Monday, 12 March 2012

மட்டக்களப்பில் முக்குவச் சட்டம்

இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக “மட்டக்களப்புச் சமூகம்” என்று குறிப்பிடப்படுவதாகும்.

மட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.
வரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.
இங்குள்ள “குடி” முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு "குடி", "பகுதி" என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று “அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று” அன்று. இதனால் மட்டக்களப்பில், “முக்குவர்” நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை” (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.
மட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.
மத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், “ஆகம” முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.
மட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை – மட்டக்களப்பு – மூதூர் – திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).
மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.
இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.
இங்கு தமிழ் – முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையான வாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.
இப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.
திருகோணமலை
மட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.
திருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.
மட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. -இனி ஒரு.

No comments:

Post a Comment