Wednesday, 30 November 2011

முக்குவர் - தமிழ்நாடு - கேரளா - ஈழம்


பேரா. சிவத்தம்பி, இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே தலித் மக்கள் நீங்கலாக மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்து எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாத ஒரே இந்து சமூகமென்றால் அது மலையாளிகள் தான் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரிடையே - குறைந்தபட்சம் மட்டக்களப்புத் தமிழர்களிடையே - மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்தத் தயக்கங்கள் அறவே இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் முக்குவர்கள் ஈழத்தமிழருக்கும் கேரளத்துக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கிறார்கள். முக்குளித்தல், முங்குதல் போன்றத் தமிழ் சொற்களிலிருந்து தான் முக்குவர் என்ற பெயர் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும் மீன்பிடித்தலையே தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்த/வரும் இவர்கள் பழங்காலத்தில் முக்குளிப்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (ஆனால் முக்குவர்களை மட்டக்களப்புப் பகுதியைத் தோற்றுவித்த மூத்தக்குடிகளாகச் சித்தரிக்கும் "மட்டக்களப்பு மான்மியம்" எனும் பழைய நூல் அவர்களை 'முற்குகர்' என்று விளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அயோத்தியிலிருந்து படையெடுத்து வந்ததாகச் சொல்லி இராமாயணத்தோடு முடிச்சு போடப் படாதபாடு படுகிறது. சாதிப்பெயரை விருப்பப்படித் திரித்துப் பெருமை பேசுவது - எ.கா. சாணார் -> சான்றோர் - எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.)

இலங்கையின் வரலாற்றில் முக்குவர்களைப் பற்றிய ஏராளமானக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்களப்புப் பகுதிகளில் முக்குவத் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளக் கரையோரத்திலிருந்துப் படையெடுத்து வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று 'முக்கர ஹட்டண' என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது. இதன் காரணமாக அப்போதைய சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்துக் கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாக அந்த ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. இப்படிக் புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் 'கரவே' என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனது மொழி அடையாளத்தை இழப்பது எத்தனை எளிது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அப்பகுதியில் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வாழும் கரையர்களில் பலர் தங்கள் தமிழ் அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கின்றனர். சரளமாக சிங்களம் பேசும் இவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்களுக்குள் இலக்கணம் சிதைந்த ஒருவிதத் தமிழில் (எ.கா. நான் போகிறேன் என்பதற்கு நான் போறா) தான் பேசிக்கொள்கிறார்கள்.

முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின் இஸ்லாமியர்களின் துணையுடன் திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்று கருதப்படுகிறது. முக்குவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த நெருக்கமான உறவு சுவாரசியமானது மட்டுமல்ல கேரளத்துடன் ஈழத்துக்கு உள்ள தொடர்பைக் காட்டுவதாகவும் இருக்கிறது. கேரளக் கரையோரத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே வணிகம் செய்து வந்த அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் மீனவ (முக்குவ) பெண்களுக்கும் இடையேயான திருமண/சம்பந்த உறவுகளை உள்ளூர் அரசர்கள் ஊக்குவித்ததால் நாளடைவில் முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். (ஆனால் இன்றைய மாப்பிளாக்கள் இந்த வரலாற்றை மறைத்து மாப்பிளா என்பது 'அம்மா பிள்ளை' என்பதிலிருந்து வந்தது என்ற மொக்கையான விளக்கத்தை விக்கிப்பீடியா வரைக் கொண்டு போயிருக்கிறார்கள்.) மாப்பிளா என்பது ஒரு தனி சமூகமாக உருவான பின்னும் கூட அந்த சமூக ஆண்கள் முக்குவப் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அப்படி பிறக்கும் ஆண் குழந்தைகளில் சிலர் மாப்பிளா சமூகத்திடம் கையளிக்கப்படும் முறை நிலவியது என்று தர்ஸ்ட்டன் தன்னுடைய புகழ்பெற்ற Castes and Tribes of South India நூலில் குறிப்பிடுகிறார். அரபுகளிடம் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக முக்குவர்களில் பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி மாப்பிளா சமூகத்தில் இணைந்தனர். இதை வைத்து நோக்கும் போது இலங்கையின் கிழக்குப் பகுதியில் தாங்கள் தமிழர்கள் அல்ல என்றும் அரபு வம்சாவழியினர் என்றும் சொல்லிக் கொள்ளும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் வரலாறும் இதுபோன்றதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேரளத்திலிருந்து முக்குவர்களுடன் இஸ்லாமைப் பின்பற்றும் மாப்பிளாக்கள் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கேரளத்திலிருந்து இலங்கையில் அதிக அளவில் குடியேறிய மக்கள் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது மொழி மற்றும் பண்பாடு குறித்து சிலவற்றை விளங்கிக்கொள்ள உதவுகிறது. முன்னர் குறிப்பிட்ட பேரா. கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரையில் முக்குவர்கள் வாழும் கிழக்குப்பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேற்றுமைகளாக சிலவற்றை சொல்கிறார். மட்டக்களப்பு இந்துக்களின் மதச்சடங்குகள் ஆகம விதிகளைப் பின்பற்றாததாகவும் பார்ப்பனர்களின் தாக்கம் இல்லாததாகவும் இருப்பதாகவும் அங்கு முருகன் கோயில்களே அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும் யாழ்ப்பாணத்தில் சிறுதெய்வ வழிபாடு என்ற நிலையில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் உள்ள கண்ணகி அம்மன், திரௌபதி அம்மன் வழிபாடுகளுக்கு மட்டக்களப்பில் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார். இவற்றின் மூலமும் மாட்டிறைச்சி உண்ணுதல் போன்ற பழக்கங்களின் மூலமும் இப்பகுதியில் குடியேறியவர்கள் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் பார்ப்பனிய சடங்குகளின் தாக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள் என்பது தெளிவாகிறது.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கீசியர்களும் அவர்களுக்குப் பின் வந்த மற்ற ஐரோப்பியர்களும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களை ஒரு தவறானப் புரிதலின் காரணமாக மலபார்கள் என்றே அழைத்தனர். (மலபார் என்பது கேரளத்தைக் குறிக்கும் சொல்.) போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கேரளத்திலிருந்து மக்கள் இலங்கையில் குடியேறியதற்கு வலுவான சான்றுகள் இருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் கேரளக் கரையோரமும் இலங்கை கடற்கரைப்பகுதிகளும் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்தக் காலத்தில் அவற்றிடையே கடல் வணிகமும், குடியேற்றங்களும், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். மலையாள மொழியில் ஐரோப்பியர் வருகைக்குப் பின் புகுந்ததாகக் கருதப்படும் பல சொற்கள் ஈழத்தமிழிலும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டாக மலையாளத்தில் உள்ள கசேர(நாற்காலி), தோக்கு(துப்பாக்கி), குசினி(சமையலறை) ஆகிய சொற்கள் ஈழத்தமிழில் முறையே கதிரை, துவக்கு, குசினி என்று வழங்குகின்றன.

*****

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கேரளத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர் என்றால் இலங்கையில் ஏன் மலையாளம் பேசப்படவில்லை? மலையாள மொழியில் சமஸ்கிருத சொற்கள் மிக அதிக அளவில் கலந்திருக்கும் போது ஈழத்தமிழில் ஏன் சமஸ்கிருதக் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது? இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் முக்கியமானவை.

சமூகங்களில் பிறமொழி கலப்பும் தாய்மொழி அழிப்பும் மேலிருந்துக் கீழாகவே நடைபெறும் என்பதற்கு உலக வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைப் பார்க்கலாம். தால்ஸ்தாயின் 'போரும் அமைதியும்' படிக்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் அடித்தட்டு மக்கள் யாவரும் ரஷ்ய மொழி பேசிக்கொண்டிருக்க ரஷ்ய மேட்டுக்குடியினர் தங்களுக்குள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தமிங்கிலத்தின் வேர்களை ஆராய்ந்தாலும் இந்தக் கருத்து உண்மைதான் என்பது புலப்படும். கேரளத்திலும் இதுதான் நடந்தது.

கேரளத்தில் (சேர நாட்டில்) சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வரைத் தமிழே பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருந்த நிலையில் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்துக் குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் சமூகத்தில் முதன்மைப் பெற்றதால் தமிழுடன் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாகக் கலக்கும் மணிப்பிரவாள நடை தோன்றி நாளடைவில் அது மலையாளமாக உருமாறியது. ஆனால் மணிப்பிரவாளமும் மலையாளமும் 'உயர்'சாதியினரின் மொழியாகவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசுகளில் ஆட்சிமொழியாகவும் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் தமிழ் மொழியின் வட்டார வழக்குகளையே தொடர்ந்துப் பேசி வந்தனர். தீண்டாமை என்பது 'காணாமை'யாக பரிமாண வளர்ச்சி அடையும் அளவுக்கு இங்கே சாதி அமைப்பு இறுக்கமடைந்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு மலையாளம் பேசிய 'உயர்'சாதியினருடன் நேரடி தொடர்புகள் இல்லாததாலும், கல்வி மறுக்கப்பட்டதாலும் அவர்கள் மலையாளிகளாக மாறுவது அண்மைக்காலம் வரை நிகழவில்லை. இன்றும் கூட தனி சமூகமாக வாழும் கேரளப் பழங்குடியினரின் மொழி மலையாளத்தை விட்டு விலகியதாகவும் சமஸ்கிருதக் கலப்பற்றதாகவும் இருக்கிறது.

கேரளத்தில் கடந்த எண்பது ஆண்டுகளில் அனைவருக்கும் (மலையாள வழி) கல்வி என்ற நிலை ஏற்பட்டு சாதிகளிடையே ஊடாடல் அதிகரித்த பிறகே தமிழை மிகவும் ஒத்திருக்கும் பேச்சுவழக்குகளைக் கொண்டிருந்த பின்தங்கிய சமூகங்கள் செம்மையான மலையாளம் பேசத் தொடங்கினர். பல நூற்றாண்டுகளாக திருவிதாங்கூர் அரசில் இடம்பெற்றிருந்தக் குமரி மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக இருந்த நாயர்கள் மலையாளம் பேசுபவர்களாக இருக்க பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த நாடார்கள், மீனவர்கள், தலித்துக்கள் ஆகியோர் தமிழையே பேசிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளத்துடன் தொடர்ந்து இருந்திருந்தால் இம்மக்கள் அனைவருமே தற்போது முழு மலையாளிகளாக மாறி இருப்பர் என்பது உறுதி. நானும் இதைத் தமிழில் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.
கேரளத்திலும் இலங்கையிலும் தற்போது வாழும் ஒரே சாதியான முக்குவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இவர்களிடையே மதமாற்றத்தை மேற்கொண்ட போர்த்துக்கீசிய/இஸ்பானிய பாதிரிகள் அதற்கு தமிழ் மொழியையேப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கேரளத்தின் தென்பகுதியில் வாழ்ந்த முக்குவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை குமரிமாவட்டத்தில் பேசப்படுவது போன்ற தமிழையே பேசிவந்தனர். அவர்களிடையே சில குடும்பங்களை நான் நேரடியாக அறிவேன். வீடுகளுக்குப் போனால் வயதானவர்கள் சரளமானத் தமிழில் பேசுவார்கள். இளையவர்களுக்கு தமிழ் புரியும் என்றாலும் பேசவராது. தகழியின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்ற செம்மீன் திரைப்படம் கேரள முக்குவர்களின் வாழ்க்கையைப் பற்றியது. முக்கியப் பாத்திரங்களின் பெயர்களிலிருந்தே (கருத்தம்மா, பழனி) அவர்களது தமிழ் மரபு விளங்கும். இப்படத்தில் வரும் பாடல்கள் - குறிப்பாக பெண்ணாளே, பெண்ணாளே என்னும் பாடல் - மிகவும் புகழ்பெற்ற ஒன்று. திருமணத்தின் போது மணப்பெண்ணை நோக்கி மற்றப் பெண்கள் பாடும் இந்த பாடல் கடலுக்குப் போகும் மீனவனின் மனைவி நெறி தவறினால் கடலம்மா அவனைக் கொண்டு போய்விடுவாள் என்ற மீனவர்களது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. (பாடலில் வரும் அரயன்/அரயத்தி ஆகிய சொற்கள் முக்குவரில் ஒரு பிரிவினைக் குறிப்பவை. படிஞ்ஞாறு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் 'படு ஞாயிறு' என்னும் பழந்தமிழ் சொல்லின் திரிபு -jegath

12 comments:

  1. அருமையான கட்டுரை

    தோழமையுடன் அந்தோணி

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை

    ReplyDelete
  3. முக்குவரும் கரையரும் ஒரே சாதியாக இருக்கவாய்ப்புண்டு.பட்டினக்கரையார் பள்ளரென்றால் முக்குவரும் கரையரும் மள்ளர்களே

    ReplyDelete
    Replies
    1. சேர சோழ பாண்டிய மன்னர்கள் எல்லாம் மள்ளர்கள்னு சொன்னீங்க.. இப்போ கரையரும் முக்குவரும் மள்ளர்னு சொல்றீங்க.. பேசாம மனுச பய முழுக்க மள்ளர் தான்னு மனிதநேயம் பேசிட்டு போகலாமே..

      Delete
    2. அப்படி அல்ல முக்குவர் உயர்சாதியினரே

      Delete
  4. அரையன் அரையத்தி ஆந்திர வடுகராக இருக்க வாய்ப்பிருக்கிறது தமிழககத்தை தெலுங்கர்கள் விஜய நகர பேரரசாகவும் நாயக்க அரசாகவும் ஆளுகையில் அவர்களுடன் வந்தவர்களா இருக்க வாய்ப்பதிகம் முக்குவர்கள் பெரும்பாலும் நாயக்கர் தலைமைகளையே தமிழக அரசியலில் பின்பற்றுகின்றனர்!

    ReplyDelete
    Replies
    1. ர்ந்த ஆதாரத்தை கொன்டு அப்படி சொல்வீர்கள்?
      இப்பொது முக்குவ இளைஞர்கள் பெரும்பாலும் நாம் தமிழரை பின்பற்றுகிறார்கள. அதனால அவர்கள் தமிழ் குடிகள்தான் என்று மாற்றி சொல்வீர்களா?

      Delete
  5. முக்குவர்கள் தமிழர்கள் இல்லையா நான் முக்குவன் ஈழம்

    ReplyDelete
    Replies
    1. எந்த இடம்

      Delete
  6. மாட்டு புண்ட முக்குவர் என்பவர்கள் கலிங்க குடி மற்றும் உளையப்பா குடி மற்றும் படையாட்சி குடி கலிங்க குடியினர் அன்றைய கலிங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் உளையப்பா குடியினர் கலிங்க இளவரசி உலகநாச்சி வம்சாவளியை சேர்ந்தவர்கள் படையாட்சி குடியினருக்கு சரியான விளக்கம் இல்லை.இந்த மூன்று குடியினருமே முக்குகர் எனப்படுவோர்.

    ReplyDelete
    Replies
    1. இது மாட்டு புண்ட முக்குவர்கள் அல்லது முற்குகர் பற்றிய பதிவல்ல, மீனவ முக்குவர் குறித்த பதிவாகும்

      Delete