகு கொச்சி மறை மாநிலத்தில் கீழ் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டது இக்காலக்கட்டத்தில் இயேசு சபைக்குருக்கள் பலரும் இங்கு வந்து பணி செய்தார்கள். அப்படி சவேரியாருக்குப் பின்னர் மூன்றாவது இயேசு சபைத் துறவியாக தூத்துக்குடிக்கு வந்தவர்தான் தமிழுக்கு பெரும் தொண்டு செய்த அன்றிக் அடிகளார். சேவை மனப்பான்மை கொண்ட ஆன்றிக் அடிகளாரின் பங்களிப்பு அக்காலத்திலேயே அளப்பரியதாக இருந்தது. போர்ச்சுக்கிசியர்கள் கோட்டை அமைத்திருந்த புன்னைக்காயலிலேயே தங்களின் முதல் நிர்வாகத் தலைமையகத்தை அமைத்துக் கொண்டனர். அங்கே அன்றிக் அடிகளாரின் முயற்சியில் முதல் மருத்துவமனையும், அச்சுக்கூடமும் , இறையியல் கல்லூரியும் உருவானது. ஆனால் புன்னைக்காயல் அடிக்கடி கயத்தாறு மன்னனாலும், மதுரை நாயக்கனாலும் தாக்கப்பட்டு வந்ததால் புன்னைக்காயலில் இருந்து தங்களின் தலைமையகத்தை தூத்துக்குடிக்கு மாற்றினார்கள் இயேசு சபையினர். 1579-ம் ஆண்டு இயேசு சபையினர் தூத்துக்குடியை தங்கள் தலைமை இடமாக தேர்ந்தெடுத்தனர். 1580 ம் ஆண்டில்தான் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாக ரீதியாக தூத்துக்குடியை தலைமையிடமாக தேர்ந்தெடுத்தனர். பரவர்கள் புன்னைக்காயலில் இருந்து தூத்துக்குடிக்கு மாறிய போர்ச்சுக்கீசியருக்கும், இயேசு சபையினருக்கும் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.
தூத்துக்குடியில் இயேசு சபையினர் அமைத்த இல்லத்திற்கு பரவர்கள் ஆண்டு தோறும் 2,000 குருசாதோக்களை (3) வழங்கி வந்தனர். முத்துக்குளித்துறையின் வருமானத்தைக் கொண்டே இயேசு சபை நடத்தப்பட்டது .கிறிஸ்தவ மத துறவிகளை உருவாக்கும் கல்விச்சாலை ஒன்று இதனுள் அமைக்கப்பட்டது அதை ‘சம்பவுல் கல்லூரி’ என்று வழங்கினார்கள். 1588 -ல் இந்த குருமடத்தைக் கட்டுவதற்கான முழு செலவுகளையும் பரவர்கள் ஏற்றுக் கொண்டனர்.சுமார் 30 உள்ளூர் மாணவர்கள் அப்போது குருத்துவக் கல்வியின் ஆரம்பக் கல்வி பயின்றனர். இவர்கள் மேற்படிப்பிற்காக கோவா செல்வார்கள். என இடியின் ரகசியம் நூலில் குறிப்பிடுகிறார் அருட் தந்தை வெ.வெனான்ஜியூஸ்.
போர்ச்சுக்கீசியர் வரும் போது கத்தோலிக்க மரபில் இயேசு சபையினர் மட்டுமல்லாது பிரான்சிஸ்கு சபையினரும், தொமினிக் சபையினரும் கூட மதப்பரப்பலுக்காக வந்தனர். ஆனால் தென் தமிழக கடலோரமான தூத்துக்குடியில் மதம் மாறிய கிறிஸ்தவ பரவர்களை கண்காணிக்கும் பொறுப்பை இயேசு சபையினரிடமே போர்ச்சுக்கல் மன்னார் ஒப்படைத்தார். இயேசு சபையினர் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பின்னர் பிரான்சிஸ்கு சபையினரும் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு 1595 -ல் கட்டப்பட்டிருந்த ‘தேவ அன்னை மடம்” அவர்களுக்கு தானமாக வழங்கப்பட அவர்கள் அங்கிருந்த படி மறைபரப்பில் ஈடுபட்டனர் . அவர்களும் தங்கள் பங்கிற்கு பெரியதோர் ஆலயத்தையும் மடத்தையும் அமைத்தனர். தூத்துக்குடி பரவர்களின் வருமானத்திலிருந்தே இந்த தொகைகள் வழங்கப்பட்டன.
முதல் மருத்துவமனை
...............................................
போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலாக குடியேறிய புன்னைக்காயலில் முதல் குருத்துவ தமிழ் கல்லூரியை கிபி 1578- லும், முதல் அச்சுக் கூடத்தை 1578-லும், முதல் வேதியர் பயிற்சி நிலையத்தை 1550 -லும் புன்னைக்காயலில் துவங்கினார்கள். தமிழின் அச்சுத் தந்தை என அனைவராலும் புகழப்படும் அன்றிக் அடிகளார் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த ஊர் புன்னைக்காயல்தான். அவர்தான் 1550 -ல் புன்னைக்காயலில் பரவரின் நிதியில் முதல் மருத்துவமனையை நிறுவினார். இது தொடர்பாக உரோமையிலுள்ள இயேசு சபை தலைமை இல்லத்திற்கு 1551- ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய மடலில் , ‘’முத்துக்குளித்துறையிலும் உள்நாட்டுப் பகுதியிலும் பிணியுற்ற ஏழை மக்களின் நலனுக்காக அண்மையில் புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம் இம்மருத்துவமனையானது இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்க புதுமையான ஒரு நிறுவனமாகும் இப்படிப் பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை இம்மருத்துவமனையானது நமது (இயேசு சபை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.’’ (4)
‘’இம்மருத்துவமனையில் சாதி மத வேறுபாடின்றி எல்லா பிணியுற்ற மக்களும் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.இங்கு விளங்கிய கிறிஸ்தவ பிறரன்பு பிற மத மக்களை மிகவும் கவர்ந்தது இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம் அதனால் கிறிஸ்தவ திருமறையை தங்களின் தாய் எனக் கருதினர் . பலர் தங்களின் மரணப்படுக்கையில் திரு நீராட்டுப் பெற்று இறந்தனர் (5) .16-அம் நூற்றாண்டில் புன்னைக்காயலில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை இந்தப் பகுதியின் அனைத்து சமூக மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக விளங்கியது. அங்கு பிணியுற்ற நோயாளிகளுக்கு இலவச உணவும், உடு துணிகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க முத்துக்குளி பரவர்களின் நிதியிலேயே கட்டப்பட்டதோடு அது செயல்பட்டதும் மக்களின் நிதியில்தான். வாரந்தோறும் மக்களுக்கு சிறப்பு வரிகளை விதித்து மருத்துவமனைக்கு நிதி சேர்த்தார் அன்றிக்ஸ் அடிகளார். 1560-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்துக்குளிப்பின் பின்னர் 2000 ரூபாய் நிதியை மருத்துவமனைக்கு மக்கள் வழங்கினார்கள். கடற்றுறையில் குற்றங்கள் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் தண்டத் தொகையும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் போர்ச்சுக்கீசிய படைவீரர்களும் இம்மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் போர்ச்சுக்கல் மன்னரின் நிதியில் வீரர்களுக்கான தனி மருத்துவமனை 1551- ல் புன்னைக்காயலில் உருவானது .பொது மக்களின் சேவைக்காகவும் . போர்ச்சுக்கீசிய படையினரின் சிகிச்சைக்காகவும் உருவாக்கப்பட்ட இரு மருத்துவமனைகளும், இயேசு சபை இல்லமும் 1553-ல் வடுகப்படைகளால் தாக்கியழிக்கப்பட்டன. அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், மீள உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் 1590 கள் வரை புன்னைக்காயலில் இயங்கிவந்நததாக குறிப்புகள் சொல்கின்றன. (6) ஆனாலும் 1579, 80 -களில் புன்னைக்காயலில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதை உணர்ந்த இயேசு சபையினர் தங்களின் தலைமையகத்தை தூத்துக்குடிக்கு மாற்ற புன்னைக்காயல் பொலிவிழந்து போனாது. ஆனாலும் அங்கு மருத்துவமனை இயங்கிக் கொண்டுதான் இருந்தது. வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்த அருட்தந்தை அன்றிக் அடிகளார் 1600-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் நாள் புன்னைக்காயலில் மறைந்த போது ஒட்டு மொத்த முத்துக்குளித்துறை பரவர்களும் கூடி அவரது உடலை ஏழு கடற்துறையைச் சார்ந்த பட்டங்கட்டிகளும் அலங்கரிக்கப்பட்ட ஏழு தோணிகளில் ராஜமரியாதையோடு எடுத்து வந்து தூத்துக்குடியில் புதைத்தனர்.
புன்னைக்காயலில் கட்டப்பட்ட முதல் மருத்துவமனையும், இயேசு சபை இல்லமும் கயத்தாறு மன்னானாலும், நாயக்க மன்னர்களாலும் சூறையாடி தீக்கிரையாக்கப்பட அவர்கள் இரண்டாவதாக 1567 -ல் மீண்டும் தூத்துக்குடியில் முதல் மருத்துவமனையை உருவாக்கினார்கள். முழுக்க முழுக்க இலவச மருத்துவமனையாக செயல்பட்ட இந்த மருத்துவமனை சாதி மதம் பார்க்காது சகல மக்களுக்கும் சேவை செய்து வந்தது. இந்த மருத்துவமனையும் முத்துக்குளித்துறை வருமானத்தைக் கொண்டே மக்கள் பணத்திலேயே கட்டப்பட்டது.ஏழைகளுக்கு உணவும் உடையும் வழங்கப்பட்டது. பின்னர் 1582 -ல் இரக்கத்தின்மாதா ஆலயத்திறப்பு விழாவின் போது பரதவ மக்கள் 200 குருசாதோக்களை இம்மருத்துவமனைக்கு வழங்கியதாக இயேசுசபைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மதம் மாறிய சுமார் ஐம்பது வருடங்களுக்குள் ஒட்டு மொத்த பரவ மக்களும் ரோமன் கத்தோலிக்க மதத்தினுள் ஐய்க்கியமாகிப் போயினர். முத்துக்குளித்தலில் கிடைக்கும் பெருமளவு வருமானம் போர்ச்சுக்கல் அரசுக்கும் , போர்ச்சுக்கல் ராணியின் காலணிக்கும், நாயக்க மன்னர்களுக்கும், கயத்தாறு மன்னனுக்கும், மூர்களுக்கும், பரவ சாதித் தலைவர்களுக்கும், வரியாகப் போக மீதியை அவர்கள் மறைப்பரப்பலில் ஈடுபட்ட சபைகளுக்கும், கோவிலுக்கும் கொட்டிக் கொடுத்தார்கள். போர்ச்சுக்கீசியர்கள் இந்த பரவர்களைச் சுரண்டும் உரிமைக்காக மதுரை நாயக்கர்களுக்கு இலவச முத்துக்களை அளித்தது போக இராமநாதபுரம் சேதுபதிக்கும் ஒவ்வொரு முத்துக்குளித்தலின் போதும் திறையாக சுமார் 60 இலவசக் கற்களை வழங்கி வந்தனர் (7) ஏனென்றால் நாயக்கர்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லா பகுதிகளும் இருந்தன. மதுரை நாயக்கர்கள் விஜயநகர மன்னர்களுக்கு திறை செலுத்துவோராகவும், மதுரை நாயக்கர்களுக்கு கயத்தாறு பாளையக்காரர்கள் திறை செலுத்துவோராகவும் இருந்தனர், இவர்களின் ஆதரவின்றி முத்துக்குளித்தல் தொழிலை செய்ய முடியாது என்பதால் முத்துக்களை திறையாக செலுத்தினார்கள் போர்ச்சுக்கீசியர்கள்.
1570 -ல் கடலோரத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது . இக்காலத்தில் கூட இயேசு சபையினரும் போர்ச்சுக்கீசியர்களும் மக்களிடம் இருந்து வரிகளைப் பெற்றுக் கொள்வதில் உறுதியாக நடது கொண்டனர். போர்ச்சுக்கீசியர்களின் அனுமதியின்றி முத்துக்குளிப்பவர்களையோ பரவர்களையோ சுதந்திரமாக எவரும் சந்திக்க இயலவில்லை என்பதை கால்டுவெல்லின் குறிப்பு ஒன்று நமக்கு உணர்த்துகிறது இவ்வாறு ‘’ 1563 - 1563 க்குப் பிறகு சீசர் பிரடெரிக் என்பவர் கடற்கரைக்கு வந்த போது முத்துக்குளிப்பவர்களைக்காண போர்ச்சுக்கீசிய அதிகாரிகளின் அனுமதியைப் பெறுகிறார்” என்கிறார் கால்டுவெல். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குள் போர்ச்சுக்கீசியர்களும் இயேசு சபையினரும் கரையோர மீனவர்களிடம் எந்த விதமான ஆதிக்கம் கொண்டிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள இது உதவுகிறது.
No comments:
Post a Comment