Thursday, 11 October 2012

இதுதானா சார் உங்க டக்கு???


செய்தி:- சுமார் 25,000 பேரின் உயிரைப் பலி கொண்ட அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் செயல் அதிகாரி வாரன் ஆண்டர்சனுக்கு இந்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்கள் அனைத்தும் முகவரி தவறு என திரும்பி வந்துள்ளன.

இந்திராகாந்தி முதல் மண்ணுமோகன்சிங் வரையிலான ஆட்சியாளர்கள் 28 வருடங்களாக 25000 அப்பாவி இந்தியர்களை கொன்ற அன்னிய சக்திகள் மீது எடுத்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது, தேசபக்தியில் உடம்பெல்லாம் செல்லரிச்.. மன்னிக்கவும் புல்லரிச்சு போயிடுது...

டிசம்பர் 2, 1984 போபாலில், மக்கள் இரவு உணவருந்திவிட்டு, எதிர்காலக் கனவுகளுடன் உறங்கச் சென்றார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்கு நேரப்போகும் பேராபத்தால் மீளா உறக்கத்தில் ஆழப்போகிறோம் என நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. நல்லிரவுக்கு அருகாமையில் கடுமையான இருமல் மற்றும் கண் எரிச்சல் எற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அடித்துக்கொண்டு வெளியேறினர். ஊரே அலறியடித்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஓர் விஷவாயு அருகிலிருந்த யூனியன் கார்பைடு கம்பெனியிலிருந்து கொல்ல வந்தது. பொழுது விடிந்தபோது விஷவாயு 5,000 உயிர்களைப் பலிகொண்டிருந்தது. அக்கொடிய வாயுவின் பெயர் மெதில் அய்சோ சயனைடு.

உலகின் மிகப் மோசமான தொழிற்சாலை விபத்தென உலகம் அலறியது. மொத்தத்தில் 25,000 பேர் இறந்தனர். இலட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சரிசெய்ய முடியாத அளவிற்கு சுற்றுசூழல் நாசம் செய்யப்பட்டது. விபத்திற்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும், இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதிமன்றங்கள் தங்களுக்கு விரைவில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் ஏற்பட்டது. நீதித்துறை இவ்வழக்கை மிகவும் தாமதமாக நடத்தியது. இறுதியில் 178 சாட்சிகளுடன் 30,000 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில் 26 ஆண்டுகள் காத்திருக்கும்படி செய்தார் நீதிபதி மோகன் திவாரி.

சூன் 7 அன்று அளித்திருக்கும் தீர்ப்பு பேரதிர்ச்சியை உண்டு பணர்ணிவிட்டது. கொடிய குற்றங்களுக்கு குறைந்த தண்டனைகள் வழங்கியது மக்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. 25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. நம்முடைய ஊர்களில் உணர்ச்சி வசப்பட்டு செய்யப்படும் கொலைக்கு கூட ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தங்களின் இலாபவெறியால், அலட்சியத்தால் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்ற நிறுவன முதலாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை. ஏனெனில் மக்களைவிட பன்னாட்டு முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பது உறுதியாகிறது. இதில் தண்டனை பெற்றவர்களுக்கு உடனே பிணை கிடைத்ததால் அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்பதிலிருந்து, இந்நாட்டில் நீதி, நியாயம் என்ற ஏதாவது இருக்கிறதா என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.

போபால் பேரழிவினைப் பற்றி சரியான புரிதல் எற்பட நாம் அந்நிறுவனத்தைப் பற்றியும், அதன் செயல்படும் தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட், 1969-இல் போபாலில் 67 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை தொடங்கியது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் செயற்கை உரங்களைத் தயாரித்து விவசாய விளை நிலங்களை, மலடான நிலைக்கு மாற்றிய நிறுவனங்களில் இது முக்கியமானது. 1979-இலிருந்து மிகவும் நச்சுத்தன்மையுடைய வாயுவான மெதில் அய்சோ சயனைடைத் தயாரித்தது. பல தொழில்நுட்பக் கோளாறுகள் அத்தொழிற்சாலையில் இருந்தாகப் பலர் கூறியும், அந்நிறுவனம் அதைக் கண்டுகொள்ளவில்லை. 1983 மார்ச் 4-இல் அதாவது அக்கொடிய சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சமூக அமைப்பு தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்று அந்நிறுவனத்தின் செயல் மேலாளர் முகுந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஏப்ரல் 28-இல் அவர் அனைத்து பாதுகாப்பும் போதுமானதாக உள்ளதென பதில் தந்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டே அக்கொடிய விபத்து நடைபெற்றது.

அக்கோர தினத்தன்று, 610 என்ற எண் கொண்ட தொட்டியில் மட்டும் அளவுக்கு அதிகமாக 40 டன் மெதில் அய்சோ சயனைடு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சயனைடின் கொதிநிலை 31.1 டிகிரி. எனவே, இதை குளிர் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். இந்த வேதிப்பொருளுக்கு மணம், நிறம் கிடையாது. எனவே, இது பரவினால் தரியவும் வாய்ப்பில்லை. அவ்வாயு வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால், போபாலில் இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரிகளாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வாயு கசிந்து அன்று வீசிய பலமான காற்றினால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வாயு புகுந்தது. முதலில் கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை மட்டுமே உணரமுடிந்தது. முதலில் யாரோ மிளகாய் மூட்டையை எரிக்கிறார்கள் என்றே மக்கள் நினைத்துள்ளனர். அதற்குள் தன் கொடிய வேலையை அவ்வாயு செய்யத் தெடங்கியது. பொழுது புலர்வதற்குள் மக்கள் குடியிருப்பை சுடுகாடாக மாற்றிச் சென்றது. போபால் பேரழிவின் அடையாளமாக இன்று கருதப்படும் அந்த கண்கள் பொங்கிய நிலையில் புதையுண்ட குழந்தையின் பெயர் இரகு ராய்.

விபத்தின் தாக்கம் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்த ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விஷவாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாகக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 21 குழந்தைகள் குறையுடன் பிறந்ததாகவும், 27 குழந்தைகள் இறந்தே பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆலையானது, விபத்து ஏற்பட்ட பிறகு அரசால் மூடப்பட்டது. 1994-இல் நடத்தப்பட்ட பொது ஆய்வின்போது, 44,000 கிலோ நச்சு தாரும், 35,000 கிலோ அல்பா நெப்தாலுமர், திறந்த வெளியில் டிரம்மிலும், கோனிப்பையிலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 18,000 டன் நச்சுக்கழிவுகள் அங்கிருக்கும் விஷகுளத்தின் அடியில் புதையுண்டுள்ளது. 23,000 டன் வேதிப்பொருட்கள் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலை தொடங்கி நாற்பது ஆண்டுகளாக அவை மழையால் பெரும்பகுதி மண்ணிலும், நிலத்தடி நீரிலும் கலந்து தொடர்ந்து இன்றும் மக்களுக்குக் கெடுதலை எற்படுத்தி வருகின்றது.

மத்திய அரசு 2006 அக்டோபர் 26-இல் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த உறுதிமொழி அறிக்கையில் மொத்தம் 5,58,125 பேர் விஷவாயு விபத்தின் மூலம் காயம்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 92.5% அதாவது 5,16,406 பேர் மிகவும் சிறிய காயம்பட்டதாகத் தரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்புகளும், குடல் பாதிப்புகளும் சிறு காயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது. 38,478 பேர் (6.8%) தற்காலிக அரை-இயலாமைக்கு ஆளாயினர் என்றும், வெறும் 0.7 சதவீதத்தினர், அதாவது 3,241 பேர் மட்டுமே முழு இயலாமைக்கு ஆளாயினர் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிப்புகளின் அளவைக் குறைத்துக் கூறுமாறு மருத்துவர்களை அரசு கடுமையாக அழுத்தம் கொடுத்தாக, போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

போபால் பேரழிவின்போது அதன் தலைமை இயக்குநர் ஆண்டர்சன் டிசம்பர் 7 அன்று கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் நேர் நிற்பேன் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு பின்னர்தான் 25,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டான். அன்றைய போபால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அரசுக் காரில் ஆண்டர்சனை தப்புவிக்க விமானம் நிலையம் வரை சென்று வழியனுப்பினர். இதை ஒரு பிரான்சு ஊடகம் படம் எடுத்த பிறகே வெளியுலகத்திற்குத் தரிய வந்தது. பின்னர் ஆண்டர்சன் சகல அரசு மரியாதையுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றான். அப்பொழுதே இந்தியாவை ஆண்ட காங்கிரசு அரசு, கொலைகாரன் ஆண்டர்சனுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தது. எதிர்கட்சிகளும் எதிப்பதுபோல் மக்களிடம் பாசாங்கு செய்துகொண்டே பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலனாகவே இருக்க விரும்புகின்றன. இப்போது வீரவேசம் போடும் பா.ஜ.க. தன் ஆட்சிக்காலத்தில் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வந்து தண்டனை வாங்கித்தர விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆண்டர்சனுடைய வழக்கறிஞர் சார்ந்திருக்கும் சட்டக்குழுமத்தின் மற்றொரு வழக்கறிஞரிடம் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வரமுடியுமா என வல்லுனர் கருத்து கேட்டது. அதற்கு அந்த வழக்கறிஞர் முடியாது என கருத்து கூறியவுடன் ஆண்டர்சன் வழக்கைத் தூக்கி குப்பையில் வீசியது பா.ஜ.க.

மக்களிடம் போபால் பிரச்சனை பெரிய அளவில் வெடித்த பின்பு இப்பொழுது அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டர்சனை இந்தியா கொணர்டுவந்து தண்டிக்க வேண்டுமென முழக்கம் போடுகின்றனர். இது சரியானதுதான். ஆனால் இந்த விசயத்தில் எந்தக் கட்சிகளும் மனச்சாட்சியுடன் செயல்படவில்லை. ஏற்கனவே ஆண்டர்சனுக்கு 90 வயது ஆகிவிட்டது. அமெரிக்கா இன்னும் அவனை அனுப்பமாட்டேன் என அடாவடி செய்கிறது. அப்படியே இந்திய மக்களின் கோபத்தின் காரணமாக கொண்டுவந்தாலும் வழக்கு விசாரணை என்ற பெயரில் காலந்தள்ளி அவனாகவே வாழ்க்கை இன்பங்களை அனுபவித்துவிட்டு இறந்தபிறகு வழக்கை முடித்துக் கொள்வது தான் இந்த அரசியல் கட்சிகளின் திட்டம்.

இதுவரை போபால் விபத்தில் நம் நாட்டின் அரசியல் கட்சிகள் எவ்வாறு நம் நாட்டுக்கும் நம் நாட்டு மக்களுக்கும் பச்சை துரோகம் செய்தனர் என்பதை பற்றி பார்த்தோம். அவர்கள் அதோடு நின்றுவிடுகிறார்களா என்ன? இன்னும் பல வழிகளில் பன்னாட்டு, உள்நாட்டு பணக்காரர்களின் பணப்பைகளை நிறைப்பதற்காக ஏழை மக்களை பலிகடாக்களாக ஆக்குவதற்கு சுயநலங் கொண்ட அரசியல் கட்சிகள் தயாராய் உள்ளன. போபாலைப் போன்று மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கும் சில உதாரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நம் நாடெங்கிலும் இரசாயனத் தொழிற்சாலைகள் பல ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. அவற்றில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் கடும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் பலவும் முறையான அனுமதி இல்லாமலேயே இயங்கி வருகின்றன. நம் தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மாவட்டங்களில் கொடிய நச்சுத்தன்மை ஏற்படுத்தும் நிறுவனங்கள் பல உள்ளன. குறிப்பாக, கடலூரில் சிப்காட் தொழிற் பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளது. தொழிற்பேட்டைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-இல் இங்கு ஆய்வு செய்த மத்திய அரசின் ‘நீரி சூழல் நிறுவனம்” இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக சமுதாய சுற்றுச்சுழல் கண்காணிப்புக் குழு எடுத்த 12 மாதிரி ஆய்வுளில் அங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில் 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை எனத் தரிய வந்துள்ளது. அதேபோல் டால்மியாபுரம் சிமெண்டு ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில் மூளையைப் பாதிக்கும் காரியம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருக்கின்றன.

இதெல்லாம் போதாதென்று அணுக்கழிவுகளால் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வந்துவிட்டது இந்திய அமரிக்க ’123′ ஒப்பந்தம். இவ்வொப்பந்தப்படி, அமரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் கட்டும் தனியார் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக இந்தியாவில் பல புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டத் திட்டமிட்டுள்ளன. மக்களின் நலன்களை துச்சமாக மதிக்கும் அரசுகள், தனியார் பகாசுர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாயுள்ளது. அணுவிபத்தின்போது அந்நிய நிறுவனங்களுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாமல் அவர்களைக் காப்பாற்றுவதற்கே ‘அணுசக்தி பொறுப்பான்மைச் சட்டம்’ என்ற சட்ட மசோதாவைக் கொண்டுவந்து, தங்களின் எஐமான விசுவாசத்தைக் காட்டுகிறது இந்திய அரசு. இச்சட்டப்படி அணுவிபத்து ஏற்படும் போது, இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அணு உலையை இயக்குபவர் ரூ.500 கோடி இழப்பீடு கொடுத்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. அணு விபத்தின்போது இழப்பீடுக்கான உச்சவரம்பை இந்தியா ரூ.500 கோடி என நிர்ணயம் செய்திருப்பது பைத்தியக்காரத்தனமானது. அமொpக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்தியாவைப் போன்று எந்த உச்சவரம்பையும் வைத்துக் கொள்ளவில்லை. மேலும் இந்த 500 கோடி இழப்பீடு என்பது மிக மிகக் குறைவு. இந்தியச் சட்டத்திற்கு நேர்மாறாக, ஜப்பானில் ஒரு சட்டம் உள்ளது. அதன்படி, அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அதற்குக் காரணமான நிறுவனம் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்தத் தொகை ரூ.130 பில்லியன் கோடி. இது இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ‘உயர்ந்தபட்ச இழப்பீட்டு தொகையை” விட பல ஆயிரம் மடங்கு அதிகம். அணு விபத்தென்பது காலங்கடந்து பாதிப்புகள் எற்படுத்தும். ஆனால், இச்சட்டபடி விபத்து ஏற்பட்ட பிறகு 10 ஆண்டுகள் கழித்து எற்படும் எந்த பாதிப்பிற்கும் நிறுவனம் பொறுப்பாகாது (விதி 18). இதன்மூலம் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் மனிதர்களின் இழப்பீடு கோரும் உரிமையைப் பறிக்கிறது இச்சட்டம். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். தீர்ப்பை எதிர்த்து எந்த இந்திய சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யமுடியாது (விதி 35). பல்வேறு எதிர்ப்புகளால் இச்சட்ட மசோதா இன்று சட்டமாகாமல் இருக்கிறது. ஆனால் மன்மோகன்-சிதம்பரம் கும்பல் இதை எப்படியாவது அடுத்ததேர்தலுக்குள் சட்டமாக்கிவிட முயற்சிக்கும்.

போபால் தீர்ப்பைப் பார்த்து விழிப்படைந்து தமிழகத்தில் கூடங்குளம் அணு உலை பணிக்கு மக்களின் எதிர்ப்புக்குரல் வலுவடைந்துள்ளது. மக்களின் எதிர்ப்பு குரல், தெரு நாடகங்களாகவும், பொதுக் கூட்டங்களாகவும் கிராமந்தோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடங்குளத்தில், விரிவாக்கமாக 3 புதிய அணு உலைகள் கட்ட அரசு திட்டமிட்டுவருவது மக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏதாவது விபத்து நடந்தால் பக்கத்திலுள்ள 6 மாவட்டங்களின் மக்களை வெளியேற்றும் அவசரத் திட்டம் பற்றி ஏதும் அம்மாவட்ட ஆட்சியர்கள் கேள்விபட்டதாகக்கூட அறிய முடியவில்லை. இதுதான் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் மீது வைத்துள்ள பற்று.

போதும் இதுவரை நாம் காத்து வந்த மௌனம். போபால் பேரழிவிலிருந்து நாம் பெற்ற படிப்பினை என்ன? 1984-இல் ஒரு ஆண்டர்சன் மக்களை கொன்றான். இப்போது பல ஆயிரக்கணக்கான ஆண்டர்சன்கள் தம் இலாப வெறிக்காக நம்மைக் கொல்ல அலைந்து கொன்டிருக்கிறார்கள். இது செயல்படுவதற்கான நேரம்.

No comments:

Post a Comment